
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே மூன்றாம் தேதி சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற 52வது போட்டியில் சென்னையை 2 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு 214 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக விராட் கோலி 62, ஜேக்கப் பேத்தல் 55, ரொமாரியா செபார்டு 53* ரன்கள் எடுத்தனர்.
அடுத்ததாக விளையாடிய சிஎஸ்கே முடிந்தளவுக்கு 20 ஓவரில் 211/5 ரன்களை மட்டுமே எடுத்து தங்களுடைய 9வது தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக இளம் வீரர் ஆயுஸ் மாத்ரே 94, ரவீந்திர ஜடேஜா 77* ரன்கள் எடுத்த போதிலும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. மறுபுறம் 8வது வெற்றியை பெற்ற பெங்களூரு அணிக்கு அதிகபட்சமாக லுங்கி நிகிடி 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
முன்னதாக அந்தப் போட்டியில் ஆயுஸ் மாத்ரே – ரவீந்திர ஜடேஜா 114 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து சிஎஸ்கே அணியை வெற்றி பாதைக்கு அழைத்து வந்தனர். அப்போது ஆயுஸ் அவுட்டானதை தொடர்ந்து தேவால்ட் ப்ரேவிஸ் வந்தார். கடந்த போட்டிகளில் அதிரடியாக விளையாடிய அவர் நல்ல ஃபார்மில் இருப்பதால் இந்தப் போட்டியிலும் மிரட்டுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் லுங்கி நிகிடி வீசிய முதல் லோ புல் டாஸ் பந்தை அடிக்கத் தவறிய அவருக்கு எதிராக ஆர்சிபி அணியினர் எல்பிடபுள்யூ முறையில் அவுட் கேட்டார்கள். மறுபுறம் அது அவுட் இருக்காது என்று கருதிய பிரேவிஸ் ரன்கள் எடுப்பதற்காக ஓடி வந்தார். அதற்குள் நடுவர் கையை உயர்த்தி அவுட் வழங்கினார். அதனால் ப்ரேவிஸ் பெவிலியன் நோக்கி நடையைக் கட்டினார்.
அவரை நிறுத்திய ரவீந்திர ஜடேஜா ரிவியூ எடுக்கச் சொன்னார். அதைக் கேட்ட ப்ரேவிஸ் ரிவ்யூ எடுத்த போது 15 நொடிகள் முடிந்தது. அதனால் விதிமுறைப்படி உங்களுடைய ரிவ்யூவை ஏற்க முடியாது என்று நடுவர் சொன்னதால் ப்ரேவிஸ் ஏமாற்றத்துடன் சென்றார். கடைசியில் ரிப்ளையில் பார்த்த போது அது அவுட்டில்லை என்று தெரிய வந்தது சிஎஸ்கே ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியது.
இதையும் படிங்க: 14 பந்தில் 50.. தினேஷ் கார்த்திக் அந்த ஹெல்ப் பண்ணாரு.. சிஎஸ்கேவை சாய்த்த திட்டம் பற்றி செபார்ட்
ஏனெனில் வெறும் 2 ரன்னில் தோற்ற இந்தப் போட்டியில் அந்த முடிவு சிஎஸ்கே வெற்றியின் பறிபோக மற்றுமொரு காரணமாக அமைந்தது. அதை விட ராஜஸ்தானுக்கு எதிரான கடந்தப் போட்டியில் மும்பையின் ரோகித் சர்மா 15 நொடிகள் முடிந்த பின்பு தான் ரிவியூ எடுத்தார். ஆனால் அதை ஏற்றுக் கொண்ட 3வது நடுவர் தீர்ப்பையும் மாற்றி நாட் அவுட் வழங்கினார். ஆனால் அதே போல ப்ரேவிஸ் கடைசி நொடியில் ரிவ்யூ கேட்டும் அதை நடுவர்கள் ஏற்கக் கூட இல்லை. அதனால் அம்பயர்கள் மும்பைக்கு நியாயமும் சென்னைக்கு அநியாயமும் செய்துள்ளதாக சிஎஸ்கே ரசிகர்கள் ஆதாரத்துடன் விமர்சிக்கின்றனர். மேலும் சிஎஸ்கே அணிக்கு எதிராக விதிமுறையை சரியாக பின்பற்றிய நடுவர்கள் மும்பைக்கு எதிராக பின்பற்றாதது ஏன்? என்பதே ரசிகர்களின் குமுறலாக இருக்கிறது.