டிஎன்பிஎல் 2024 : 8 வருட தவம்.. கோவையை அடக்கிய திண்டுக்கல்.. அஸ்வின் தலைமையில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை

TNPL Final
- Advertisement -

தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி தலைநகர் சென்னையில் இருக்கும் சேப்பாக்கத்தில் இரவு 7.15 மணிக்கு நடைபெற்றது. அதில் லீக் மற்றும் பிளே ஆஃப் சுற்றில் வெற்றி கண்ட ஷாருக்கான் தலைமையிலான நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் அணியை ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி எதிர்கொண்டது.

அப்போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய கோவை அணிக்கு சுரேஷ்குமார் 11 ரன்னில் சந்திப் வாரியர் வேகத்தில் அவுட்டானார். மறுபுறம் அதிரடி காட்ட முயற்சித்த சுஜையை 22 ரன்களில் காலி செய்த வருண் சக்கரவர்த்தி அடுத்து வந்த முகிலேசை கோல்டன் டக் அவுட்டாக்கினார். அடுத்த ஓவரிலேயே நம்பிக்கை நட்சத்திரம் சாய் சுதர்சனும் 14 (14) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

திண்டுக்கல் சாம்பியன்:
அதனால் 51/4 என தடுமாறிய கோவை அணிக்கு கை கொடுப்பார் என்ற எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஷாருகான் 3 ரன்னில் அவுட்டானார். இறுதியில் அதிக் உர் ரகுமான் 25 (17), முகமது 15* ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் கோவை வெறும் 129/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. திண்டுக்கல் சார்பில் அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி, விக்னேஷ், சந்திப் வாரியர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

அதைத்தொடர்ந்து 130 ரன்களை துரத்திய திண்டுக்கல் அணிக்கு துவக்க வீரர்கள் விமல் குமார் 9, சிவம் சிங் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் அடுத்ததாக ஜோடி சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் பாபா இந்திரஜித் ஆகியோர் நிதானமாக விளையாடினர். அந்த வகையில் 3வது விக்கெட்டுக்கு 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து திண்டுக்கல்லை வெற்றி பாதைக்கு அழைத்து வந்த இந்த ஜோடியில் அஸ்வின் ஒரு பவுண்டரி 3 சிக்சருடன் 52 (46) ரன்கள் விளாசி அவுட்டானார்.

- Advertisement -

அடுத்த சில ஓவரில் பாபா இந்திரஜித் 32 ரன்னில் ஆட்டமிழந்தார். இருப்பினும் இலக்கு குறைவாக இருந்ததால் அடுத்ததாக வந்த சரத்குமார் 27*, பூபதி குமார் 3* ரன்கள் எடுத்த உதவியுடன் 18.2 ஓவரிலேயே 131/4 ரன்கள் எடுத்த திண்டுக்கல் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனால் 2024 டிஎன்பிஎல் தொடரின் கோப்பையை சந்திரன் அஸ்வின் தலைமையில் வென்ற திண்டுக்கல் அணி புதிய சாம்பியனாக சாதனை படைத்தது.

இதையும் படிங்க: ராகுல் டிராவிட் வாழ்நாள் சாதனையை தகர்த்த ரோஹித் சர்மா.. சச்சினையும் முந்தி வரலாற்று சாதனை

சொல்லப்போனால் 2016 முதல் தோல்விகளை மட்டுமே சந்தித்த திண்டுக்கல் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையில் முதல் முறையாக டிஎன்பிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றிக்கு எலிமினேட்டர், குவாலிபயர் 2 போட்டிகளை தொடர்ந்து ஹாட்ரிக் அரை சதமடித்து முக்கிய பங்காற்றிய ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்டநாயகன் விருதை வென்றார். மறுபுறம் பேட்டிங்கில் பெரிய ரன்கள் எடுக்க தவறிய கோவை பந்து வீச்சில் போராடியும் தோல்வியை சந்தித்து சாம்பியன் பட்டத்தை தக்க வைக்க தவறியது.

Advertisement