வாழ்க்கையே காயமா, தெ.ஆ தொடரிலிருந்து வெளியேறும் நட்சத்திர பவுலர் – டி20 உ.கோ’யிலும் விலகல்? ரசிகர்கள் ஏமாற்றம்

IND vs SA Rishabh Pant Quiton De Kock Rohit Sharma
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் தோற்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது. முன்னதாக நடைபெற்ற டி20 தொடரை 2 – 1 என்ற கணக்கில் வென்ற ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை அணி விரைவில் துவங்கும் உலக கோப்பையில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுள்ளது. அதனால் ஷிகர் தவன் தலைமையில் இளம் வீரர்கள் பங்கேற்கும் இத்தொடரின் முதல் போட்டியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹர் பங்கேற்காதது நிறைய ரசிகர்களை குழம்ப வைத்தது.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் எடுத்த முதல் இந்திய பவுலர், சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய பவுலர் ஆகிய சாதனைகளைப் படைத்து உலக கோப்பையில் விளையாடும் முதன்மை பந்து வீச்சாளராக காத்திருந்த அவர் ஐபிஎல் தொடரின்போது சந்தித்த காயத்தால் 2 மாதங்கள் விலகினார். அதிலிருந்து குணமடைந்து ஜிம்பாப்வே தொடரில் களமிறங்கிய முதல் போட்டியிலேயே ஆட்ட நாயகன் விருது வென்று சிறந்த கம்பேக் கொடுத்த போதிலும் ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை அணிகளில் ஸ்டாண்ட் பை லிஸ்டில் மட்டுமே அவரால் இடம் பிடிக்க முடிந்தது. ஏனெனில் அவர் இல்லாத சமயத்தில் அர்ஷிதீப் சிங், ஹர்ஷல் படேல் சிறப்பாக செயல்பட்டு அவரது இடத்தை பிடித்து விட்டனர்.

- Advertisement -

வாழ்க்கையே காயமா:
முன்னதாக ஜிம்பாப்வே தொடரில் களமிறங்கினாலும் கடைசி 2 போட்டிகளில் காயத்தால் பங்கேற்காத அவர் ஆசிய கோப்பையில் இந்தியாவின் ஃபைனல் வாய்ப்பு பறிபோன பின் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஸ்டேண்ட் பை லிஸ்டில் இருந்து முதன்மை அணிக்கு கொண்டு வரப்பட்டு விளையாடினார். அதில் சிறப்பாக பந்து வீசிய அவருக்கு அதன்பின் நடந்த ஆஸ்திரேலிய டி20 தொடரில் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் படேல் ஆகியோர் வந்ததால் மீண்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இருப்பினும் அதன்பின் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் வெளியேறியதால் தென் ஆப்ரிக்க தொடரில் களமிறங்கிய அவர் பந்து வீச்சிலும் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு அசத்தினார். அதனால் உலக கோப்பையில் பும்ராவுக்கு மாற்றாக ஷமியை விட தீபக் சஹார் விளையாட தகுதியானவர் என்று முன்னாள் வீரர்களின் ஆதரவும் எழுந்தது. அந்த நிலைமையில் லக்னோவில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான வலைப்பயிற்சியில் கணுக்கால் காயத்தை சந்தித்த காரணத்தாலேயே அவர் பங்கேற்கவில்லை என்று தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

அதன் காரணமாக இத்தொடரின் எஞ்சிய 2 போட்டிகளிலும் அவர் பங்கேற்க மாட்டார் என்றும் அவருக்கு பதில் முகேஷ சவுத்ரி மற்றும் சேட்டன் சகாரியா ஆகியோர் நெட் பந்து வீச்சாளர்களாக உலககோப்பை அணியில் இணைவார்கள் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக பும்ராவுக்கு பதிலாக ஸ்டேண்ட் பை லிஸ்டில் இருந்து முதன்மை அணிக்கு தேர்வாகப்போகும் வீரராக கருதப்பட்ட அவர் தற்போது உலக கோப்பையிலிருந்து வெளியேறும் பரிதாப நிலையும் ஏற்பட்டுள்ளது.

ஒருவேளை உலகக் கோப்பையிலிருந்து வெளியேறவில்லை என்றாலும் இந்த கடைசி நேர காயத்தால் பும்ராவுக்கு பதில் மாற்று வீரரை தேர்வு செய்யப்படும் போது அவரை விட முஹம்மது ஷமிக்கு தான் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. இது பற்றி பிசிசிஐ நிர்வாகி ஒருவர் பேசியது பின்வருமாறு. “தீபக் சஹர் கணுக்கால் காயத்தை சந்தித்துள்ளார். இருப்பினும் அந்த காயம் பெரிய அளவில் இல்லை என்றாலும் சில நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே டி20 உலககோப்பை ஸ்டேண்ட் பை லிஸ்டில் இருக்கும் அவரை தென்னாபிரிக்க ஒருநாள் தொடரில் மேற்கொண்டு விளையாட வைத்து ரிஸ்க் எடுக்க வேண்டுமா என்பது அணி நிர்வாகத்தின் கையில் உள்ளது”

இதையும் படிங்க: எனக்கு 35 வயசாயிடுச்சி. இனிமே டெஸ்ட் போட்டிக்கு நோ சொன்ன – சி.எஸ்.கே அணியின் சர்வதேச வீரர்

“அதே சமயம் முகமது சமி ஃபிட்டாக இருக்கும் பட்சத்தில் தரமான பவுலரான இருக்கும் அவரே இந்திய அணியில் மாற்று வீரராக தேர்வு செய்யப்படுவார். அந்த வகையில் அடுத்த வாரம் அவர் உலக கோப்பை அணியுடன் இணைவார்” என்று கூறினார். இப்படி காயத்திலிருந்து குணமடைந்து உலக கோப்பையில் விளையாடும் வாய்ப்பை பிரகாசப்படுத்திய தீபக் சஹர் மீண்டும் கடைசி நேரத்தில் காயத்தால் விலகும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதை பார்க்கும் ரசிகர்கள் “உங்களுக்கு வாழ்க்கையே காயமா” என்ற வகையில் ஏமாற்றத்தையும் தெரிவிக்கின்றனர்.

Advertisement