இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் மாதம் துவங்குகிறது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இரண்டு தொடர்களையும் 2 – 1 (4) என்ற கணக்கில் இந்தியா வென்றது. அதனால் ஆஸ்திரேலிய மண்ணில் 2 டெஸ்ட் தொடர்களை வென்ற முதல் ஆசிய அணியாக இந்தியா வரலாறு படைத்தது.
அதைத் தொடர்ந்து இம்முறை ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா மீண்டும் வென்று ஹாட்ரிக் வெற்றியை பெறுமா என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது. மறுபுறம் சொந்த மண்ணில் தோல்விகளை கொடுத்த இந்தியாவை இம்முறை வீழ்த்த வேண்டும் என்ற லட்சியத்துடன் ஆஸ்திரேலியா தயாராகி வருகிறது. அதனால் இம்முறை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.
மேக்ஸ்வெல் காத்திருப்பு:
இந்நிலையில் அந்தத் தொடரில் விராட் கோலி – ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் நேருக்கு நேராக மோதுவதை பார்க்க காத்திருப்பதாக ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல் கூறியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “2 சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மேன்களான ஸ்டீவ் ஸ்மித் – விராட் கோலி நேருக்கு நேர் மோதும் விதம் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்”
“அவர்கள் இந்த தொடரில் எந்தளவுக்கு ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதை பொறுத்து அவர்களுடைய அணி பார்டர் – காவாஸ்கர் கோப்பையை வீட்டுக்கு எடுத்துச் செல்வதற்கான செல்வாக்கை பெறும் என்று நினைக்கிறேன். அந்த இருவருமே இல்லை என்றாலும் யாரேனும் ஒருவர் பெரிய ரன்களை எடுக்கப் போகிறார்”
விராட் கோலி – ஸ்டீவ் ஸ்மித்:
“எனவே நம் தலைமுறையின் அந்த 2 சிறந்த பேட்ஸ்மேன்கள் நேருக்கு நேர் விளையாடுவதை பார்ப்பது மிகவும் உற்சாகமாக இருக்கும்” என்று கூறினார். முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் கோலி 25 டெஸ்ட் போட்டிகளில் 8 சதங்களுடன் 2042 ரன்களை 47.48 சராசரியில் எடுத்துள்ளார். மறுபுறம் ஸ்டீவ் ஸ்மித் இந்தியாவுக்கு எதிராக 19 போட்டிகளிலேயே 8 சதங்களுடன் 2042 ரன்களை 65.87 என்ற சராசரியில் எடுத்துள்ளார்.
இதையும் படிங்க: 525 ரன்ஸ்.. இமாலய ஸ்கோர் அடித்த ருதுராஜ் அணி.. 2024 துலீப் கோப்பையில் அசத்தல் சாதனை
அதனால் அந்த இருவருமே தங்களுடைய அணியின் பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படுகின்றனர். எனவே இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 2 அணிகளுமே சிறப்பாக விளையாடுவதற்கு அவர்கள் நன்றாக பேட்டிங் செய்வது அவசியமாகும். அந்த வகையில் அவர்களில் யார் சிறப்பாக பேட்டிங் செய்கிறார்களோ அவர்களுடைய அணியே கோப்பையை வெல்லும் என்று மேக்ஸ்வெல் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



