- Advertisement -
ஐ.பி.எல்

CSK vs GT : அவர ஃபைனலில் தூக்கிட்டா கப் சென்னைக்கு தான், குஜராத் வீரரை புகழ்ந்து தள்ளிய சச்சின் – ஆதரவு யாருக்கு?

உச்சக்கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி மே 28ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் நகரில் நடைபெறுகிறது. அதில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் கோப்பையை வெல்வதற்காக போராட உள்ளன. இந்த போட்டியில் என்ன தான் 4 கோப்பைகளை வென்ற சென்னைக்கு மகத்தான எம்எஸ் தோனி கேப்டனாக செயல்பட்டாலும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அனைத்து துறைகளிலும் சவாலை கொடுக்கும் அணியாக இருக்கிறது. குறிப்பாக பந்து வீச்சில் ஷமி, மோஹித் சர்மா, ரசித் கான் ஆகியோர் ஊதா தொப்பி பட்டியலில் டாப் 3 இடத்தை பிடித்து அச்சுறுத்தலை கொடுக்கின்றனர்.

அதை விட பேட்டிங் துறையில் ஏற்கனவே இந்த சீசனில் 3 சதங்களை அடித்து 851* ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்றுள்ள சுப்மன் கில் சமீப காலங்களாகவே சர்வதேச கிரிக்கெட்டிலும் அபாரமாக செயல்பட்டு உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார். அதிலும் குறிப்பாக இப்போட்டி நடைபெறும் அகமதாபாத் மைதானத்தில் கடைசியாக நடந்த 2 போட்டிகளிலும் அடுத்தடுத்த சதங்களை அடித்து வெறித்தனமான ஃபார்மில் இருக்கும் அவரை முன்னதாகவே அவுட்டாக்க தவறினால் சென்னை கோப்பையில் கை வைக்க முடியாது என்ற நிலைமை காணப்படுகிறது.

- Advertisement -

சச்சினின் பாராட்டு:
இந்நிலையில் குவாலிபயர் 2 போட்டியில் தங்களுடைய மும்பை இந்தியன்ஸ் அணியின் 6வது கோப்பை கனவை சதமடித்து தகர்த்தது மட்டுமல்லாமல் இந்த சீசன் முழுவதும் வேற லெவலில் செயல்பட்டு வரும் சுப்மன் கில் இந்த ஃபைனலில் குஜராத்துக்கு மிகப்பெரிய பலமாக இருப்பார் என்று ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். எனவே கில், பாண்டியா, மில்லர் ஆகிய மூவரையும் முன்னதாகவே அவுட்டாக்கினால் மட்டுமே சென்னை வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கும் அவர் இந்த ஃபைனல் சுவாரசியமாக இருக்கப் போவதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அந்த பாராட்டில் முக்கால்வாசி சுப்மன் கில்லை மட்டுமே புகழ்ந்துள்ள அவர் இது பற்றி கூறியுள்ளது பின்வருமாறு. “இந்த சீசனில் சுப்மன் கில் ஆட்டம் மறக்க முடியாதது. கடந்த 2 போட்டியில் அவர் அடித்த சதங்கள் அழிக்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக அவருடைய ஒரு சதம் மும்பையின் கனவை நொறுக்கியது. அது தான் கிரிக்கெட்டின் கணிக்க முடியாத இயற்கையாகும். குறிப்பிடத்தக்க பொறுமையான குணம், அசைக்க முடியாத அமைதி, ரன்களை எடுக்க வேண்டும் என்ற பசி மற்றும் விக்கெட்டுகளுக்கு இடையே சாமர்த்தியமாக ஓடுவது போன்றவை சுப்மன் கில் பேட்டிங்கில் என்னை மிகவும் கவர்ந்துள்ளது”

- Advertisement -

“பொதுவாக பெரிய ரன்கள் அடிக்கப்படும் போட்டிகளின் வெற்றிகள் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து எந்தளவுக்கு அதிரடியாக விளையாடுகிறோம் என்பதை பொறுத்து அமையும். அந்த வகையில் குஜராத் அணிக்காக 12வது ஓவரிலிருந்து சுப்மன் கில் அதிரடியை அற்புதமாக அதிகப்படுத்துவது வெற்றிக்கான தருணத்தை கைப்பற்றும் அவருடைய திறமையை வெளிப்படுத்தியது. மும்பை அணியும் முகமது ஷமிக்கு எதிராக திலக் வர்மா 24 ரன்கள் எடுத்த போது சமமாக வைத்திருந்த வெற்றியை சூரியகுமார் அவுட்டானதும் விட்டது”

“அந்த வகையில் குஜராத் இப்போட்டியில் மிகவும் வலுவான அணியாக இருக்கிறது. குறிப்பாக சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் வெற்றிக்கு சென்னை எடுக்க வேண்டிய விக்கெட்டுகளாகும். சென்னை அணியிலும் 8வது இடத்தில் எம்எஸ் தோனி களமிறங்கும் அளவுக்கு ஆழமான பேட்டிங் வரிசையை கொண்டுள்ளது. எனவே இப்போட்டியில் ஒரு அணியின் பேட்டிங் மற்றொரு அணியின் பேட்டிங்கை மிஞ்சுவதாக இருக்கலாம். மொத்தத்தில் இது பார்ப்பதற்கு சுவாரசியமான இறுதிப் போட்டியாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க:பிரிதிவி ஷா மனசுல ஹீரோன்னு நினைப்பு, ஒன்னா விளையாட ஸ்டார் பண்ண கில் வளர்ச்சிய பாருங்க – முன்னாள் வீரர் அதிரடி பேட்டி

முன்னதாக மும்பைக்கு எதிராக தோல்வியை பரிசளித்த பின் போட்டியின் முடிவில் சுப்மன் கில்லை மிகவும் அருகே அமர வைத்து சச்சின் டெண்டுல்கர் ஆலோசனை கொடுத்தது சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -