இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட் போட்களில் பல்வேறு சாதனைகளை தொடர்ந்து நிகழ்த்தி வருகிறார். தற்போது 34 வயதாகும் இவரே சச்சின் டெண்டுல்கரின் அதிக டெஸ்ட் ரன்கள் சாதனையை முறியடிப்பார் என்றும் பலராலும் பேசப்பட்டு வருகிறது. ஏனெனில் தற்போதே இவர் 13 ஆயிரம் ரன்களை கடந்த நிலையில் இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகள் விளையாடினால் நிச்சயம் சச்சினின் 15921 ரன்களை கடப்பார் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
டிராவிட் மற்றும் ஜாக் காலிஸ்ஸை முந்த காத்திருக்கும் ஜோ ரூட் :
தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் அவர் முதல் இரண்டு போட்டிகளிலும் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியின் போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்தது மட்டுமின்றி இரண்டாவது இன்னிங்ஸிலும் இங்கிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக 40 ரன்கள் குவித்திருந்தார்.
அவரது இந்த அற்புதமான ஆட்டம் காரணமாக இங்கிலாந்து அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றியும் பெற்றிருந்தது. இந்நிலையில் எதிர்வரும் ஜூலை 23-ஆம் தேதி துவங்க இருக்கும் இந்திய அணிக்கு எதிரான நான்காவது போட்டியில் விளையாட இருக்கும் ஜோ ரூட் 31 ரன்களை அடிக்கும் பட்சத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜாம்பவான்களான ராகுல் டிராவிட் மற்றும் ஜாக் காலிஸ் ஆகியோரை பின்னுக்கு தள்ளி ஒரு முக்கிய சாதனையை நிகழ்த்த இருக்கிறார்.
அது குறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் அவர் நிகழ்த்தப் போகும் சாதனை யாதெனில் : இதுவரை டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 13259 ரன்களை அடித்துள்ள ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்.
இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் (15921), ரிக்கி பாண்டிங் (13378) ஆகியோர் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் வேளையில் அவர்களுக்கு அடுத்து ஜாக் காலிஸ் 13289 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும், ராகுல் டிராவிட் 13288 ரன்களுடன் நான்காவது இடத்திலும் இருக்கின்றனர், அதற்கடுத்து ஜோ ரூட் 13259 ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்.
இதையும் படிங்க : வயசு முக்கியமல்ல.. அழகான அதை செய்யாத நாயருக்கு பதில் சுதர்சனை ஆட வைங்க.. ஃபரூக் என்ஜினீயர்
இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் மேலும் அவர் 30 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் டிராவிடையும், 31 ரன்கள் அடிக்கும் போது ஜாக் காலீஸையும் கடந்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த மூன்றாவது வீரராக அவர் சரித்திரம் படைக்க காத்திருக்கிறார். அதோடு இந்த தொடரில் இன்னும் இரண்டு போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில் 119 ரன்களை குவித்தால் ரிக்கி பாண்டிங்கையும் பின்னுக்கு தள்ளுவார் என்பது குறிப்பிடத்தக்கது.



