தமிழகத்தைச் சேர்ந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளரான டி நடராஜன் சேலம் சின்னப்பம்பட்டியில் இருந்து மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு டி.என்.பி.எல் தொடரில் இடம்பிடித்து தனது அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி அதன் பிறகு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடினார். ஐபிஎல் தொடரில் அவரது அசத்தலான செயல்பாடு காரணமாக இந்திய அணிக்கு தேர்வான அவர் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணிக்காக அறிமுகமாகினார்.
அப்படி மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடிய நடராஜன் அதன் பிறகு காயம் காரணமாக மீண்டும் இந்திய அணியில் இடம் பெற முடியாமல் தவித்து வருகிறார். ஆனாலும் இன்றளவும் ஐபிஎல் தொடரில் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் அவர் தன்னை போலவே கடினப்பட்டு முன்னேற நினைக்கும் கிராமப்புற வீரர்களுக்காக சேலத்தில் தனது பெயரில் ஒரு புதிய கிரிக்கெட் மைதானத்தை கடந்த ஆண்டு கட்டத் தொடங்கினார்.
தற்போது அந்த மைதானத்தின் முழு கட்டமைப்பும் முடிவடைந்த பிறகு அந்த மைதானத்தின் திறப்பு விழாவானது ஜூன் 23-ஆம் தேதி நிகழும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி நடராஜன் கட்டி முடித்துள்ள இந்த புதிய கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைக்க இந்திய அணியின் முன்னணி வீரரான தினேஷ் கார்த்திக் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார்.
அந்த வகையில் இன்று கோலாகலமாக நடைபெற்ற இந்த கிரிக்கெட் மைதான துவக்க விழாவில் தினேஷ் கார்த்திக் உடன் இணைந்து நடராஜன் தனது கனவு மைதானத்தை அவரது கைகளாலே திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக நடராஜரின் தாய் தந்தை முன்னிலையில் இந்த மைதானம் திறக்கப்பட்ட வேளையில் இந்த நிகழ்வில் தமிழக கிரிக்கெட் வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, விஜய் ஷங்கர், சாய் கிஷோர் ஆகியோர் பங்கேற்றனர்.
அதேபோன்று நடிகர்கள் யோகி பாபு, புகழ் உள்ளிட்ட பிரபலங்களும் கலந்து கொண்டனர். மேலும் இந்த விழாவில் தமிழக கிரிக்கெட் வாரிய தலைவர் சிகாமணி, செயலாளர் பழனி மற்றும் சிஎஸ்கே அணியின் சி.இ.ஓ விஸ்வநாதன் என பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க : வீடியோ : ஒரே ஓவரில் 5 முரட்டுதனமான சிக்ஸர்கள் – உலக சாதனையை ஜஸ்ட் மிஸ் செய்த ஆர்சிபி வீரர், மிடில்சக்ஸ் சரித்திர சாதனை
இந்த மைதானத்தில் நான்கு பிட்ச்கள், இரண்டு பயிற்சி தடங்கள், ஜிம், கேண்டீன் என பல வசதிகள் இருப்பதோடு 100 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் இந்த மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் திருச்சி அணிக்காக விளையாடி வரும் நடராஜன் இந்த தொடரின் இடைவெளியில் தற்போது மைதானத்தை திறந்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.