இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயர் மூன்று விதமான ஃபார்மேட்டிலும் முக்கிய வீரராக விளையாடி வந்தார். ஆனால் அவரது தடுமாற்றமான பார்ம் காரணமாக டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் அவர் நிராகரிக்கப்பட்டு தொடர்ச்சியாக ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்தார். அதனால் கடந்த சில ஆண்டுகளாகவே அவருக்கு ஒருநாள் போட்டிகளை தாண்டி மற்ற இரண்டு அணிகளிலும் இடம் கிடைக்கவில்லை.
உறுதியான ஷ்ரேயாஸ் ஐயரின் டி20 கம்பேக் :
ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே உள்ளூர் போட்டிகள் மட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் அவர் மீண்டும் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் திரும்ப இருக்கிறார் என்றும் பேசப்பட்டு வருகிறது.
அதிலும் குறிப்பாக இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியை மிகச் சிறப்பாக வழிநடத்தி இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார். இதன் காரணமாக ஷ்ரேயாஸ் ஐயரின் இந்த திறனை கருத்தில் கொண்டு ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் ஷ்ரேயாஸ் ஐயரை இணைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கடந்த சில நாட்களாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் ஷ்ரேயாஸ் ஐயரின் டி20 கம்பேக்கை உறுதி செய்யும் வகையில் தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் எதிர்வரும் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறவிருக்கும் வீரர்கள் அனைவரும் தேசிய கிரிக்கெட் அகாடமி சென்று தங்களது உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் என பிசிசிஐ கேட்டுக்கொண்டது.
பி.சி.சி.ஐ-யின் வேண்டுகோளுக்கு இணங்க வீரர்கள் அனைவரும் தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியை அணுகி தங்களது உடற்தகுதியை நிரூபித்து தடையில்லா சான்றிதழை பெற்று வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஷ்ரேயாஸ் ஐயரும் கடந்த ஜூலை 27 மற்றும் 29ஆம் தேதி தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடைபெற்ற உடற்தகுதி தேர்வில் கலந்துகொண்டு அதில் தேர்ச்சியும் பெற்றுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : 5 வருடம் கழித்து பாகிஸ்தான் தோற்கடித்து அசத்திய வெஸ்ட் இண்டீஸ்.. மழையை தாண்டி பதிலடி வெற்றி
இதன் காரணமாக எதிர்வரும் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம்பெறுவது உறுதியாகியுள்ளது. இந்திய அணிக்காக மிடில் ஆர்டரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் டி20 போட்டிகளில் கம்பேக் கொடுக்கும் பட்சத்தில் நிச்சயம் இந்திய அணியின் மிடில் ஆர்டரும் பலப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.



