பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்சமத்தில் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. குறிப்பாக பாபர் அசாம் தலைமையில் 2022 டி20 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வேவிடம் முதல் முறையாக பாகிஸ்தான் அவமானத் தோல்வியை சந்தித்தது. அதன் பின் 2023 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானிடம் முதல் முறையாக தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. அதற்கிடையே 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பையின் இந்திய அணியிடம் பாகிஸ்தான் படுதோல்விகளை சந்தித்தது.
அந்தத் தோல்விகளுக்கு பொறுப்பேற்று கேப்டன்ஷிப் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக பாபர் அசாம் அறிவித்தார். அதைத்தொடர்ந்து ஷாஹீன் அப்ரிடி புதிய டி20 கேப்டனாக அறிவிக்கப்பட்டார். ஆனால் அவருடைய தலைமையில் நியூசிலாந்து மண்ணில் நடைபெற்ற டி20 தொடரிலும் பாகிஸ்தான் படுதோல்வியை சந்தித்தது. அதனால் அவரை ஒரே தொடருடன் நீக்கிய பாகிஸ்தான் வாரியம் பாபர் அசாமை மீண்டும் கேப்டனாக அறிவித்தது.
விராட் கோலி போல:
அதைத் தொடர்ந்து பாபர் அசாம் தலைமையில் 2024 டி20 உலகக் கோப்பையில் கத்துக்குட்டி அமெரிக்காவிடம் சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் அவமானத் தோல்வியை சந்தித்தது. அத்துடன் பரம எதிரி இந்தியாவிடம் மீண்டும் வெறும் 120 ரன்கள் அடிக்க முடியாமல் பாகிஸ்தான் மண்ணைக் கவ்வியது. இந்தத் தொடர் தோல்விகளுக்கு பாபர் அசாம் பேட்டிங்கில் பெரிய ரன்கள் குவிக்காதது முக்கிய காரணமாக அமைந்தது.
அதன் காரணமாக தற்போது பாகிஸ்தான் வெள்ளைப்பந்து அணிகளின் கேப்டன்ஷிப் பதவிகளை ராஜினாமா செய்வதாக பாபர் அசாம் எந்த கோப்பையும் வெல்லாமல் 2வது முறையாக அறிவித்துள்ளார். குறிப்பாக கேப்டன்ஷிப் அழுத்தம் ஒரு பேட்ஸ்மேனாக தனது செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக அவர் கூறியுள்ளார். எனவே கேப்டன்ஷிப் அழுத்தமின்றி சுதந்திரமாக விளையாட இந்த முடிவை எடுத்துள்ளதாக பாபர் அசாம் அறிவித்துள்ளார்.
தப்பிய ரோஹித் சாதனை:
கடந்த 2019க்குப்பின் சதமடிக்காததால் இந்தியாவின் நாயகன் விராட் கோலி விமர்சனங்களை சந்தித்தார். அப்போது பணிச்சுமையை குறைப்பதற்காக டெஸ்ட் கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்த விராட் கோலி 2021 ஆசிய கோப்பையில் சதமடித்து மீண்டும் பட்டைய கிளப்பி வருகிறார். தற்போது விராட் கோலி எடுத்த அதே முடிவை பாபர் அசாம் எடுத்துள்ளார் என்றே சொல்லலாம்.
இதையும் படிங்க: என்ன நடந்தாலும் பாத்துக்கலாம்.. ரோஹித் சொன்ன அந்தவொரு வார்த்தை தான் வெற்றிக்கு காரணம் – அஷ்வின் பகிர்வு
அவருடைய இந்த முடிவால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன் என்ற ரோஹித் சர்மாவின் உலக சாதனை தப்பியது. ஏனெனில் 2024 டி20 உலகக் கோப்பையுடன் ஓய்வு பெற்ற ரோகித் சர்மா 62 போட்டிகளில் 49 வெற்றிகளுடன் அதிக வெற்றிகளை பெற்ற கேப்டனாக சாதனை படைத்துள்ளார். தற்போது 85 போட்டிகளில் 48 வெற்றிகளுடன் கேப்டனாக பாபர் அசாம் விடை பெற்றுள்ளதால் அந்த சாதனை இந்தியாவின் ரோகித் சர்மா பெயரிலேயே தொடர உள்ளது.