
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது. கடந்த வருடம் 2024 டி20 உலகக் கோப்பையையும் அவருடைய தலைமையில் இந்தியா வென்று சாதனை படைத்தது. அதனால் எம்எஸ் தோனிக்கு பின் ஒன்றுக்கும் மேற்பட்ட ஐசிசி கோப்பைகளை வென்ற இந்திய கேப்டன் என்ற சாதனையையும் ரோகித் படைத்தார்.
ஐபிஎல் தொடரில் தோனிக்கு முன்பாகவே 5 கோப்பைகளை வென்ற ரோஹித் சர்மா வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார். அதனால் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற அவரது தலைமையில் இந்தியா 2022 டி20 உலகக் கோப்பையில் செமி ஃபைனலில் தோல்வியை சந்தித்தது. அப்போது சொந்த சாதனைகளைப் பற்றி கவலைப்படாமல் எதிரணியை அடித்து நொறுக்க வேண்டும் என்ற அணுகுமுறையை ரோகித் கையில் எடுத்தார்.
அந்த அணுகுமுறையை வைத்து 2023 உலகக் கோப்பையில் சொல்லி அடித்த அவரது தலைமையில் இந்தியா 10 தொடர்ச்சியான வெற்றிகளுடன் ஃபைனல் வரை சென்றது. தற்போது 2024 டி20 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பைகளை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் கபில் தேவ், தோனி போல ரோஹித் சர்மா தனது வழியில் இந்திய கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
அதாவது 1983 உலகக் கோப்பையை வென்ற கபில் தேவ் இந்தியாவில் கிரிக்கெட்டை ஆழமாக வேரூன்ற வைத்தார். 2007 டி20 உலகக் கோப்பை, 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் கோப்பைகளை வென்ற தோனி இந்திய அணியால் தொடர்ந்து வெற்றிகளை குவிக்க முடியும் என்ற மாற்றத்தைக் கொண்டு வந்தார். தற்போது ரோகித் சுயநலமின்றி விளையாடும் மரபை இந்திய கிரிக்கெட்டில் உருவாக்கியுள்ளதாக கார்த்திக் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ரோகித் சர்மா ஒரு மிகச்சிறந்த கேப்டன் என்பதில் சந்தேகமில்லை. ரோஹித், தோனி, கபில் தேவ் ஆகிய ஒவ்வொருவரும் இந்திய கிரிக்கெட்டில் ஒரு தலைமுறை மாற்றத்தையும், மனநிலையில் முன்னேற்றத்தையும் குறித்தனர். தனது ஓய்வு பற்றி ரோகித் சர்மா வெளிப்படையாக பேசியது அவர் எந்தளவுக்கு தெளிவான நபர் என்பதைக் குறிக்கிறது”
இதையும் படிங்க: இதை செய்ஞ்சா மட்டும் போதும்.. பும்ரா காயத்தில் இருந்து தப்பலாம் – மெக்ராத் கொடுத்த அட்வைஸ்
“தனது ஓய்வு பற்றி அவர் மிகவும் ஜாலியாக பேசினார். அதே சமயம் எனது ஓய்வு பற்றி சீக்கிரம் கேட்காதீர்கள் அதை உணரும் போது நானே அறிவிப்பேன் என்ற செய்தியையும் அவர் அனைவரிடமும் கொடுத்துள்ளார்” எனக் கூறினார். இதைத்தொடர்ந்து ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா மும்பைக்காக சாதாரண வீரராக விளையாடியுள்ளார்.