குல்தீப் யாதவுக்கு பிளான் சொன்ன ஜுரேல்.. அப்படியே தோனியை பாத்த மாதிரியான நிகழ்வு – நடந்தது என்ன?

Jurel
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியின் போது அறிமுகமாகிய இந்திய அணியின் விக்கெட் கீப்பர் துருவ் ஜுரேல் தனது முதல் போட்டியிலேயே பேட்டிங்கில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார். அதனை தொடர்ந்து நடைபெற்ற நான்காவது போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கும் உதவியிருந்தார்.

அதனை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது போட்டியில் அவரது விக்கெட் கீப்பிங் அனைவரது மத்தியிலும் பாராட்டும் வகையில் மிகச் சிறப்பாக அமைந்து வருகிறது. பொதுவாகவே இந்திய அணியில் தோனி விக்கெட் கீப்பராக இருந்தவரை பந்துவீச்சாளர்களுக்கு எப்படி பந்துவீச வேண்டும் என்பது குறித்த திட்டங்களை ஸ்டம்பிற்கு பின்னால் நின்று தெளிவுபடுத்தி கொண்டே இருப்பார்.

- Advertisement -

அதனை கடைபிடித்த பவுலர்களும் விக்கெட்டுகளை வீழ்த்திய வண்ணம் இருந்தனர். ஆனால் தோனியின் ஓய்விற்கு பிறகு ரிஷப் பண்ட், கே.எல் ராகுல், இஷான் கிஷன், கே.எஸ் பரத் என பல்வேறு விக்கெட் கீப்பர் வந்தும் பவுலர்களுக்கு அவர்களால் எந்தவகையிலும் உதவ முடியவில்லை.

இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த ஐந்தாவது போட்டியில் மிகச் சிறப்பாக தனது திட்டங்களை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக கணித்த துருவ் ஜுரேல் பந்துவீச்சாளர்களுக்கு அடிக்கடி ஆலோசனைகளை வழங்கி வந்தார். அதிலும் குறிப்பாக நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணியின் முன்னணி வீரரான போப் விளையாடிக் கொண்டிருந்தபோது அவர் விரைவில் பந்தை மேல் ஏறி அடிப்பார் என்பதை கணித்தார்.

- Advertisement -

அதனால் போட்டியின் 25-வது ஓவரின் போது குல்தீப் யாதவை அழைத்து போப் நிச்சயம் இந்த ஓவரில் இறங்கி வந்து விளையாடுவார் எனவே பந்தை இழுத்து போடுங்கள் என்பது போன்று தெரிவித்திருந்தார். அதன்படி குல்தீப் யாதவும் சாமர்த்தியமாக பந்துவீச இறங்கி வந்து அடிக்க ஆசைப்பட்ட போப் துருவ் ஜுரேலிடம் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதையும் படிங்க : இந்த பையன்கிட்ட ஜாம்பவானா வருவதற்கு தேவையான எல்லா குணமும் இருக்கு.. ஜஹீர் கான் பாராட்டு

இப்படி பேட்ஸ்மேன் என்ன செய்யப்போகிறார்? என்பதை முன்கூட்டியே கணித்து குல்தீப் யாதவுக்கு அட்வைஸ் வழங்கியதோடு, சிறப்பாக ஸ்டம்பிங் செய்த துருவ் ஜுரேலின் செயல்பாடுகளை பார்க்கையில் தோனி போன்றே இருப்பதாக பல்வேறு ரசிகர்களும் அவரது இந்த செயலை பாராட்டி அவரது விக்கெட் கீப்பிங்கை வாழ்த்தி வருகின்றனர். மேலும் இப்படி ஒரு திறமையான இளம் வீரரை நிச்சயம் தொடர்ந்து விளையாட வைக்க வேண்டும் என்றும் தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement