
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே அண்மையில் நடைபெற்று முடிந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணியானது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது. இந்திய மண்ணில் இதுவரை ஒருநாள் தொடரை கைப்பற்றாமல் இருந்த நியூசிலாந்து அணியானது முதல் முறையாக இப்படி இந்திய அணியை வீழ்த்தி பெற்ற இந்த வெற்றி அந்த அணிக்கு மாபெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளையில் இந்திய அணி அதன் சொந்த மண்ணில் அடைந்த தோல்வி ரசிகர் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஜனவரி 21-ம் தேதியான இன்று முதல் துவங்கி நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் இந்த டி20 தொடருக்கு முன்னதாக ஒருநாள் போட்டிகளுக்கான புதிய பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலை ஐசிசி தற்போது வெளியிட்டுள்ளது. அப்படி வெளியிட்டுள்ள புதிய பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் அண்மையில் முதலிடத்தை பிடித்திருந்த இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியை பின்னுக்கு தள்ளி தற்போது நியூசிலாந்து வீரர் முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.
அதுகுறித்த விவரம் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் இந்திய அணிக்கு எதிரான இந்த மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 2 சதம் மற்றும் ஒரு அரைசதம் என 352 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதினை பெற்ற டேரல் மிட்சல் தற்போது புள்ளி பட்டியலில் முதலிடத்தினை பிடித்துள்ளார்.
ஐசிசி வெளியிட்டுள்ள பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து வீரர் டேரல் மிட்சல் 845 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார். அதன் காரணமாக ஏற்கனவே கடந்த சில நாட்களாக முதலிடத்தில் இருந்த விராட் கோலி தற்போது இரண்டாம் இடத்திற்கு சறுக்கியுள்ளார்.
இதையும் படிங்க : 10 வருட தோல்விகளை தாண்டி.. ஒருவழியா இந்தியாவுக்காக இந்த வாய்ப்பு கிடைச்சுருக்கு.. சாம்சன் நெகிழ்ச்சி
அவருக்கு அடுத்து மூன்றாம் இடத்தில் இருந்த ரோகித் சர்மா ஒரு இடம் சறுக்கி நான்காம் இடத்தை பிடித்துள்ளார். அதேவேளையில் ரோகித் சர்மா இழந்த மூன்றாம் இடத்தை ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹீம் ஜாத்ரான் பிடித்துள்ளார். இந்திய வீரர்கள் சார்பாக சுப்மன் கில் ஐந்தாவது இடத்திலும், கே.எல் ராகுல் பத்தாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.