தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 2025 சீசன் ஜூன் 5ஆம் தேதி கோயம்புத்தூரில் துவங்கியது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிகள் மோதின. கோயம்புத்தூரில் உள்ள எஸ்என்ஆர் காலேஜ் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய கோவை அணிக்கு துவக்க வீரர்கள் வைசால் வைதியா 6 (11), லோகேஸ்வர் 15 (12) ரன்னில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தனர். மிடில் ஆர்டரில் நிதானமாக விளையாட முயற்சித்த ஆண்ட்ரே சித்தார்த் 25 (23) ரன்னில் அவுட்டாகி சென்றார். மறுபுறம் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்திய பி சச்சின் 51 (38) ரன்கள் எடுத்த போது கேப்டன் அஸ்வின் சுழலில் சிக்கினார்.
கோவை தடுமாற்றம்:
அடுத்ததாக வந்து அடித்து நொறுக்க முயற்சித்த கேப்டன் சாருக்கானை 25 (14) ரன்னில் அவுட்டாக்கிய பெரியசாமி மறுபுறம் தடுமாறிய பிரதீப் விசாலையும் 7 (7) ரன்னில் பெவிலியன் அனுப்பினார். அடுத்து வந்த வீரர்களும் ஃபினிஷிங் செய்யத் தவறியதால் 20 ஓவரில் கோவை 149/8 ரன்களை மட்டுமே எடுத்தது. திண்டுக்கல் அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் ரவிசந்திரன் அஸ்வின், சந்திப் வாரியர், ஜி பெரியசாமி தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
அடுத்து விளையாடிய திண்டுக்கல் அணிக்கு ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி ஆச்சரியத்தைக் கொடுத்த கேப்டன் அஸ்வின் 15 (12) ரன்னில் ராமலிங்கம் ரோகித்திடம் விக்கெட்டை இழந்தார். ஆனால் அவருடன் களமிறங்கிய மற்றொரு ஓப்பனிங் பேட்ஸ்மேன் சிவம் சிங் அதிரடியாக விளையாடினார். அவருடன் எதிர்புறம் கைகொடுக்க முயற்சித்த விமல் குமார் நிதானமாக விளையாடி 28 (26) ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
திண்டுக்கல் வெற்றி:
அவரை அவுட்டாக்கிய கேப்டன் சாருக்கான் அதற்கடுத்ததாக வந்து 12 (4) ரன்களை விளாசிய ஹன்னி சைனியையும் அவுட்டாக்கினார். இருப்பினும் இந்தப் பக்கம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சிவம் சிங் அரை சதத்தை அடித்து 5 பவுண்டரி 5 சிக்சருடன் 82* (50) ரன்கள் குவித்தார். இறுதியில் பாபா இந்திரஜித் 13* (12) ரன்கள் எடுத்த உதவியுடன் 17.2 ஓவரிலேயே 154/3 ரன்களை எடுத்த திண்டுக்கல் 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.
இதையும் படிங்க: இங்கிலாந்தில் பும்ரா 5 போட்டியிலும் விளையாட மாட்டாரு.. அவங்கள வெச்சு ஜெய்ப்போம்.. கம்பீர், கில் அறிவிப்பு
கடந்த வருடம் கோப்பையை வென்ற அந்த அணி இம்முறையும் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையில் முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் பயணத்தை வெற்றிகரமாக துவக்கியுள்ளது. அத்துடன் புள்ளிப்பட்டியலில் முதல் அணியாக 2 புள்ளிகளை பதிவு செய்துள்ளது. மறுபுறம் கோவை அணி தங்களுடைய சொந்த மண்ணில் தோல்வியுற்றது.



