பூரானின் 91 ரன்ஸ் போராட்டத்தை.. 17 பந்தில் முடித்த மில்லர்.. பொல்லார்ட் அணியை எலிமினேட் செய்தது எப்படி?

David Miller
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்று வரும் கரீபியன் பிரீமியர் லீக் 2024 டி20 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதில் அக்டோபர் 2ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 4.30 மணிக்கு எலிமினேட்டர் போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் லீக் சுற்றில் 3, 4வது இடங்களைப் பிடித்த ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் மோதின.

அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ட்ரின்பாகோ முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு சுனில் நரேன் 2 ரன்களில் அவுட்டானார். ஆனால் அடுத்து வந்த நம்பிக்கை நட்சத்திரம் நிக்கோலஸ் பூரான் தனது ஸ்டைலில் அதிரடியாக விளையாடினார். அவருடன் சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த மற்றொரு துவக்க வீரர் 25 (17) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

நிக்கோலஸ் பூரான் அதிரடி:

ஆனால் மறுபுறம் தொடர்ந்து அசத்திய பூரான் அரை சதமடித்து வேகமாக ரன்கள் குவித்தார். அடுத்ததாக வந்த கேப்டன் கைரன் பொல்லார்ட் தடுமாற்றமாக விளையாடி 17 (18) ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் கடைசி வரை அவுட்டாகாத நிக்கோலஸ் பூரான் 6 பவுண்டரி 5 சிக்சருடன் 91* (60) ரன்களும் ஆண்ட்ரே ரசல் 20* (18) ரன்களும் எடுத்தனர்.

அதனால் 19.1 ஓவரில் ட்ரின்பாகோ அணி 168-3 ரன்கள் எடுத்திருந்த போது மழை வந்ததால் போட்டி நிறுத்தப்பட்டது. பார்படாஸ் அணிக்கு தீக்சனா, நவீன்-உல்-ஹக், ராமோன் சிமண்ட்ஸ் தலா 1 விக்கெட் எடுத்தனர். அதைத் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழை ஒரு வழியாக ஒதுங்கியது. அப்போது பார்படாஸ் வெற்றி பெறுவதற்கு 5 ஓவரில் 60 ரன்கள் தேவை என்ற புதிய இலக்கு டிஎல்எஸ் விதிமுறைப்படி உருவாக்கப்பட்டது.

- Advertisement -

மில்லர் மிரட்டல்:

அதைத் துரத்திய பார்படாஸ் அணிக்கு முதல் ஓவரிலேயே சுனில் நரேன் சுழலில் குவிண்டன் டீ காக் 4 (2) ரன்களில் அவுட்டானார். ஆனால் அடுத்ததாக வந்த டேவிட் மில்லர் தனது ஸ்டைலில் அதிரடியாக வெளுத்து வாங்கினார். அந்த வகையில் மிரட்டலாக பேட்டிங் செய்த அவர் 3 பவுண்டரி 5 சிக்சருடன் வெறும் 17 பந்துகளில் 50* ரன்களை 294.12 ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து தனியாளாக அற்புதமான ஃபினிஷிங் கொடுத்தார்.

இதையும் படிங்க: 0 கோப்பை 2 ராஜினாமா.. விராட் கோலியை போல பாபர் அசாம் எடுத்த முடிவால் தப்பிய.. ரோஹித் உலக சாதனை

அவருடன் கேப்டன் ரோவ்மன் போவல் 9* (8) ரன்கள் எடுத்ததால் 4.2 ஓவரிலேயே 64-1 ரன்கள் எடுத்த பார்படாஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனால் பொல்லார்ட் தலைமையிலான ட்ரின்பாகோ அணியை இத்தொடரிலிருந்து நாக் அவுட் செய்த பார்படாஸ் குவாலிபயர் 2 போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த வெற்றியை பேட்டிங்கில் கிட்டத்தட்ட தனியாளாக பெற்றுக் கொடுத்த டேவிட் மில்லர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Advertisement