இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி ஜூலை 23ஆம் தேதி மான்செஸ்டரில் துவங்குகிறது. அத்தொடரில் 3 போட்டிகளின் முடிவில் 2 – 1* (5) என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கிறது. எனவே தொடரை சமன் செய்ய வேண்டுமெனில் இந்தியா 4வது போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்க உள்ளது.
முன்னதாக இத்தொடரில் இந்திய அணிக்காக கருண் நாயர் 8 வருடங்கள் கழித்து விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். 2016 இங்கிலாந்து தொடரில் அறிமுகமான அவர் சென்னையில் சேவாக்கிற்கு பின் இந்தியாவுக்காக முச்சதம் அடித்து சாதனை படைத்தார். ஆனால் அந்த ஒரு ஆட்டத்தைத் தவிர்த்து மற்ற போட்டிகளில் பெரிய ரன்களை குவிக்கத் தவறிய அவரை இந்திய அணி நிர்வாகம் கழற்றி விட்டது.
அழகான சதம்:
இருப்பினும் மனம் தளராத அவர் உள்ளூர் மற்றும் கவுண்டி தொடரில் சிறப்பாக விளையாடி கம்பேக் கொடுத்தார். அந்த வாய்ப்பில் இங்கிலாந்து லயன்ஸ்க்கு எதிராக இரட்டை சதத்தை அடித்த அவர் முதல் போட்டியில் மிடில் ஆடரில் விளையாடி பெரிய ரன்கள் குவிக்கவில்லை. அதனால் அறிமுகப் போட்டியுடன் சாய் சுதர்சனை கழற்றி விட்ட இந்திய அணி கருண் நாயருக்கு 3வது இடத்தில் விளையாடும் வாய்ப்பு கொடுத்தது.
ஆனால் அந்த வாய்ப்பிலும் அரை சதத்தை கூட அடிக்காத அவர் 3வது போட்டியில் பந்தை தவறாக படித்து விக்கெட்டை இழந்தது இந்தியாவின் தோல்விக்கு வித்திட்டது. இந்நிலையில் 3வது இடத்தில் பேட்டிங் செய்பவர்கள் சதத்தை அடிப்பதே அழகு என்று முன்னாள் இந்திய வீரர் பரூக் என்ஜினீயர் கூறியுள்ளார். இதுவரை அதை செய்யாத கருண் நாயரை தேவைப்பட்டால் கழற்றி விட்டு சுதர்சனை விளையாட வைக்கலாம் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
சுதர்சன் வாய்ப்பு:
இது பற்றி என்ஜினீயர் பேசியது பின்வருமாறு. “கருண் நாயர் அற்புதமான 20, 30 ரன்கள் எடுக்கிறார். அழகான 30 ரன்கள், கவர் ட்ரைவ் போன்றவற்றையும் அடிக்கிறார். ஆனால் 3வது இடத்தில் விளையாடும் பேட்ஸ்மேனிடம் நீங்கள் அழகான 30 ரன்களை மட்டும் எதிர்பார்க்க மாட்டீர்கள். அங்கே அதிகம் அழகற்ற 100 ரன்களை எதிர்பார்ப்பீர்கள். அங்கே நீங்கள் பெரிய ரன்கள் குவிக்க வேண்டும். இங்கே எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது”
இதையும் படிங்க: கோலி, தோனி மாதிரி போலியாக இல்லாம.. கில் அதுல சொந்த ஸ்டைலை கண்டுபிடிக்கனும்.. மஞ்ரேக்கர் அறிவுரை
“நாம் சிறந்த பிளேயிங் லெவனை தேர்ந்தெடுக்க வேண்டும். சுதர்சனை நான் அதிகம் பார்த்ததில்லை. ஆனால் தற்சமயத்தில் நன்றாக இருக்கும் வீரர் யார் என்பதையும், உங்களுடைய நாட்டுக்காக அதிக செயல்பாடுகளை யார் கொடுப்பார் என்பதையும் பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும். எனவே வயதை மறந்து விடுங்கள், சுதர்சன் திறமையானவர் என்றால் விளையாட வைத்துப் போட்டியை வெல்லுங்கள்” என்று கூறினார்.



