ஆசிய கோப்பை 2023 : தப்பு கணக்கு போடாதீங்க, இப்போ அவர் பழைய கிங் கோலியா வந்துட்டாரு – ஆஸி முன்னாள் வீரருக்கு அம்ப்ரோஸ் பதிலடி

Curtly Ambrose
- Advertisement -

இலங்கையில் வரும் செப்டம்பர் 2ஆம் தேதி பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறும் 2023 ஆசிய கோப்பை போட்டியில் வெற்றி காண்பதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியினர் இறுதிக்கட்ட பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 2023 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடக்கும் இந்த தொடரில் காயத்தை சந்தித்திருந்த ஜஸ்பிரித் பும்ரா, கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய வீரர்கள் முழுமையாக குணமடைந்து விளையாட உள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

அதே போல சமீப காலங்களில் தடுமாறி வரும் கதைக்கு கேப்டன் ரோஹித் சர்மாவும் முற்றுப்புள்ளி வைத்து ஃபார்முக்கு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். முன்னதாக 25000க்கும் மேற்பட்ட ரன்களையும் 75 சதங்களையும் அடித்து நவீன கிரிக்கெட்டில் ஜாம்பவானாக செயல்பட்டு வரும் விராட் கோலி 2019க்குப்பின் சதமடிக்காமல் இருந்து வந்த கதைக்கு கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற 2022 ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதமடித்து முற்றுப்புள்ளி வைத்தார். குறிப்பாக தம்மை அணியிலிருந்து நீக்குமாறு சொன்ன முன்னாள் வீரர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த அவர் தன்னை சாம்பியன் வீரர் என்பதை நிரூபித்தார்.

- Advertisement -

பழைய கிங் கோலி:
அதே வேகத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆரம்பத்திலேயே தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியாவை வரலாற்றின் மகத்தான இன்னிங்ஸ் விளையாடி மறக்க முடியாத வெற்றியை பெற்றுக் கொடுத்த அவர் அதன் பின் 3 வகையான கிரிக்கெட்டிலும் சதங்களை அடித்து ஐபிஎல் தொடரிலும் 500க்கும் மேற்பட்ட ரன்களை விளாசி தற்போது நல்ல ஃபார்மில் இருக்கிறார். அதனால் இந்த ஆசிய மற்றும் உலக கோப்பையில் அவர் அபாரமாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த நிலையில் விராட் கோலி 2023 ஆசிய கோப்பையில் பாபர் அசாமை விட பெரிய அளவில் ரன்களை அடிப்பார் என்று தமக்கு தோன்றவில்லை என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டாம் மூடி நேற்று தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது பழைய விராட் கோலி திரும்பியுள்ளதால் குறைத்து மதிப்பிட வேண்டாம் என அவருக்கு முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் வீரர் கர்ட்லி ஆம்ப்ரோஸ் பதிலளிக்கும் வகையில் பேசியுள்ளார். இது பற்றி சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அவர் இப்போதும் நல்ல கிரிக்கெட்டர் தரமான பேட்ஸ்மேன். உலகில் அனைத்து தரமான பேட்ஸ்மேன்களும் தங்களுடைய கேரியரில் ஏதோ ஒரு சமயத்தில் ரன்கள் அடிக்க தடுமாறியுள்ளார்கள். சொல்லப்போனால் சர்வதேச அளவில் விளையாடிய எந்த தரமான பேட்ஸ்மேனும் தடுமாறியதில்லை என்று எனக்கு தெரியவில்லை. அந்த வகையில் ஸ்பெஷல் பிளேயரான விராட் கோலி தடுமாறிய காலங்களை கடந்து தற்போது ஃபார்முக்கு வந்து விட்டது தெரிகிறது”

இதையும் படிங்க:ஆசிய கோப்பை 2023 : சமமா இருந்தாலும் பாபர் அசாமை தாண்டி விராட் கோலி பெருசா அடிக்க மாட்டாரு – முன்னாள் ஆஸி வீரர் வித்தியாச பேட்டி

“குறிப்பாக சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் அரை சதமடித்த அவர் பின்னர் சதமடித்தார். எனவே தற்போது அவர் விளையாடுவதை பார்க்கும் போது பழைய விராட் கோலி வந்துள்ளது தெரிகிறது. அதனால் இன்னும் அவரால் இந்திய கிரிக்கெட்டுக்கு சில வருடங்கள் பங்காற்ற முடியும்” என்று கூறினார்.

Advertisement