விவேகத்துடன் கூடிய மிரட்டல் வேகம், மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த குரு – பாராட்டுகளை அள்ளும் இளம் இந்திய வீரர்

- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 15-ஆம் தேதி நடைபெற்ற 25-ஆவது லீக் போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொண்ட ஹைதராபாத் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பையில் உள்ள ப்ராபோர்ன் மைதானத்தில் மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 175/8 ரன்கள் விளாசியது. ஒரு கட்டத்தில் 31/3 என தடுமாறிய அந்த அணியை நிதிஷ் ராணா அதிரடியாக 54 (36) ரன்களும் காட்டடி வீரர் ஆண்ட்ரே ரசல் வெறும் 49* (25) ரன்களும் விளாசி சூப்பரான பினிஷிங் கொடுத்து காப்பாற்றினார்கள். ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக பந்துவீச்சில் மிரட்டிய தமிழக வீரர் நடராஜன் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதை தொடர்ந்து 176 என்ற இலக்கை துரத்திய ஹைதராபாத்துக்கு அபிஷேக் சர்மா 3 (10) கேன் வில்லியம்சன் 17 (16) என தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 39/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணியை அடுத்து களமிறங்கிய ராகுல் திரிபாதி ஐடன் மார்க்கமுடன் இணைந்து அதிரடியாக ரன்களை குவித்து வெற்றிப் பாதைக்கு திரும்பினார்.

- Advertisement -

கலக்கும் ஹைதெராபாத்:
3-வது விக்கெட்டுக்கு 94 ரன்கள் பார்னர்ஷி அமைத்து வெற்றியை உறுதி செய்த இந்த ஜோடியில் வெறும் 37 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர் உட்பட 71 ரன்கள் குவித்து திரிபாதி ஆட்டமிழந்தார். மறுபுறம் அவருடன் தனது பங்கிற்கு அதிரடியாக விளையாடிய ஐடன் மார்க்ரம் வெறும் 36 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் உட்பட 68* ரன்கள் விளாசி கடைசி வரை அவுட்டாகாமல் அற்புதமான பினிஷிங் கொடுத்ததால் 17.5 ஓவர்களிலேயே 176/3 ரன்கள் எடுத்த ஹைதராபாத் வெற்றியை ருசித்தது.

இந்த வெற்றிக்கு 71 ரன்கள் விளாசி முக்கிய பங்காற்றிய ராகுல் திரிப்பாதி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியால் தனது முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளை பதிவு செய்து 10-வது இடத்தில் திண்டாடிய ஹைதராபாத் அடுத்த 3 போட்டிகளில் தொடர் வெற்றிகளை பெற்று ஹாட்ரிக் வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 6 புள்ளிகளுடன் 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

- Advertisement -

துள்ளிகுதித்த ஸ்டைன்:
முன்னதாக இந்த போட்டியில் முதலாவதாக பந்துவீசிய ஹைதராபாத்துக்கு தமிழக வீரர் நடராஜனுடன் கைகோர்த்த ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இளம் இந்திய வீரர் உம்ரான் மாலிக் தனக்கே உரித்தான பாணியில் அதிரடியான மின்னல்வேக பந்துகளை வீசி எதிரணிக்கு அச்சுறுத்தலை கொடுத்தார். சாதாரணமாகவே 145 கீ.மீ’க்கு மேல் அதிவேகமான பந்துகளை அசால்ட்டாக வீசும் இவர் ரசிகர்களின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வருகிறார். அதிலும் நேற்றைய போட்டியில் 31/3 என சரிந்த கொல்கத்தாவை தூக்கி நிறுத்தும் முயற்சியில் அதன் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 25 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து நங்கூரமாக செயல்பட்டு வந்த நிலையில் அதிவேகமான யார்கர் பந்தை வீசிய உம்ரான் மாலிக் அவரின் ஸ்டம்ப்களை தெறிக்கவிட்டு கிளீன் போல்ட்டாக்கினார்.

அப்போது அதை பெவிலியனில் இருந்து பார்த்த தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நட்சத்திர ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஐதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் டேல் ஸ்டெயின் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து கொண்டாடினார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏனெனில் கிரிக்கெட் வரலாற்றில் டேல் ஸ்டெயின் ஒரு அதிரடியான ஃபாஸ்ட் பவுலராக அறியப்படும் நிலையில் அவரையே இந்த இளம் வீரர் இம்ப்ரஸ் செய்துள்ளார் என்றால் அவரிடம் நிச்சயமாக திறமை இல்லாமல் இருக்காது என்று கூறலாம்.

- Advertisement -

இப்படி குருவையே துள்ளிக்குதிக்க வைத்த உம்ரான் மாலிக் பற்றி நேற்றைய போட்டிக்குப் பின் டேல் ஸ்டெய்ன் பேசியது பின்வருமாறு. “தன்னிடமுள்ள அபாரமான திறமையை அவர் வெளிக்காட்டி வருகிறார். நான் எதுவும் செய்யவில்லை, அனைத்து பாராட்டுக்களும் முழுமையாக அவரையே சேரும். வருங்காலத்தில் அவரை நல்ல நிலைமையில் பார்க்க முடியும். அவர் ரன்களை வழங்குவதை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு வேகமாக பந்துவீச கூறினோம்” என கூறினார்.

விவேகத்துடன் கூடிய வேகம்:
இருப்பினும் வேகமான பந்துகளை வீசி வரும் அவர் அதற்கு ஈடாக ரன்களையும் வாரி வழங்கிய காரணத்தால் அவரைப் பார்த்த நிறைய பேர் அதிவேகமான வேகம் ஆபத்தில் தான் முடியும் என்று கூறிவந்தனர். ஆனால் நேற்றைய போட்டியில் அதிகபட்சமாக 150.1 கீ.மீ வேகப்பந்தை வீசிய அவர் கிட்டத்தட்ட அதே வேகத்தில் 4 ஓவர்களையும் வீசி வெறும் 27 ரன்களை மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை 6.75 என்ற சிறப்பான எக்கனாமியில் எடுத்து விவேகத்துடன் கூடிய வேகத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

ஏற்கனவே 153.1 கீ.மீ வேகப்பந்தை வீசி ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமான பந்தை வீசிய பவுலராக சாதனை படைத்துள்ள இவர் ஆரம்பக் கட்டத்தில் மட்டுமே இருப்பதால் இன்னும் நாட்கள் செல்லச் செல்ல தன்னைத்தானே மெருகேற்றி கொண்டு மிகச்சிறந்த பவுலராக உருவெடுப்பார் என்று நேற்றைய போட்டியில் நிரூபித்துள்ளார்.

இதையும் படிங்க : அந்த சிரிப்ப பாத்து எவ்ளோ நாளாச்சு! காவ்யா ஹேப்பி அண்ணாச்சி – குதூகலிக்கும் ரசிகர்கள் (விவரம் இதோ)

இதேபோல முன்னேற்றத்தை கண்டால் நிச்சயமாக வரலாற்றிலேயே அதிவேகமான இந்திய பந்து வீச்சாளராக அவர் உருவெடுத்து சாதனை படைப்பார் என பல ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் அவருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement