கையில் இருந்த வெற்றியை டெல்லியிடம் கோட்டை விட்ட மும்பை – இந்த ராசி தான் தோல்விக்கு காரணமாம்

MI V DC IPL 2022
- Advertisement -

ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் மார்ச் 26ம் தேதியன்று மும்பை வான்கடே மைதானத்தில் கோலாகலமாக துவங்கியது. மொத்தம் 10 அணிகள் பங்குபெறும் இந்த தொடரில் 74 போட்டிகள் வரும் மே 29-ஆம் தேதி வரை ரசிகர்களுக்கு விருந்து படைக்க உள்ளது. இந்த போட்டியின் 2-வது நாளில் 2 போட்டிகள் நடைபெற்ற நிலையில் மதியம் நடைபெற்ற முதல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

DC vs MI

- Advertisement -

மும்பையில் உள்ள ப்ராபோர்ன் மைதானத்தில் 3.30 மணிக்கு நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை அணிக்கு அதிரடி தொடக்க வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிசான் ஆகியோர் 67 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர்.

மிரட்டிய இஷான் கிசான்:
இதில் 32 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்கள் உட்பட 41 ரன்கள் எடுத்திருந்தபோது ரோகித் சர்மா அவுட்டாக அடுத்து வந்த அன்மொல்பீரிட் சிங் 8 ரன்களில் நடையைக் கட்டினார். அடுத்து களமிறங்கிய வெளிநாட்டு வீரர்கள் கைரன் பொல்லார்ட் 3 ரன்கள் மற்றும் டிம் டேவிட் 12 ரன்கள் என அடுத்தடுத்து டெல்லி அணியின் அபார பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். இதனால் 122/4 என மும்பை தடுமாறிக் கொண்டிருந்த நிலையில் மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாக விளையாடி வந்த மற்றொரு தொடக்க வீரர் இஷான் கிசான் ஆரம்பத்தில் மெதுவாக விளையாடி அதன்பின் அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்தார்.

Ishan kishan

கடைசி நேரத்தில் டெல்லி பந்துவீச்சாளர்களை பிரித்து மேய்ந்து அவர் 48 பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்கள் உட்பட 81* ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சமீபத்தில் நடந்த ஏலத்தில் 15.50 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு ஒப்ந்தமாகி சாதனை படைத்த அவரின் அதிரடியால் தப்பிப் பிழைத்த மும்பை 20 ஓவர்களில் 177/5 ரன்கள் எடுத்தது. டெல்லி சார்பில் பந்துவீச்சில் அசத்திய குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும் கலீல் அஹ்மது 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

- Advertisement -

வெற்றியை கோட்டை விட்ட மும்பை:
இதை தொடர்ந்து 178 என்ற இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு டிம் ஷைபர்ட் 21 (14) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த மந்தீப் சிங் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இதனால் 30/2 என சரிந்த டெல்லியை காப்பாற்றுவார் என எதிர்பார்த்த கேப்டன் ரிஷப் பண்ட் 1 ரன்னில் அவுட்டாகி மேலும் அதிர்ச்சி அளித்தார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து விளையாடி வந்த மற்றொரு தொடக்க வீரர் பிரிதிவி ஷா 24 பந்துகளில் 38 ரன்கள் எடுத்திருந்தபோது முக்கியமான நேரத்தில் ஆட்டமிழந்தார். போதாகுறைக்கு பினிசெராக களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் ரோமன் போவல் டக் அவுட்டானதால் 72/5 என டெல்லி திண்டாடியதால் மும்பையின் வெற்றி உறுதி என அனைவரும் நினைத்தனர்.

DC Axar Patel Lalit Yadav

ஆனால் அப்போது களமிறங்கிய ஷார்துல் தாகூர் வெறும் 11 பந்துகளில் 4 பவுண்டரிகளை பறக்கவிட்டு முக்கியமான 22 ரன்களை எடுத்தார். இதனால் 104/6 என தடுமாறிய டெல்லி நிச்சயம் வெற்றி பெறாது என அனைவரும் நினைத்த வேளையில் ஜோடி சேர்ந்த இளம் வீரர் லலித் யாதவ் மற்றொரு வீரர் அக்ஷர் பட்டேல் உடன் இணைந்து கடைசி நேரத்தில் மும்பை பந்துவீச்சாளர்களை சரமாரியாக அடித்தார். அவருக்கு உறுதுணையாக நின்ற அக்சர் பட்டேல் கொடுத்த ஒரு கேட்ச்சை முக்கியமான நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் வீரர் டிம் டேவிட் கோட்டை விட்டார்.

- Advertisement -

அதனால் அடுத்த ஒருசில பந்துகளில் யாருமே எதிர்பாராத வண்ணம் மும்பைக்கு மிகப் பெரிய தொல்லையாக அவர் மாறினார் என்றே கூறலாம். ஏனெனில் கடைசி 5 ஓவரில் மும்பை பவுலர்களை ரவுண்டு கட்டி அடித்த இந்த ஜோடி 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உட்பட 75* ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து டெல்லி அணிக்கு நினைத்து பார்க்க முடியாத 4 விக்கெட் வித்தியாசத்திலான திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார்கள். இதில் லலித் யாதவ் 48* (38) ரன்கள் எடுக்க அவருடன் 17 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் உட்பட 38* ரன்களை அக்சார் படேல் எடுத்தார்.

MI

முட்டுக்கொடுக்கும் மும்பை ரசிகர்கள்:
இந்த த்ரில் வெற்றியின் வாயிலாக புள்ளிப் பட்டியலில் 2 புள்ளிகளைப் பெற்றுள்ள டெல்லி ஐபிஎல் 2022 தொடரை வெற்றியுடன் தொடங்கியது. மறுபுறம் மும்பை சார்பில் பேசில் தம்பி 3 விக்கெட்டுகளையும் முருகன் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் எடுத்து சிறப்பாக பந்து வீசிய போதிலும் கடைசி நேரத்தில் டானியல் சம்ஸ் போன்ற பவுலர்கள் படு மோசமாக பந்துவீசி ரன்களை வாரி வழங்கியதால் கையிலிருந்த வெற்றியை கோட்டை விட்ட மும்பை இந்தியன்ஸ் இந்த வருடம் ஐபிஎல் தொடரை தோல்வியுடன் துவங்கியுள்ளது.

- Advertisement -

இருப்பினும் இது முதல் போட்டி என்பதால் மும்பை தோல்வி பெற்றதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை என மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் முட்டுக் கொடுத்து வருகிறார்கள். ஏனெனில் 2013 முதல் இதுவரை கடந்த 10 வருடங்களாக அந்த அணி பங்கேற்ற தனது முதல் லீக் போட்டியில் இதுபோல தொடர்ச்சியாக தோல்வி அடைந்து வருகிறது.

இதையும் படிங்க : தோல்விக்கு அபராதம், அதற்கு சரிப்பட்டு வரமாட்டார் என ரோஹித்தை கலாய்க்கும் ரசிகர்கள் – என்ன நடந்தது?

இருப்பினும் கூட இந்த காலகட்டங்களில் 5 கோப்பைகளை வென்றுள்ள அந்த அணி ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணியாக சாதனை படைத்துள்ளது. எனவே இந்த தோல்வியை நினைத்து எங்களுக்கு பயம் இல்லை எனக் கூறும் மும்பை ரசிகர்கள் இந்த வருடம் நாங்கள் கோப்பையை மீண்டும் வெல்லப் போவது உறுதி என கெத்தாக பேசி வருகின்றனர்.

Advertisement