
இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 – 2 என்ற கணக்கில் இந்திய அணி போராடி சமன் செய்தது. அந்தத் தொடரில் கடைசி போட்டியில் தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் மிராக்கள் வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு பவுலிங் துறையில் முகமது சிராஜ் 23 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றினார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா காயத்தைத் தவிர்ப்பதற்காக 3 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். அந்த 3 போட்டிகளிலும் இந்திய அணி 2 தோல்வி, 1 ட்ராவை சந்தித்ததே தவிர வெற்றியைக் காணவில்லை. அதனால் ஜஸ்ப்ரித் பும்ரா மேலே பலரும் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்கள்.
இந்நிலையில் தாம் தேர்வுக்குழு தலைவராக இருந்திருந்தால் மும்பை அணியின் உரிமையாளர் அம்பானியிடம் பேசி பும்ராவுக்கு ஐபிஎல் தொடரில் ஓய்வு வாங்கிக் கொடுத்திருப்பேன் என்று திலிப் வெங்சர்கார் கூறியுள்ளார். அதைச் செய்திருந்தால் பும்ரா புத்துணர்ச்சியுடன் இங்கிலாந்தில் 5 போட்டிகளிலும் விளையாடியிருப்பார் என்று அவர் கூறியுள்ளார். அதனால் இந்திய அணி தொடரை முழுமையாக வென்றிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அதை செய்யாத தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரை குறித்து முன்னாள் இந்திய கேப்டனான அவர் பேசியது பின்வருமாறு. “இங்கிலாந்து தொடரின் முக்கியத்துவம் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ராவின் உடையக்கூடிய முதுகின் தன்மையை கருதி, பிசிசிஐ மற்றும் தேர்வாளர்கள் 2025 ஐபிஎல் தொடரில் விளையாடாதீர்கள் என்று பும்ராவிடம் சொல்லியிருக்க வேண்டும். இங்கிலாந்து தொடருக்கு பும்ரா முழுமையாக புத்துணர்ச்சியுடன் ஃபிட்டாக இருப்பது அவசியம்”
“ஒருவேளை நான் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக இருந்திருந்தால் முகேஷ் அம்பானியிடம் இந்தியாவுக்காக ஜஸ்ப்ரித் பும்ரா ஐபிஎல் தொடரை தவற விடுவது எவ்வளவு முக்கியமானது என்பதை பேசி புரிய வைத்திருப்பேன். அல்லது ஜஸ்ப்ரித் பும்ரா குறைந்த ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாட வேண்டும் என்று அம்பானியிடம் கேட்டுக் கொண்டிருப்பேன்”
இதையும் படிங்க: உறுதியான ஷ்ரேயாஸ் ஐயரின் டி20 கம்பேக்.. டெஸ்ட் எல்லாம் கூட பாஸ் பண்ணிட்டாராம் – வெளியான தகவல்
“நாட்டுக்காக மும்பை அணியினர் அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். இங்கிலாந்தில் நடந்தது மிகவும் மறக்க முடியாத ஒரு தொடராகும். அதில் பும்ரா முழுமையாக விளையாடியிருந்தால் இந்தியா கோப்பையை வென்றிருக்கும்” என்று கூறினார். முன்னதாக ஜஸ்ப்ரித் பும்ரா கடந்த ஆஸ்திரேலிய தொடரில் முழுமையாக 5 போட்டிகளில் விளையாடினார். ஆனால் அத்தொடரின் கடைசிப் போட்டியில் சந்தித்த காயத்தால் செய்த அறுவை சிகிச்சையின் காரணமாக இங்கிலாந்தில் அவரால் 5 போட்டிகளில் விளையாட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.