IND vs AUS : முதல் நாளிலேயே இந்தூர் பிட்ச் தாறுமாறாக சுழல பிசிசிஐயின் அந்த முடிவே காரணம் – பேட்டிங் கோச் பேட்டி

Rathour
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா முதலிரண்டு போட்டியில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து ஆரம்பத்திலேயே கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டுள்ளது. முன்னதாக 2004க்குப்பின் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக ஆரம்பத்திலேயே பிட்ச் பற்றி தேவையற்ற விமர்சனங்களை வைத்த ஆஸ்திரேலியா வாயில் பேசியதை செயலில் காட்டாமல் படுதோல்வியை சந்தித்தது. மறுபுறம் அதே பிட்ச்சில் 400 ரன்கள் அடித்த இந்தியா ஆஸ்திரேலியர்களின் குற்றச்சாட்டுகளை பொய்யாக்கி அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்து அசத்தியது.

அப்போதெல்லாம் பிட்ச் பற்றி குறை சொல்லாமல் ஒழுங்காக விளையாடுங்கள் என்று ஆஸ்திரேலியாவை கிண்டலடித்த இந்திய ரசிகர்கள் தற்போது இந்திய அணி மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். ஏனெனில் மார்ச் 1ஆம் தேதியன்று இந்தூரில் துவங்கிய 3வது போட்டியில் எப்படியும் 3வது நாளிலிருந்து தான் பிட்ச் சுழலும் என்று எதிர்பார்த்த ரோஹித் சர்மா அதற்கு முன்பாக பெரிய ரன்களை அடித்து விட வேண்டும் என்ற எண்ணத்துடன் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். ஆனால் நாக்பூர், டெல்லியை விட முதல் நாளின் முதல் மணி நேரத்திலேயே சராசரியாக 4.8 டிகிரி சுழன்ற இந்தூர் பிட்ச்சில் தரமாக பந்து வீசிய ஆஸ்திரேலியாவுக்கு பதில் சொல்ல முடியாத இந்தியா முதல் இன்னிங்ஸில் 109 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

காரணமே பிசிசிஐ தான்:
ரோகித் சர்மா 12, புஜாரா 1, ஸ்ரேயாஸ் ஐயர் 0 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டான இந்தியாவுக்கு அதிகபட்சமாக விராட் கோலி 22 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா அதிகபட்சமாக மேத்தியூ குனேமான் 5 டிக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா உஸ்மான் கவாஜா 60, மார்னஸ் லபுஸ்ஷேன் 36 என முக்கிய வீரர்களின் ரன் குவிப்பால் முதல் நாள் முடிவில் 156/4 ரன்கள் குவித்து இந்தியாவை விட 47 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஆனால் இப்போட்டியில் இந்தியா அவுட்டான விதத்தை பார்த்த வாஷிம் ஜாஃபர், தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட ஏராளமான முன்னாள் இந்திய வீரர்களும் ரசிகர்களும் இப்போட்டி 2 நாட்களுக்குள் முடிந்து விடக்கூடாது என்று அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

அந்தளவுக்கு தாறுமாறாக சுழன்ற இந்தூர் பிட்ச் ஆஸ்திரேலியர்களிடமும் வழக்கமான விமர்சனத்தை சந்தித்து வருகிறது. இந்நிலையில் தரம்சாலாவில் நடைபெறுவதாக இருந்த இப்போட்டி கடைசி நேரத்தில் அங்கு நிலவும் குளிர்காலத்தில் தேவையான புற்கள் வளர்க்க முடியாத காரணத்தால் இந்தூருக்கு பிசிசிஐ மாற்றியதே பிட்ச் இப்படி முதல் நாளிலேயே சுழல்வதற்கான காரணமென்று இந்திய பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அதாவது கடைசி நேரத்தில் அவசரமாக மாற்றப்பட்டதால் கடந்த வாரம் வரை ரஞ்சிப் போட்டிகள் நடைபெற்ற இந்தூர் மைதானத்தில் போதிய நேரம் கிடைக்காமல் திடீரென்று இப்போட்டிக்கான பிட்ச்சை உருவாக்கியதே இந்த சுழலுக்கு காரணமென தெரிவிக்கும் அவர் நிச்சயமாக இந்திய அணி இதிலிருந்து மீண்டெழுந்து வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி முதல் நாள் ஆட்டத்துக்கு பின் அவர் பேசியது பின்வருமாறு.

“சில நேரங்களில் உங்களது பேட்ஸ்மேன்கள் இப்படி அவுட்டாவது சகஜமாகும். நாங்கள் சுழலுக்கு சாதகமான பிட்ச்களை விரும்புகிறோம். அது தான் எங்களது பலம். அதனால் தான் நாங்கள் இங்கே இருக்கிறோம். ஆனால் இந்தளவுக்கு சுழலும் இந்த பிட்ச் ஒரு சுமாரான பிட்ச்சாக அமைந்துள்ளது. குறிப்பாக நமது முதலிரண்டு விக்கெட்கள் மோசமான பேட்டிங் காரணமாக வரவில்லை. இந்த தொடர் முழுவதும் சுழல் இருந்தாலும் இன்று யாருமே எதிர்பாராத அளவுக்கு ஒரு டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே பந்து அதிகமாக சுழன்றது”

இதையும் படிங்க:IND vs AUS : இந்த மாதிரி ஒருதலைபட்ச நடுவரை தூக்குங்க, இந்திய அம்பயருக்கு விராட் கோலி ரசிகர்கள் போர்க்கொடி

“நியாயமாக பார்க்கும் போது இந்த பிட்ச்சை உருவாக்க மைதான பராமரிப்பாளர்களுக்கு போதிய நேரம் கிடைக்கவில்லை. குறிப்பாக இங்கு ரஞ்சிக் கோப்பை போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் கடைசி நேரத்தில் தர்மசாலாவில் இருந்து இப்போட்டி இங்கே மாற்றப்பட்டது. அதனால் தரமான பிட்ச்சை உருவாக்க வேண்டும் என்ற செய்தி மைதான பராமரிப்பாளர்களுக்கு தாமதமாகவே கிடைத்தது. அதனால் இந்தூர் மைதான பராமரிப்பாளர்களுக்கு தரமான பிட்ச் உருவாக்க போதிய நேரம் கிடைக்கவில்லை” என்று கூறினார்.

Advertisement