காயத்தை தவிர்த்து நீண்ட காலம் விளையாட இதை செய்ங்க – ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஜாம்பவான் ஆம்ப்ரோஸ் அட்வைஸ்

Curtly AMbrose
- Advertisement -

நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா தற்போது காயத்திலிருந்து குணமடைந்துள்ளது இந்திய ரசிகர்களை நிம்மதியடைய வைக்கும் அம்சமாக இருக்கிறது. உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு கடந்த 2016ஆம் ஆண்டு சர்வதேச அரங்கில் அறிமுகமான அவர் தம்முடைய வித்தியாசமான பவுலிங் ஆக்சனால் பேட்ஸ்மேன்களை திணறடித்து குறுகிய காலத்திலேயே நிலையான இடத்தை பிடித்தார். மேலும் இந்த ஆக்சனை வைத்துக்கொண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்க முடியாது என்று விமர்சித்தவர்களின் கருத்துக்களை 2018இல் டெஸ்ட் போட்டிகளிலும் அறிமுகமாகி அபாரமாக செயல்பட்டு பொய்யாக்கிய அவர் இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து முதன்மை வேகப்பந்து வீச்சாளராகவும் உருவெடுத்தார்.

அப்படிப்பட்ட அவர் கடந்த 2022 ஜூலை மாதம் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற சுற்றுப்பயணத்தில் காயமடைந்து வெளியேறியது 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையை தொடர்ந்து சமீபத்திய 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் இந்தியா தோல்வியை சந்திப்பதற்கு காரணமாக அமைந்தது. மேலும் எந்த நேரத்திலும் துல்லியமான யார்க்கர் பந்துகளை வீசி வெற்றியை இந்தியாவின் பக்கம் திருப்பக்கூடிய கருப்பு குதிரையாக பார்க்கப்படும் அவர் இடையிடையே 2 முறை முழுமையாக குணமடையாமல் களமிறங்கியதால் மீண்டும் காயத்தை சந்தித்து வெளியேறினார்.

- Advertisement -

ஜாம்பவானின் அட்வைஸ்:
இருப்பினும் ஒரு வழியாக 11 மாதங்களாக குணமடைந்த அவர் சமீபத்திய அயர்லாந்து தொடரில் கேப்டனாக களமிறங்கி ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்று அற்புதமான கம்பேக் கொடுத்துள்ளார். முன்னதாக இந்த பவுலிங் ஆக்சனை வைத்துக்கொண்டு நீண்ட காலம் விளையாடுவதற்கு ஒன்று தம்முடைய ஓட்டத்தில் சில நடைகளை குறைக்க வேண்டும் அல்லது ஏதேனும் ஒரு வகையான கிரிக்கெட்டில் ஓய்வு பெற வேண்டும் என சோயப் அக்தர், பிரட் லீ போன்ற முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் ஆலோசனை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் பும்ரா பவுலிங் ஆக்சனை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்று தெரிவிக்கும் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கர்ட்லி ஆம்ப்ரோஸ் முதல் நாளின் முதல் பந்திலிருந்தே முழு நெருப்புடன் பந்து வீசாமல் சீரான வேகத்தில் செயல்பட்டால் நீண்ட காலம் அசத்தலாம் என ஆலோசனை தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஜஸ்பிரித் பும்ரா அற்புதமான பவுலர். நான் பார்த்த மற்ற பவுலர்களில் மிகவும் வித்தியாசமானவர். வித்தியாசமான ஆக்சனை கொண்டிருந்தாலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர்”

- Advertisement -

“பொதுவாக நீண்ட நாட்கள் கழித்து நீங்கள் கம்பேக் கொடுக்கும் போது கொஞ்சம் கவலை இருக்கும். ஏனெனில் அவர் மீண்டும் காயமடையக்கூடாது என்று நினைப்பீர்கள். அவருக்கு என்னுடைய ஆலோசனை என்னவெனில் மெதுவாக விளையாட துவங்குங்கள். மாறாக முதல் நாளிலிருந்தே அவசரப்படாதீர்கள். அவர் சில பயிற்சி மற்றும் போட்டிகளில் விளையாடுவதை விரும்புவார் என்பதில் சந்தேகமில்லை”

இதையும் படிங்க:எதிரணியா இருந்தாலும் அவர் தான் நமக்கெல்லாம் ரோல் மாடல் – இந்திய வீரர் பற்றி இமாம் உல் ஹக் நெகிழ்ச்சி பேட்டி

“ஆனால் அதற்காக அவசரப்படாமல் மெதுவாக விளையாடத் துவங்கி கச்சிதமான நிலைக்கு வந்து விட்டோம் என்று உணரும் போது மீண்டும் நீங்கள் முழுமூச்சாக வீசலாம். மாறாக முதல் பந்திலிருந்தே நெருப்பாக செயல்படுவது புத்திசாலித்தனமான விஷயமல்ல. ஏனெனில் நீங்கள் காயமடைவதை யாரும் விரும்புவதில்லை. தற்போது அவர் மீண்டும் வந்துள்ளது இந்திய அணியின் அட்டாக்கை வலுப்படுத்துகிறது. மேலும் சிறந்த டெத் பவுலரான அவர் வந்துள்ளது இந்த உலகக்கோப்பையில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பையும் அதிகரித்துள்ளது” என்று கூறினார்.

Advertisement