வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் வென்ற நிலையில் இரண்டாவது போட்டி ஆகஸ்ட் 10ஆம் தேதி ட்ரினிடாட் நகரில் நடைபெற்றது. அங்குள்ள பிரைன் லாரா மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு துவங்கிய 2வது போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தானுக்கு துவக்க வீரர்கள் சாய்ம் ஆயுப் 23, அப்துல்லா சபிக் 26 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் அசாம் டக் அவுட்டான நிலையில் சல்மான் ஆகா 9 ரன்னில் நடையைக் கட்டினார். அதே போல கேப்டன் முகமது ரிஸ்மான் மெதுவாக விளையாடி 16 (38) ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
மழையை தாண்டி:
இளம் வீரர் உசைன் தாலத் அதிரடியாக விளையாட முயற்சித்து 31 (32) ரன்னில் அவுட்டானார். லோயர் ஆர்டரில் முகமது நவாஸ் 5 ரன்னில் அவுட்டான போதிலும் ஹசன் நவாஸ் 36*, சாகின் அப்ரிடி 11* எடுத்த போது மழை வந்தது. அத்துடன் முதல் இன்னிங்ஸ் முடிந்ததாக நடுவர்கள் அறிவித்தார்கள். அப்போது பாகிஸ்தான் 171/7 ரன்கள் எடுத்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிகபட்சமாக ஜெய்டேன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.
அடுத்ததாக மழை நின்ற பின் துவங்கிய ஆட்டத்தில் டிஎல்எஸ் விதிமுறைப்படி வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற 35 ஓவரில் 181 தேவை என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதைத் துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிரண்டன் கிங் 1, எவின் லெவிஸ் 7, கேசி கார்ட்டி 16 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். அதனால் 48/3 என தடுமாறிய அந்த அணிக்கு பொறுப்புடன் விளையாடி கேப்டன் சாய் ஹோப் 32 ரன்கள் குவித்து அவுட்டானார்.
2019க்குப்பின் வெற்றி:
மிடில் ஆர்டரில் ரூத்தர்போர்ட் அதிரடியாக விளையாடி 45 (33) ரன்கள் விளாசினார். அதே போல ரோஸ்டன் செஸ் அதிரடியாக 49* (47), ஜஸ்டின் க்ரிவ்ஸ் 26* (31) ரன்கள் எடுத்தார்கள். அதனால் 33.2 ஓவரிலேயே 184/5 ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1 – 1 (3) என்ற கணக்கில் இத்தொடரை சமன் செய்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்துள்ளது.
இதையும் படிங்க: ஆசிய கோப்பை தொடர் நெருங்கிடுச்சி.. ரெடியா இருங்க.. பாண்டியாவுக்கு கட்டளையிட்ட பி.சி.சி.ஐ – விவரம் இதோ
மேலும் 2019க்குப்பின் 6 வருடங்கள் கழித்து பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு ஒருநாள் போட்டியில் வென்று வெஸ்ட் இண்டீஸ் அசத்தியது. கடைசியாக 2019 உலகக் கோப்பையில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அதன் பின் பாகிஸ்தானுக்கு எதிராக சந்தித்த தொடர் தோல்விகளை இப்போட்டியில் உடைத்துள்ளது. பாகிஸ்தானுக்கு ஹசன் அலி, முகமது நவாஸ் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.



