
ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. அதனால் 1 – 0* என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கும் இந்திய அணி அடுத்து நடைபெறும் பகல் இரவு போட்டியில் விளையாட தயாராகி வருகிறது. முன்னதாக முதல் போட்டியில் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் பெஞ்சில் அமர வைக்கப்பட்டது பலருக்கும் ஆச்சரியமாக அமைந்தது.
ஏனெனில் ஐசிசி டெஸ்ட் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் டாப் 2 இடங்களில் ஜொலிக்கும் அவர்கள் ஜோடியாக 850க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்துள்ளார்கள். இருப்பினும் சமீபத்திய நியூசிலாந்து தொடரில் அவர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மறுபுறம் அதே தொடரில் அசத்திய காரணத்தால் முதல் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அது விமர்சனங்களை ஏற்படுத்தினாலும் வாஷிங்டன் சுந்தரை வைத்து இந்திய அணி வெற்றியும் கண்டது. இந்நிலையில் கடந்த 10 வருடங்களில் சேனா வெளிநாடுகளில் அஸ்வின் – ஜடேஜா சேர்ந்து வெறும் ஒருமுறை மட்டுமே ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் எடுத்துள்ளதாக தேவங் காந்தி தெரிவித்துள்ளார். எனவே 2வது டெஸ்ட் போட்டியிலும் வாஷிங்டன் சுந்தர் விளையாடுவது சரியாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
முன்னாள் இந்திய வீரர் மற்றும் தேர்வாளரான அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஆஸ்திரேலிய சூழ்நிலைகளில் நீங்கள் கட்டுப்பாட்டை விரும்புவீர்கள். வாஷிங்டன் சுந்தர் தாக்கு பிடிக்க மாட்டார் என்று சொல்ல முடியாது. ஆனால் இந்தியாவின் பவுலிங் திட்டம் பும்ரா, சிராஜ், ஷமி, ராணாவை சுற்றியே இருக்கும். எனவே அங்கே அவர்கள் சோர்வாகும் போது இடையே பந்து வீசுவதே ஆஸ்திரேலியாவில் ஸ்பின்னர்களின் வேலையாகும்”
“அதே சமயம் உங்களுக்கு திடமான பேட்ஸ்மேன் தேவை. 2021 காபா போட்டியில் அசத்திய வாஷிங்டன் சுந்தர் பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியிலும் நன்றாக செயல்பட்டார். ஆஸ்திரேலிய பிரதமர் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியிலும் அசத்தியதால் அவர் தான் நம்முடைய முதன்மை ஸ்பின்னர். மொய்ன் அலி போல எதிரணியில் இடது கை பேட்ஸ்மேன்கள் இருக்கும் போது சுந்தர் போன்ற ஆஃப் ஸ்பின்னர்கள் அவர்களுக்கு சவாலை கொடுப்பார்கள்”
இதையும் படிங்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்வது மட்டுமல்ல.. அதையும் செய்யனும் – ஹர்பஜன் சிங்
“அஸ்வின் – ஜடேஜா ஆகிய உங்களுடைய முதன்மை ஸ்பின்னர்கள் சேர்ந்து 10 வருடங்களில் ஒருமுறை மட்டுமே 5 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்கள் என்பது பிரச்சனை. மேலும் பேட்டிங் என்று வரும் போது அவர்களை விட வாஷிங்டன் சுந்தர் டெக்னிக் நன்றாக இருக்கிறது” என்று கூறினார். அந்த வகையில் முதல் போட்டியில் வென்றதால் இரண்டாவது போட்டியிலும் சுந்தர் விளையாடுவதற்கே அதிக வாய்ப்புள்ளது.