வீடியோ : ஒரே ஓவரில் 5 முரட்டுதனமான சிக்ஸர்கள் – உலக சாதனையை ஜஸ்ட் மிஸ் செய்த ஆர்சிபி வீரர், மிடில்சக்ஸ் சரித்திர சாதனை

- Advertisement -

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 2023 டி20 ப்ளாஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற லீக் போட்டியில் சர்ரே மற்றும் மிடில்சக்ஸ் அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற மிடில்சக்ஸ் முதலில் பந்து பேசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய சர்ரே அணி 20 ஓவர்களில் அதிரடி சரவெடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி 252/7 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஆரம்பத்திலேயே மிடில்சக்ஸ் பவுலர்களை அடித்து நொறுக்கி 177 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த தொடக்க வீரர்கள் வில் ஜேக்ஸ் 8 பவுண்டரி 7 சிக்ஸருடன் 96 (45) ரன்களும் லாரி எவன்ஸ் 9 பவுண்டரி 5 சிக்சருடன் 85 (37) ரன்கள் எடுத்தனர்.

மிடில்சக்ஸ் சார்பில் அதிகபட்சமாக டாம் ஹெல்ம், ஆண்டர்சன் மற்றும் ரியன் ஹிகின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 253 என்ற கடினமான இலக்கை துரத்திய மிடில்சக்ஸ் அணி உங்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்ற வகையில் அதிரடியாக பேட்டிங் செய்து 19.2 ஓவரிலேயே 254/3 ரன்களை குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் முரட்டுத்தனமான வெற்றியை பெற்றது. அந்த அணிக்கு 6.3 ஓவரிலேயே 90 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அட்டகாசமான துவக்கம் கொடுத்த ஸ்டீபன் எஸ்கினாஸி 13 பவுண்டரி 1 சிக்சருடன் 73 (39) ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

ஜஸ்ட் மிஸ்ஸான சாதனை:
அவருடன் அசத்திய ஜோ க்ராக்னல் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 36 (16) ரன்களில் எடுத்து ரன் அவுட்டானார். அவர்களைத் தொடர்ந்து மிடில் ஆர்டரில் ரியன் ஹிகின்ஸ் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 48 (24) ரன்களும் மேக்ஸ் ஹோல்டன் 9 பவுண்டரி 2 சிக்சருடன் 68* (35) ரன்களும் ஜேக் டேவிஸ் 11* (3) ரன்களும் எடுத்து சசக்ஸ் அணி பவுலர்களை பிரித்து மேய்ந்து வெற்றி பெற வைத்தனர். மேலும் இந்த தொடரில் கடந்த 10 போட்டிகளில் தொடர்ந்து தோற்று வந்த மிடில்சக்ஸ் அந்த சோகத்துக்கு இந்த போட்டியில் முற்றுப்புள்ளி வைத்து அற்புதமான வெற்றி பெற்றது.

அத்துடன் இதன் வாயிலாக ஒட்டுமொத்த உலக டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோரை வெற்றிகரமாக சேசிங் செய்த 2வது அணி என்ற மாபெரும் சாதனை படைத்த மிடில்சக்ஸ் டி20 ப்ளாஸ்ட் தொடரில் அதிகபட்ச இலக்கை துரத்திய அணி என்ற வரலாற்றையும் படைத்தது. இதற்கு முன் கடந்த மார்ச் மாதம் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 259 ரன்களை தென்னாப்பிரிக்கா வெற்றிகரமாக சேசிங் செய்ததே உலக சாதனையாக இருந்து வருகிறது. அப்படி ரன் மழை பொழிந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சர்ரே அணிக்கு சுழல் பந்து வீச்சாளரான லுக் ஹோல்மேன் வீசிய 11வது ஓவரின் முதல் பந்திலேயே இங்கிலாந்தின் நட்சத்திர ஆல் ரவுண்டர் வில் ஜேக்ஸ் அதிரடியான சிக்சரை பறக்க விட்டார்.

- Advertisement -

அத்துடன் 2வது பந்தில் நேராகவும் 3வது பந்தில் மிட் விக்கெட் திசையிலும் அடுத்தடுத்த ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்க விட்ட அவர் அத்தோடு நிற்காமல் அடுத்த பந்தில் எக்ஸ்ட்ரா கவர் திசையில் ஃபிளாட்டான சிக்ஸரை தெறிக்க விட்டார். சரி இத்தோடு நிறுத்துவார் என்று எதிர்பார்த்த பவுலருக்கு கருணை காட்டாமல் 5வது பந்தையும் அவர் சிக்ஸராக அடிக்க முயற்சித்தார். இருப்பினும் சரியான டைமிங் கொடுக்காததால் காற்றில் பறந்த அந்த பந்து பவர் கொடுத்து அடித்த காரணத்தால் கேட்ச் போல தெரிந்தாலும் சிக்ஸராக பறந்து ரசிகர்களை மகிழ்வித்தது.

இதையும் படிங்க:IND vs WI : காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரையும் தவறவிட இருக்கும் – 3 இந்திய வீரர்கள்

அதனால் கடைசி பந்தில் சிக்சர் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் அல்வா போல வந்த ஃபுல் டாஸ் பந்தை தவற விட்டு சிங்கிள் மட்டுமே எடுத்தார். அதன் காரணமாக முதல் 5 பந்துகளில் 5 முரட்டுத்தனமான சிக்சர்களை அடித்த அவர் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற யுவராஜ் சிங், ஹெர்சல் கிப்ஸ், கைரன் பொல்லார்ட் ஆகியோரின் உலக சாதனையை சமன் செய்யும் வாய்ப்பை நூலிழையில் தவற விட்டார். இருப்பினும் ஐபிஎல் 2023 தொடரில் பெங்களூரு அணிக்காக வாங்கப்பட்டு காயத்தால் வெளியேறிய அவர் அடுத்த வருடம் அசத்துவார் என்று அந்த அணி ரசிகர்கள் இந்த வீடியோவை பார்த்து மகிழ்ச்சியடைகின்றனர்.

Advertisement