துலீப் கோப்பையின் 2024 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 2வது ரவுண்டு போட்டிகள் செப்டம்பர் 12ஆம் தேதி துவங்கி நடைபெற்ற வருகிறது. அதில் அனந்தபூரில் நடைபெறும் 4வது போட்டியில் இந்தியா பி மற்றும் இந்தியா சி அணிகள் மோதுகின்றன. தங்களுடைய முதல் ரவுண்ட் போட்டியில் வெற்றியைப் பெற்ற அவ்விரு அணிகள் மோதும் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா சி அணிக்கு கேப்டன் ருதுராஜ் பவுண்டரியை பறக்க விட்டு ஆட்டத்தை துவக்கினார். ஆனால் அப்போது காயத்தை சந்தித்ததால் 4 ரன்களுடன் அவர் பெவிலியன் திரும்பினார். அதைத் தொடர்ந்து வந்த ரஜத் படிடார் தமிழக வீரர் சாய் சுதர்சனுடன் சேர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். அந்த வகையில் 2வது விக்கெட்டுக்கு 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடியில் ரஜத் படிடார் 40 ரன்களில் அவுட்டானார்.
ருதுராஜ் அணி அசத்தல்:
அடுத்த சில ஓவரில் அரை சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சாய் சுதர்சன் 43 ரன்களில் முகேஷ் குமார் வேகத்தில் ஆட்டமிழந்தார். அவர்களைத் தொடர்ந்து மற்றொரு தமிழக வீரர் பாபா இந்திரஜித் மற்றும் இசான் கிசான் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். அதில் இந்திரஜித் கொஞ்சம் நிதானமாக விளையாடும் நிலையில் இசான் கிசான் அதிரடியாக ரன்களை குவித்தார்.
அந்த வகையில் 4வது விக்கெட்டுக்கு 189 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியா ஏ பவுலர்களை பந்தாடிய அந்த ஜோடியில் இசான் கிசான் சதமடித்து 14 பவுண்டரி 3 சிக்சருடன் 111 ரன்கள் குவித்து அவுட்டானார். அவருடன் சேர்ந்து விளையாடிய பாபா இந்திரஜித் அரை சதமடித்து 78 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதை பயன்படுத்தி இந்தியா சி அணியை பி அணி 400 ரன்களுக்குள் சுருட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
500 ரன்கள்:
ஆனால் அப்போது காயத்திலிருந்து முதலுதவிகளை எடுத்துக் கொண்டு வந்த ருதுராஜ் மீண்டும் பேட்டிங் செய்து அரை சதமடித்து 58 ரன்கள் விளாசி அவுட்டானார். அவருடன் சேர்ந்து விளையாடிய மாணவ் சுதர் தம்முடைய பங்கிற்கு கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தி 11 பவுண்டரி 3 சிக்சருடன் 82 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இறுதியில் மயங் மார்கண்டே 17, அன்சுல் கம்போஜ் 38, விஜய்குமார் வைசாக் 12, சந்தீப் வாரியார் 11* என டெயில் எண்டர்கள் தங்களுடைய பங்கிற்கு கணிசமான ரன்கள் குவித்தனர்.
இதையும் படிங்க: பிரச்சனையே இல்லாமல் முடிச்சிட்டு விட்ருவாங்க.. இந்தியா பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் குறித்து – தினேஷ் கார்த்திக் கருத்து
அதனால் முதல் இன்னிங்ஸில் இந்தியா சி அணி ஒரு வழியாக 525 ரன்கள் எடுத்து அவுட்டானது. அதன் வாயிலாக 2024 துலீப் கோப்பையில் 500 ரன்களை அடித்த முதல் அணி என்ற சாதனையை ருதுராஜ் தலைமையிலான இந்தியா சி பெற்றது. இந்தியா பி சார்பில் அதிகபட்சமாக முகேஷ் குமார் மற்றும் ராகுல் சஹர் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.



