
டி20 உலக கோப்பையானது இன்னும் இரு தினங்களில் ஆஸ்திரேலியாவில் துவங்க உள்ள வேளையில் இந்த டி20 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் ஏற்கனவே ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது ஆஸ்திரேலிய பயணித்து தற்போது பயிற்சி போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் விளையாட இருக்கும் இந்திய அணியில் பெரும்பாலானோர் ஆஸ்திரேலியா மைதானங்களில் புதிதாக களமிறங்க உள்ளதால் அவர்களுக்கு போதிய பயிற்சி வேண்டும் என்பதன் காரணமாகவே தற்போது இந்திய அணி முன்கூட்டியே ஆஸ்திரேலியா சென்று பயிற்சி செய்து வருகிறது.
இந்திய அணியை பொறுத்தவரை சிறப்பான பேட்ஸ்மேன்கள் இருந்தாலும் துவக்கத்தில் அடுத்தடுத்து ஓப்பனர்கள் ஆட்டம் இழந்தால் மிடில் ஆர்டரில் கோலியை தவிர்த்து நிதானித்து விளையாடும் வீரர்கள் கிடையாது என்ற பேச்சு நிலவி வந்தது. ஆனால் சூரியகுமார் யாதவ் அணிக்கு வந்ததிலிருந்து இந்திய அணியில் அந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைத்தது.
அவர் வந்ததில் இருந்து துவக்கத்திலேயே இரண்டு விக்கெட் விழுந்தாலும் மிடில் ஆர்டரில் ரன்களை குவிக்க முடிந்து 200 ரன்கள் வரை இந்திய அணி செல்கிறது. அந்த நிலைமைக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுபவர் சூரியகுமார் யாதவ் தான். ஏனெனில் அணியின் மிடில் ஆர்டரில் மிகச் சிறப்பாக நங்கூரம் அமைத்து விளையாடும் அவர் எப்பேர்பட்ட பவுலர்களுக்கும் எதிராகவும், எந்தவித மைதானங்களிலும் திணறாமல் ரன்குவித்து வருகிறார்.
கடந்த ஆண்டு அவர் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானதிலிருந்து தற்போது வரை மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் அவர் எப்பேர்பட்ட பவுலர்களையும் தனது அசத்தலான பேட்டிங்கின் மூலம் அலற வைத்து வருகிறார். அந்த வகையில் ஆஸ்திரேலியா மண்ணிலும் இவர் மிகச்சிறப்பாக செயல்படுவார் என்று அனைவரும் பாராட்டி வரும் வேளையில் தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான டேல் ஸ்டைன் ஆஸ்திரேலிய மைதானங்களில் சூரியகுமார் யாதவ் எவ்வாறு விளையாடுவார் என்பது குறித்து பேசி உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :
சூரியகுமார் யாதவ் பேட்டிங் செய்யும்போது பந்துவீச்சாளர்களின் வேகத்தை பயன்படுத்தி எளிதாக பவுண்டரி மற்றும் சிக்ஸர்களை அடிக்கிறார். மெதுவாக பந்து வரும் போது ஸ்டம்பிற்கு பின்னே தள்ளி விடுகிறார். ஆஸ்திரேலியா போன்ற பெரிய மைதானங்களில் அவரது பேட்டிங் நிச்சயம் மிகப்பெரிய சாதகமாக இருக்கும். ஏனெனில் அவரது பேட்டிங் ஸ்டைலுக்கு அங்குள்ள மைதானங்கள் கண்டிப்பாக கை கொடுக்கும். சாதாரணமாக விளையாடும் பேட்ஸ்மேன்களுக்கு அந்த மைதானங்களில் சிக்ஸர்கள் அடிக்க சற்று கடினமாக இருந்தாலும் சூர்யா குமார் யாதவ் போன்ற வேகத்தை பயன்படுத்தும் பேட்ஸ்மன்களுக்கு அங்கு மிக எளிதாக சிக்ஸர்களை விளாசமுடியும்.
இதையும் படிங்க : T20 உலகக்கோப்பை : ஐ.சி.சி அமல்படுத்தவுள்ள 5 புதிய விதிமுறைகள் – விவரம் இதோ
அவரது பேட்டிங் எனக்கு ஏபிடி-யை ஞாபகப்படுத்துகிறது. அவருக்கு எதிராக பந்து வீசுவது நிச்சயம் கடினமான ஒன்றுதான். மைதானத்தின் அனைத்து பகுதிகளிலும் அவரால் பவுண்டரிகளை அடிக்க முடிகிறது என டேல் ஸ்டெயின் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.