
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இங்கிலாந்து நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இங்கிலாந்து அணியானது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது ஜூலை 23-ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் நடைபெற இருக்கிறது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி இந்த தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்யும் என்பதனால் இந்த போட்டி இந்திய அணிக்கு முக்கியமான போட்டியாக மாறியுள்ளது. அதனால் இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் இந்திய அணியின் வீரர்கள் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் எதிர்வரும் இந்த நான்காவது போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான திலீப் வெங்சர்க்கார் நான்காவது போட்டியில் செய்ய வேண்டிய 2 மாற்றங்கள் குறித்த தனது கருத்தினை வெளிப்படுத்தி உள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்திய அணியில் தற்போது இரண்டு மாற்றங்கள் அவசியம் தேவை என்று நினைக்கிறேன். அந்த வகையில் ஆல்ரவுண்டர்களான நிதீஷ்குமார் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் வெளியேற்றப்பட்டு அவர்கள் இருவருக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் கொண்டுவரப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில் : நிதீஷ் ரெட்டி எதிர்பார்த்த அளவு இந்த இங்கிலாந்து தொடரில் திருப்தியான செயல்பாட்டை வெளிப்படுத்தவில்லை என்று நினைக்கிறன். எனவே நான்காவது போட்டியில் அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங்கை பிளேயிங் லெவனுக்குள் கொண்டு வந்தால் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு கூட்டணி பலமடையும்.
இதையும் படிங்க : இன்னும் 31 ரன்கள் போதும்.. ராகுல் டிராவிட் மற்றும் ஜேக் காலீஸ்ஸை தாண்டி வரலாறு படைக்கவிருக்கும் – ஜோ ரூட்
அதேபோன்று தமிழக சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக முழுநேர சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் அணிக்குள் வந்தால் சுழற்பந்து வீச்சு கூட்டணியும் பலமடையும். இப்படி இந்த இரண்டு மாற்றங்களையும் செய்தால் நிச்சயம் இந்திய அணி வெற்றியை நோக்கி பயணிக்கும் என திலீப் வெங்சர்க்கார் கூறியது குறிப்பிடத்தக்கது.