இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்து மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை அங்கமாக நடைபெறும் அத்தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள அந்த அணியில் சாய் சுதர்சன் உள்ளிட்ட இளம் வீரர்கள் இடம் பெற்றுள்ளார்கள்.
சமீபத்தில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெற்றனர். அவர்களுடன் சேர்த்து ஷமியை கழற்றி விட்டுள்ள பிசிசிஐ புதிய இளம் அணியை அறிவித்துள்ளது. ஆனால் வரலாற்றில் சச்சின் டெண்டுல்கர் முதல் விராட் கோலி வரை பல ஜாம்பவான்கள் விளையாடியும் இங்கிலாந்து மண்ணில் இந்தியா தொடர்ச்சியாக பெரிய வெற்றிகளைப் பெற்றதில்லை.
இளம் இந்திய அணி:
2007ஆம் ஆண்டு கடைசியாக ராகுல் டிராவிட் தலைமையில் இங்கிலாந்து மண்ணில் வென்ற இந்தியா தற்போது இளம் வீரர்களுடன் களமிறங்க உள்ளது. அதனால் இம்முறையும் இங்கிலாந்து மண்ணில் இந்தியா வெற்றி பெறுவது சந்தேகமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக வெளிநாட்டு மண்ணில் சுப்மன் கில் எப்போதுமே தொடர்ச்சியாக பெரிய ரன்கள் குவித்து அசத்தியதில்லை.
அப்படிப்பட்ட அவருடைய தலைமையில் சவாலான இங்கிலாந்து மண்ணில் இளம் இந்திய அணி 2007க்குப்பின் கோப்பையை வெல்லுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். இந்நிலையில் தற்போதைய இளம் இந்திய அணி அனுபவத்தில் குறைந்திருந்தாலும் திறமையில் வலுவானதாக இருப்பதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் கூறியுள்ளார். மேலும் கொல்கத்தா ஐபிஎல் அணியில் கேப்டனாக இருந்த போது சுப்மன் கில் திறமையைப் பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மோர்கன் கருத்து:
எனவே கில் கேப்டனாக செயல்படத் தகுதியானவர் என்று தெரிவிக்கும் மோர்கன் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இப்போதும் இது மிக மிக வலுவான அணியாகவே இருக்கிறது. கேப்டன்ஷிப் பொறுத்த வரை இது சரியான முடிவு என்று நான் நினைக்கிறேன். சில வருடங்களுக்கு முன்பாக ஐபிஎல் தொடரில் நான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சுப்மன் கில்லுடன் சேர்ந்து விளையாடியுள்ளேன்”
இதையும் படிங்க: 15 டெஸ்டில் வெறும் 25.. தகுதியற்ற சுப்மன் கில்லை இதனால தான் கேப்டனாக போட்ருக்காங்க.. ஆகாஷ் சோப்ரா
“அங்கே அவர் இயற்கையாகவே லீடராக இருப்பதைப் பார்த்துள்ளேன். அணிக்குள்ளேயே பொறுப்பை எடுத்துக் கொள்ளும் அவர் முறைகள் பற்றி கேள்வி எழுப்புவதற்கு கவலைப்பட மாட்டார். அனைத்தையும் தாண்டி வெற்றி பெற வேண்டும் என்பதே அவருடைய முக்கியமான இலக்காக இருக்கும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து கில் தலைமையில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய பயணத்தை துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.



