CSK vs MI : சென்னையிலும் சிஎஸ்கே வெற்றியின் குறுக்கே அச்சுறுத்தும் மழை – போட்டி நடக்குமா? வெதர் ரிப்போர்ட் இதோ

Chepauk
Advertisement

அனல் பறந்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் 5வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை பங்கேற்ற 10 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. கடந்த வருடம் 9வது இடத்தைப் பிடித்து 2020க்குப்பின் வரலாற்றில் 2வது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்த அந்த அணி இந்த வருடம் அதிலிருந்து மிகச்சிறந்த கம்பேக் கொடுக்க வேண்டிய கனவுடன் விளையாடி வருகிறது. இருப்பினும் ஆரம்ப முதலே சற்று தடுமாற்றமாகவே செயல்பட்டு வரும் சென்னை கடைசியாக ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து பின்னடைவுக்கு உள்ளானது.

அந்த நிலையில் லக்னோவில் நடைபெற்ற தன்னுடைய 10வது லீக் போட்டியில் பந்து வீச்சுக்கு சாதகமான மைதானத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்ட சென்னை அந்த அணியை 19.4 ஓவரில் 125/7 ரன்களுக்கு கட்டுப்படுத்தி வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்த போது மழை வந்தது. அதனால் ரத்து செய்யப்பட்ட அந்த போட்டியின் முடிவில் 1 புள்ளி மட்டுமே கிடைத்த நிலையில் அடுத்ததாக பரம எதிரி மும்பைக்கு எதிராக மே 6ஆம் தேதி மதியம் 3.30 தன்னுடைய கோட்டையாக கருதப்படும் சேப்பாக்கத்தில் சென்னை களமிறங்குகிறது.

- Advertisement -

அச்சுறுத்தும் மழை:
கடந்த வருடம் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து அவமானத்தை சந்தித்த மும்பை இந்த வருடம் ஆரம்பத்தில் சுமாராக செயல்பட்டாலும் கடந்த 2 போட்டிகளில் 200+ ரன்களை அடுத்தடுத்து சேசிங் செய்த அணியாக சாதனை படைத்து வெற்றி பெற்று 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மேலும் சமீப காலங்களில் சென்னையை சேப்பாக்கத்தில் நிறைய முறை தோற்கடித்த பெருமையைக் கொண்ட மும்பை இந்த சீசனின் முதல் போட்டியில் வான்கடே மைதானத்தில் தோற்றது. எனவே அதற்கு பதிலடி கொடுக்கும் வெறியுடன் வந்துள்ள மும்பையை சமாளித்து சென்னை வெற்றி பெறுமா என்பதே அந்த அணி ரசிகர்களின் எதிர்பார்ப்பாக காணப்படுகிறது.

ஆனால் அந்தப் போட்டிக்கும் வெற்றிக்கும் குறுக்கே தற்போது மழை பெரிய அச்சுறுத்தலாக காணப்படுகிறது. தற்சமயத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருவதைப் போலவே சேப்பாக்கத்தை சுற்றிய பகுதிகளிலும் மேகமூட்டத்துடன் கூடிய வானிலை நிலவுகிறது. அந்த வகையில் இந்த போட்டி துவங்கும் மே 6ஆம் தேதி மதியம் 1 மணியளவில் 40% மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவிக்கிறது.

- Advertisement -

குறிப்பாக 2, 3, 4, 5 மணி வரை 30 சதவிதமாக குறையும் மழைக்கான வாய்ப்பு மாலை 5 மணிக்கு மேல் 10% என்றளவில் குறைந்தாலும் மீண்டும் இரவு 7 மணி வரை 20 – 30% பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதாவது மதியம் 3 மணி முதல் போட்டி முடியும் இரவு 7 மணி வரை சேப்பாக்கத்தில் லேசான தூரல் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. இதனால் இந்த போட்டியில் மழையின் குறுக்கீடு லேசாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இப்போட்டி முழுமையாக நடைபெறுமா என்று சந்தேகம் நிலவுகிறது.

இருப்பினும் கூட தற்போது கோடை காலம் என்பதால் ஏற்கனவே 20 – 30% என்ற குறைந்த அளவில் பெய்யும் என்று எதிர்பார்க்கப்படும் மழையின் அளவு திடீரென இன்னும் குறைந்து மேகமூட்டத்துடன் கூடிய வானிலையுடன் இந்த போட்டி நடைபெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற இந்த போட்டியில் அவசியமாகும் வெற்றியை சென்னை பதிவு செய்வதற்கு வருண பகவான் வழி விட வேண்டும் என்பதே அந்த அணி ரசிகர்களின் வேண்டுதலாக இருக்கிறது.

இதையும் படிங்க: CSK vs MI : சென்னையிலும் சிஎஸ்கே வெற்றியின் குறுக்கே அச்சுறுத்தும் மழை – போட்டி நடக்குமா? வெதர் ரிப்போர்ட் இதோ

அதே போல் பரம எதிரியான சென்னையை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் மும்பை மேலே முன்னேறுவதற்கு மழை வழி விட வேண்டும் என்பது அந்த அணி ரசிகர்களின் விருப்பமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement