
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்பட்டு வருகிறார். ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்ற அனுபவத்தால் அவர் இந்தியாவின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவருடைய தலைமையில் 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியா ஐசிசி தொடர்களில் கடந்த 10 வருடங்களாக சந்தித்த தோல்விகளை நிறுத்தி சாதனை படைத்தது.
முன்னதாக சொந்த சாதனைகளைப் பற்றி கவலைப்படாமல் எதிரணிகளை துவம்சம் செய்ய வேண்டும் என்ற அணுகுமுறையை ரோகித் சர்மா இந்திய அணியில் உருவாக்கி வருகிறார். அதே போல தேர்ந்தெடுக்கும் வீரர்களுக்கு போதுமான ஆதரவையும் ரோஹித் கொடுப்பதாக மற்ற வீரர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ரோஹித் சர்மா சீனியர்களை விட ஜூனியர் வீரர்களிடம் அதிகமாக பழகுவார் என்று துருவ் ஜுரேல் கூறியுள்ளார்.
குறிப்பாக சாப்பிடச் செல்லும் போது ரோஹித் சர்மா தங்களைப் போன்ற இளம் வீரர்களுடன் அமர்ந்து கிரிக்கெட்டை தவிர்த்து மற்ற விஷயங்களை ஜாலியாக பேசுவார் என்று அவர் கூறியுள்ளார். ஆனால் களத்தில் ஜாலிக்கு இடமில்லாமல் 100% அர்ப்பணிப்புடன் விளையாட வேண்டும் என ரோஹித் கூறுவார் என்றும் துருவ் ஜுரேல் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“100% நீங்கள் சொல்வது போல ரோகித் சர்மா முற்றிலும் வடிகட்டப்படாத நபர். நாங்கள் இரவு உணவு சாப்பிடும் போது அவர் சீனியர்களுடன் உட்கார மாட்டார். ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான், சுப்மன் கில் மற்றும் என்னைப் போன்றவர்களை அழைத்து அருகே அமர வைத்துக் கொள்வார். அந்த சமயங்களில் கிரிக்கெட்டை பற்றி பேசாமல் அவர் மற்ற விஷயங்களை பேசுவார். அது வேடிக்கையாக இருக்கும்”
“அதே சமயம் நீங்கள் களத்திற்கு வந்து விட்டால் இந்தியாவுக்காக ரிலாக்ஸ் செய்யாமல் விளையாட வேண்டும் என்று ரோஹித் விரும்புவார். இந்தியாவுக்காக 100% செயல்பாடுகளை கொடுக்க வேண்டும் என்று சொல்வார். ஏனெனில் அனைவரும் உங்களை பார்க்கிறார்கள் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்காது என்று சொல்லி ரோஹித் எங்களுக்கு உத்வேகத்தை கொடுப்பார்” என்று கூறினார்.
இதையும் படிங்க: அந்த 2 பேட்ஸ்மேன்களில் அதிக ரன்ஸ் அடிக்கும் அணியே பார்டர் – கவாஸ்கர் கோப்பை வெல்லும்.. மேக்ஸ்வெல் பேட்டி
முன்னதாக 2024 இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் துருவ் ஜுரேல் அறிமுகமானார். அந்த வாய்ப்பில் தம்முடைய இரண்டாவது போட்டியிலேயே அரை சதமடித்த அவர் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்றார். அதனால் அடுத்ததாக நடைபெறும் வங்கதேச தொடரிலும் துருவ் ஜுரேல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.