கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் 15 வருடங்கள் கழித்து தென் ஆப்பிரிக்கா தோற்கடித்தது. அடுத்ததாக 2வது போட்டி கௌகாத்தியில் நவம்பர் 22ஆம் தேதி துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்து 489 ரன்கள் குவித்து ஆரம்பத்திலேயே வலுவான அடித்தளத்தைப் பெற்றது.
அதிகபட்சமாக சீனுரான் முத்துசாமி சதத்தை அடித்து 109, மார்கோ யான்சென் 93 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்து விளையாடிய இந்தியா மோசமாக பேட்டிங் செய்து 201 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 58, வாஷிங்டன் சுந்தர் 48 ரன்கள் எடுத்த நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக மார்கோ யான்சென் 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.
வரலாறு காணாத தோல்வி:
அடுத்ததாக 288 ரன்கள் முன்னிலை பெற்ற தென்னாப்பிரிக்கா போதும் போதுமென்று சொல்லும் அளவுக்கு இந்தியாவை அடித்து 260/5 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ஸ்டப்ஸ் 94 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளை எடுத்தார். இறுதியில் 549 என்ற இமாலய இலக்கை துரத்திய இந்தியா முன்பை விட மோசமாக விளையாடி 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 54 ரன்கள் எடுத்த நிலையில் தெனாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக சைமன் ஹார்மர் 6 விக்கெட்டுகளை சாய்த்தார். அதனால் 408 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா 2 – 0 (2) என்ற கணக்கில் இத்தொடரை ஒயிட்வாஸ் செய்து வென்றது. அதன் வாயிலாக 25 வருடங்கள் கழித்து இந்தியாவை அதன் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் தோற்கடித்து தென்னாப்பிரிக்கா சரித்திர வெற்றியைப் பெற்றுள்ளது.
மோசமான தோல்வி:
கடைசியாக ஹன்ஸ் க்ரோஞ்சி தலைமையிலான தென்னாப்பிரிக்கா 2000ஆம் ஆண்டு இந்தியாவை அதன் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் தோற்கடித்திருந்தது. மறுபுறம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா தங்களது சொந்த மண்ணில் முதல் முறையாக 400க்கும் மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் வரலாறு காணாத தோல்வியை சந்தித்துள்ளது. அத்துடன் சொந்த மண்ணில் இந்தியா தங்களது மிகப்பெரிய தோல்வியை சந்தித்து மோசமான சாதனையும் படைத்துள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவை இழிவாக பேசிய தெ.ஆ கோச் ஒழுங்கா மன்னிப்பு கேட்கனும்.. பார்த்திவ் பட்டேல் விளாசல்
இதற்கு முன் 2004 நாக்பூர் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 342 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதே இந்தியாவின் மிகப்பெரிய தோல்வியாகும். அதனால் இந்திய மண்ணில் அதிக (408) ரன்கள் வித்தியாசத்தில் வென்ற வெளிநாட்டு அணி உலக சாதனையை தென்னாபிரிக்கா படைத்துள்ளது. கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராக 3 – 0 (3) என்ற கணக்கில் தோற்ற இந்தியா தற்போது தென்னாப்பிரிக்காவிடமும் ஒயிட்வாஸ் தோல்வியை கண்டு மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.



