IND vs AFG : அதிரடியான சதம் விளாசிய ரோஹித்துக்கு அமைதியாக வாழ்த்து சொன்ன டேவிட் வார்னர் – விவரம் இதோ

Warner-and-Rohit
- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று டெல்லி அருண் ஜேட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அவர்களை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்களை குவித்தது.

பின்னர் 273 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 35 ஓவர்களிலேயே 2 விக்கெட்டை மட்டும் இழந்து 273 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக விளையாடிய துவக்க வீரர் ரோகித் சர்மா 84 பந்துகளை சந்தித்து 16 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர் என 131 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்ததோடு மட்டுமின்றி உலகக் கோப்பை வரலாற்றில் பல்வேறு சாதனைகளை முறியடித்தார்.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணி சார்பாக உலக கோப்பையில் அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை நேற்று ரோகித் சர்மா படைத்தார். அந்த வகையில் 63 பந்துகளை சந்தித்த ரோகித் சர்மா நேற்று சதம் விளாசி அசத்தியிருந்தார்.

அதோடு உலகக்கோப்பை தொடர்களில் அதிக சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கரிடம் இருந்து பறித்த ரோகித் தற்போது ஏழு சதங்களை அடித்து உலகக்கோப்பை போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த இந்திய வீரராக தனது பெயரை பதித்துள்ளார். அதோடு வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் வீரரான கிரிஸ் கெயிலை மிஞ்சி 555 சிக்ஸர்கள் விளாசி சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸரை அடித்த வீரர் என்ற சாதனையும் ரோகித் படைத்துள்ளார்.

- Advertisement -

அதுமட்டும் இன்றி உலகக் கோப்பை போட்டிகளில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையில் முதலிடத்தில் இருக்கும் டேவிட் வார்னருடன் ரோகித் சர்மா தற்போது இணைந்துள்ளார். இருவருமே 19 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை பூர்த்தி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாக்கு எதிரான போட்டியில் டக் அவுட்டாகி இருந்தாலும் நேற்றைய போட்டியில் சதம் அடித்து தனது பார்மை மீண்டும் ரோஹித் சர்மா நிரூபித்துள்ளார். அதோடு அடுத்ததாக அக்டோபர் 14-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெறவிருக்கும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட இருக்கிறார்.

இதையும் படிங்க : IND vs AFG : 4 விக்கெட் எடுத்தாலும் எனக்கு திருப்தியில்ல. என்னோட போகஸ்ஸே வேற – ஜஸ்ப்ரீத் பும்ரா பேட்டி

இந்நிலையில் நேற்றைய அதிரடியான சதத்திற்கு பின்னர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ள ரோஹித் சர்மா அதில் : அடுத்து அகமதாபாத் தான் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவிற்கு பதிலளித்த ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வார்னர் “வெல் பிளேயிடு சார்” என கைகளை உயர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். வார்னரின் இந்த ரிப்ளையானது தற்போது இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement