
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் சர்மா ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை தனது இரண்டாவது குழந்தை பிறப்பின் காரணமாக தவறவிட்டார். அதன்பிறகு இரண்டாவது போட்டிக்கு முன்னதாக இந்திய அணியில் இணைந்து தற்போது தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். ஆனாலும் அவரது பேட்டிங் ஃபார்ம் அனைவரது மத்தியிலும் கவலையை அளித்துள்ளது.
ஏனெனில் அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அந்த போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் மூன்றாவது போட்டியிலும் மோசமான ஆட்டத்தை தொடர்ந்து வருகிறார்.
அந்த வகையில் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வரும் இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 27 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் இரண்டு பவுண்டரிகளுடன் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மாவின் இந்த மோசமான பேட்டிங் ஃபார்மில் இருந்து மீண்டுவர என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ரோகித் சர்மா இங்கிலாந்து அணிக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடிய ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது.
மேகமூட்டமான அந்த நாளில் கே.எல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரது ஜோடி ஒரு பந்தை எப்படி விட்டு நீண்ட இன்னிங்ஸ் விளையாட வேண்டும் என்று காட்டியிருந்தனர். அதேபோன்று தற்போது ரோகித் சர்மா விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனெனில் ரோகித் சர்மா ஆடுகளத்தில் அதிக நேரம் செலவிட்டால் நிச்சயம் அவரது பேட்டிங் ஃபார்ம் மீண்டும் அவரது வசம் வரும்.
இதையும் படிங்க : விஜய் ஹசாரே தொடருக்கான கேரளா அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறாதது ஏன்? – நிர்வாகம் கொடுத்த விளக்கம்
எவ்வளவு நேரம் அவர் களத்தில் இருந்து விளையாடுகிறாரோ அந்த அளவிற்கு அவரது ஆட்டம் போக போக அதிரடியாக மாறும். எனவே ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் நிதானமாக இருந்து தேவையான பந்துகளை விட்டும், அடிக்க வேண்டிய பந்துகளை அடித்தும் விளையாடினால் நிச்சயம் அவரால் மீண்டும் மிகச்சிறப்பான ஃபார்முக்கு திரும்ப முடியும் என தினேஷ் கார்த்திக் கூறியது குறிப்பிடத்தக்கது.