
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. அந்தத் தோல்விக்கு சுழலுக்கு சாதகமாக அமைக்கப்பட்டிருந்த பிட்ச் முக்கிய காரணமானதாக பலரும் விமர்சித்தனர். ஆனால் தாங்கள் தான் அப்படிப்பட்ட பிட்ச் வேண்டும் என்று கேட்டு வாங்கியதாக இந்தியா அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்தார்.
மேலும் அந்த பிட்ச்சில் சுத்தமாக பேட்டிங் செய்ய முடியாத அளவுக்கு பேய் எதுவுமில்லை என்றும் கம்பீர் தெரிவித்தார். இல்லையென்றால் எப்படி தெம்பா பவுமா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ரன்கள் அடித்திருக்க முடியும்? என்று கம்பீர் கேள்வி எழுப்பினார். எனவே சவாலான கொல்கத்தா பிட்ச்சில் இந்திய அணி சிறப்பாக விளையாடத் தவறியதே தோல்விக்கு காரணமானதாகவும் கம்பீர் தெரிவித்தார்.
இந்நிலையில் கொல்கத்தா பிட்ச்சில் நிறைய பேய்களைத் தாம் பார்த்ததாக தென்னாப்பிரிக்க ஜாம்பவான் வீரர் டேல் ஸ்டைன் தெரிவித்துள்ளார். ஏனெனில் பெரும்பாலான பந்துகள் தாறுமாறாக சுழன்று சீரற்ற முறையில் எழும்பி வந்ததாக அவர் கம்பீருக்கு பதிலடி கொடுத்துள்ளார். ஒரு டெஸ்ட் போட்டி 3 நாட்களுக்குள் முடிகிறது என்றால் நிச்சயம் அந்த பிட்ச்சில் பேய் இருக்கும் என்றும் ஸ்டைன் தெரிவித்துள்ளார்.
எனவே இந்தியாவின் வெற்றிக்கு பிட்ச்சில் உள்ள பேய்களை விரட்டுமாறு தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “பிட்ச்சில் பேய்கள் இல்லை என்று கௌதம் கம்பீர் சொன்னார். ஆனால் நான் நிறைய பேய்களைப் பார்த்தேன். நேரலை வர்ணனையில் சில பந்துகள் 2 அடிகள் வரை சுழன்று தோள்பட்டையில் அடிப்பதாக அனில் கும்ப்ளே சொன்னார் என்பது உங்களுக்குத் தெரியும்”
“அடுத்த பந்து வழுக்கிக்கொண்டு உங்கள் காலில் அடித்து உங்களை அவுட்டாக்குகிறது. பந்துகள் இப்படி வந்தால் நீங்கள் பேட்டிங் செய்வது கடினம். பொதுவாக ஸ்கோர் அடிப்பதற்கான வாய்ப்புகள் குறையும் போது பேட்ஸ்மேன்கள் தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்துவது தான் மிகப்பெரிய சாவி. அதனுடைய அர்த்தமே பேட்டிங் செய்வது மிகவும் கடினமாக இருக்கிறது என்பதாகும். அதை தெம்பா பவுமா மற்றும் வாஷிங்டன் சுந்தர் மட்டுமே செய்தனர்”
இதையும் படிங்க: இந்தக் கால பிளேயர்ஸ் ஈஸியா 100மீ சிக்ஸ் அடிப்பாங்க.. ஆனா தடுப்பட்டதை மறக்க இதான் காரணம்.. மஞ்ரேக்கர்
“சொல்லப்போனால் அவர்கள் கூட எந்த நேரத்திலும் அவுட்டாகலாம் என்ற நிலைமையிலேயே விளையாடினார்கள். ஆனால் அவர்களுடையத் தடுப்பாட்டம் திடமாக இருந்தது. எப்படி இருந்தாலும் கண்டிப்பாக அந்தப் பிட்ச்சில் பேய்கள் இருந்தன என்பது உறுதி. 3 நாட்களுக்குள் முடியும் எந்த டெஸ்ட் போட்டிகளுக்குள்ளும் உறுதியாக பேய்கள் இருக்கும்” எனக் கூறினார்.