ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 24ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் 66வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து முதலில் விளையாடிய பஞ்சாப் அபாரமாக பேட்டிங் செய்து 20 ஓவரில் 206/8 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 53, ஜோஸ் இங்லிஷ் 32 ரன்கள் எடுத்தனர்.
கடைசியில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 44* (16) ரன்களை விளாசி அதிரடியான ஃபினிஷிங் கொடுத்தார். டெல்லிக்கு அதிகபட்சமாக முஸ்தபிசுர் ரகுமான் 2 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்து விளையாடிய டெல்லிக்கு 55 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்த கேஎல் ராகுல் 35 (21) ரன்னில் அவுட்டானார்.
டெல்லி அசத்தல்:
அவருடன் சேர்ந்து விளையாடிய டு பிளேஸிஸ் 23 (15) ரன்களில் அவுட்டானார். அடுத்ததாக வந்த கருண் நாயர் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடி முக்கியமான 44 (27) ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய செதிக்குல்லா அட்டல் 22 (16) ரன்கள் அடித்து ஃபெவிலியன் திரும்பினார்.
மிடில் ஆர்டரில் அவர்கள் அனைவரையும் விட அடித்து நொறுக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்திய சமீர் ரிஸ்வி தம்முடைய முதல் அரை சதத்தை அடித்து 58* (25) ரன்கள் விளாசினார். இறுதியில் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 18* (14) ரன்கள் எடுத்ததால் 19.3 ஓவரில் 208/4 ரன்களை எடுத்த டெல்லி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே லீக் சுற்றுடன் வெளியேறிய டெல்லி 6வது ஆறுதல் வெற்றியைப் பெற்று இத்தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்தது.
பஞ்சாப் பரிதாபம்:
அத்துடன் தங்களுடைய வரலாற்றில் 2வது முறையாக 200 ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்து டெல்லி அசத்தியது. மறுபுறம் பஞ்சாப் அணிக்கு ஹர்ப்ரீத் ப்ரார் 2 விக்கெட்டுகள் எடுத்தும் 4வது தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. இதையும் சேர்த்து அந்த அணி மொத்தம் 7 முறை 200+ ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் தோல்வியை சந்தித்துள்ளது.
இதையும் படிங்க: கில்லை 2 வருடம் ஐபிஎல்ல பாத்துருக்கேன்.. இளம் இந்திய அணி ஸ்ட்ராங்கா தான் இருக்கு.. மோர்கன் பேட்டி
இதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் அதிக முறை 200+ ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் தோல்வியை சந்தித்த அணி என்ற மோசமான சாதனையை பஞ்சாப் படைத்துள்ளது. இதற்கு முன் பெங்களூரு அணி 6 முறை 200+ ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் தோற்றதே முந்தைய சாதனை. மேலும் ஐபிஎல் வரலாற்றில் அதிக (4) முறை 200+ ரன்களை (223, 261, 245, 206) கட்டுப்படுத்த முடியாமல் தோல்வியை சந்தித்த முதல் கேப்டன் என்ற மோசமான சாதனையை ஸ்ரேயாஸ் ஐயர் படைத்துள்ளார். இதற்கு முந்தைய மோசமான சாதனை – தோனி, டு பிளேஸிஸ், சுப்மன் கில் (தலா 3 முறை).



