ஐபிஎல் 2024 தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியின் கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கையில் ஒப்படைத்த எம்எஸ் தோனி சாதாரண விக்கெட் கீப்பராக விளையாட வருகிறார். மேலும் 42 வயதில் கடந்து விட்ட அவர் லேசான முழங்கால் வலியை கொண்டுள்ளார். அதனால் பேட்டிங்கில் கடைசி சில ஓவர்களில் களமிறங்கும் அவர் ஓரிரு பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு வருகிறார்.
ஆனால் கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது என்பது போல் கடைசி நேரத்தில் களமிறங்கினாலும் இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 136 ரன்களை 226.67 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்துள்ளார். குறிப்பாக 11 பவுண்டரி அடித்துள்ள அவர் 12 சிக்ஸர்களை பறக்க விட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்த 13 போட்டிகளில் 2 முறை மட்டுமே அவுட்டான அவர் இப்போதும் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனாகவே திகழ்கிறார்.
சிக்ஸர்களின் ரகசியம்:
அந்த வகையில் வயதானாலும் தம்முடன் பிறந்த ஸ்டைல் மாறாது என்பதை தோனி நிரூபித்து வருகிறார் என்றே சொல்லலாம். அத்துடன் தோனி இப்படி சிக்ஸர்களை அடிப்பதற்கு சுமார் 20 வருடங்களாக அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாடிய அவருடைய அனுபவமே காரணம் என்று சொல்லலாம். இந்நிலையில் அனுபவத்தை தாண்டி அற்புதமான ஃபிட்னஸ் காரணமாகவே தோனி இப்படி சிக்சர்களை அடிப்பதாக ராயுடு பாராட்டியுள்ளார்.
இதற்காக கடந்த 2 வருடங்களாக உடல்பயிற்சிக் கூடத்தில் தோனி கடுமையான பயிற்சிகளை எடுத்ததை தாம் பார்த்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “கடந்த இரண்டு வருடங்களாக உடற்பயிற்சி கூடத்தில் தோனி மிகவும் கடினமாக உழைத்து வருகிறார். நிறைய பளுத் தூக்கும் அவர் காயத்திலிருந்து குணமடைய நேரத்தை செலவிட்டார். மீண்டும் காயமடையாமல் இருக்க முயற்சிக்கும் அவர் தசைகள் மற்றும் உடலை கவனித்துக் கொள்கிறார்”
“அதை விட அவர் வலைப் பயிற்சியில் அதிக நேரம் பேட்டிங் செய்கிறார். அதுவே அவரை களத்தில் நிறைய சிக்ஸர்கள் அடிப்பதற்கு தூண்டுகிறது என்று நான் கருதுகிறேன்” என ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசினார். இந்த நிலையில் ருதுராஜ் தலைமையில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை 7 வெற்றிகளை பதிவு செய்துள்ளது.
இதையும் படிங்க: விராட் கோலியை ஃசெல்பிஷ்ன்னு சொன்னது சரி தான்.. பிரைன் லாரா இதை செய்வாரு.. ஹைடன் கருத்து
அதனால் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் இருக்கும் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல கடைசிப் போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அந்த நிலையில் பெங்களூரு அணியை தங்களுடைய கடைசி போட்டியில் சென்னை எதிர்கொள்கிறது. அதில் வெற்றி பெற்று ருதுராஜ் தலைமையில் முதல் வருடத்திலேயே சென்னை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.



