இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்து டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். அதைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
அந்தத் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இத்தனைக்கும் வெளிநாட்டு மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடியதில்லை. அதனால் முதலில் அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைப்பதே கடினம் என்று முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் விமர்சித்திருந்தார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது சில ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தகுதி இல்ல தான்:
இந்நிலையில் வெளிநாட்டு மண்ணில் 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கில் வெறும் 25 என்ற மோசமான சராசரியைக் கொண்டுள்ளதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். எனவே கேப்டனாக செயல்படும் அளவுக்கு அவருக்கு தகுதி கிடையாது என்று அவர் கூறியுள்ளார். இருப்பினும் வருங்காலத்தில் அசத்துவார் என்ற நம்பிக்கையுடன் அவரை தேர்வுக்குழு கேப்டனாக நியமித்துள்ளதாகவும் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்கு நிறைய சவால்கள் இருக்கிறது. ஒருநாள் கிரிக்கெட்டில் குறிப்பிட்ட காலம் அவர் துணைக் கேப்டனாக இருப்பதால் பிரச்சனை இல்லை. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாட்டு மண்ணில் எந்த இடம் பொருத்தமாக இருக்கும் என்பதையே இன்னும் அவர் தேடிக் கொண்டிருக்கிறார். அவருடைய டெஸ்ட் பேட்டிங் சராசரி 35”
நம்பிக்கை அடிப்படையில்:
“வெளிநாட்டு மண்ணில் வெறும் 25. ஒரு பேட்ஸ்மேனாக அது நல்ல ரெகார்ட் கிடையாது. எனவே இது நம்பிக்கையை மையமாக வைத்து செய்யப்பட்ட முதலீடாக நான் பார்க்கிறேன். நீங்கள் ஒருவரைப் பார்த்து அவருடைய திறமையை நம்பி வருங்காலத்தில் அசத்துவார் என்ற எதிர்பார்ப்புடன் இந்த முடிவை எடுத்துள்ளீர்கள். வெளிநாட்டு மண்ணில் அவர் இதுவரை 15 டெஸ்ட் போட்டியில் விளையாடினார்”
இதையும் படிங்க: 206 ரன்ஸ்.. டெல்லியை விளாசிய பஞ்சாப்.. 200 ரன்ஸ் அடிப்பதில் மாபெரும் உலக சாதனை சமன்
“அந்தப் போட்டிகளில் அவருக்கு தாம் விரும்பும் இடத்தில் பேட்டிங் செய்வதற்கான வாய்ப்பு வாரி வழங்கப்பட்டது. துவக்க வீரராக இருந்த அவருக்கு போட்டியாக ஜெய்ஸ்வால் வந்தார். அதனால் அவர் மூன்றாவது இடத்தில் விளையாட விரும்புவதாக தெரிவித்தார். எப்படி இருந்தாலும் வெறும் 15 போட்டியில் விளையாடிய ஒருவரை நீங்கள் கேப்டனாக விரும்ப மாட்டீர்கள். நிச்சயம் இது அணி நிர்வாகத்தின் முடிவாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.



