
இந்திய கிரிக்கெட் அணி கௌகாத்தியில் நடைபெற்ற தெனாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது போட்டியில் படுதோல்வியை சந்தித்தது. அதனால் 2 – 0 (2) என்ற கணக்கில் தென்னாபிரிக்கா 25 வருடங்கள் கழித்து இந்தியாவில் டெஸ்ட் தொடரை வென்றது. அந்த மமதையில் தென்னாபிரிக்கா அணியின் பயிற்சியாளர் சுக்ரி கொஞ்சம் ஆணவத்துடன் பேசியுள்ளது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
அதாவது 2வது போட்டியில் 4வது நாளில் தென்னாப்பிரிக்கா போதுமான அளவுக்கு முன்னிலை பெற்றும் டிக்ளர் செய்யத் தாமதப்படுத்தியது. அது பற்றி கேட்டதற்கு இந்திய அணியை க்ரோவெல் செய்ய விரும்பியதாலயே தாமதமாக டிக்ளேர் செய்ததாக சுக்ரி தெரிவித்தார். அதாவது ஆங்கிலத்தில் க்ரோவெல் என்ற சொல்லுக்கு பல இழிவான பொருட்கள் உள்ளது.
குறிப்பாக 1976ஆம் ஆண்டு இங்கிலாந்து கேப்டன் டோனி கிரைக் வெஸ்ட் இண்டீஸை தோற்கடித்து க்ரோவெல் செய்ய விரும்புவதாக அதாவது அடிமையாக்க விரும்புவதாக இனவெறியை தூண்டும் வகையில் பேசினார். அதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரத்தம் கொதிப்பதாக கேப்டன் க்ளைவ் லாய்ட் அவருக்கு பதிலடி கொடுத்தார். அந்த வெறியுடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 3 – 0 (3) என்ற கணக்கில் இங்கிலாந்தை தோற்கடித்து கிரைக் முகத்தில் கரியைப் பூசியது.
அந்த நிலைமையில் இந்திய அணியை வெற்றியை நெருங்க விடாமல் க்ரோவெல் செய்து, கடைசி நாளில் முடிந்தால் தாக்கு பிடித்துக் கொள்ளுங்கள் என்று சவால் விட விரும்பியதாலேயே தாமதமாக டிக்ளர் செய்ததாக சுக்ரி தெரிவித்தார். அதே சமயம் இனவெறி அல்லது வேறு சர்ச்சையான பொருளில் தாம் அந்த வார்த்தையைப் பயன்படுத்தவில்லை என்றும் அவர் தெளிவுப்படுத்தினார்.
இருப்பினும் வஞ்சப்புகழ்ச்சி அணியைப் போல இந்தியாவை அவமதிக்கும் வகையில் பேசிய அவரை அனில் கும்ப்ளே, பார்திவ் பட்டேல் போன்ற முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவை இப்படி அவமதிக்கும் வகையில் சுக்ரி பேசியிருக்கக்கூடாது என்று முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் டேல் ஸ்டைன் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
இதையும் படிங்க: 408 ரன்ஸ்.. இந்தியா வரலாறு காணாத மோசமான சாதனை தோல்வி.. 25 வருடம் கழித்து தெ.ஆ உலக சாதனை வெற்றி
“நான் இந்த கப்பலுக்குள் இல்லை. அதை நான் விரும்பவும் இல்லை. அதனால் அது பற்றி கருத்து சொல்லக்கூட நான் விரும்பவில்லை. இங்கே நீங்கள் சொல்லக்கூடாத சில விஷயங்கள் இருக்கிறது. அதில் ஒரு களங்கம் இணைக்கப்பட்டுள்ளதால் அது தேவையற்றது. இத்தொடரில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெறும் சூழ்நிலையில் இருப்பதை விட வேற எதுவும் தேவையில்லை. வேண்டுமானால் அவர் டோனி கிரைக் அளவுக்கு அக்கருத்தை கடுமையாக சொல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் அது முக்கியமில்ல. அது போன்ற வார்த்தையை நீங்கள் பயன்படுத்தக்கூடாது, சொல்லக்கூடாது. சாரி சுக்ரி, நீங்கள் சொன்னது ஏமாற்றம் மற்றும் வருத்தத்துக்குரியது” என்று கூறினார்.