பிரிதிவி ஷா மனசுல ஹீரோன்னு நினைப்பு, ஒன்னா விளையாட ஸ்டார் பண்ண கில் வளர்ச்சிய பாருங்க – முன்னாள் வீரர் அதிரடி பேட்டி

Prithvi Shaw
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் இடமாக கருதப்படும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் போன்ற இளம் வீரர்கள் மிகச் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்களாக தங்களை அடையாளப்படுத்தினர். இருப்பினும் இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரிதிவி ஷா சுமாராக செயல்பட்டு 8 போட்டிகளில் வெறும் 106 ரன்கள் எடுத்தது டெல்லி முதல் அணியாக லீக் சுற்றுடன் வெளியேறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. மறுபுறம் 851* ரன்களை விளாசி அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்துள்ள சுப்மன் கில் ஆரஞ்சு தொப்பியை வென்று குஜராத் ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றியுள்ளார்.

Shubman Gill

- Advertisement -

இத்தனைக்கும் கடந்த 2018இல் நியூசிலாந்தில் நடைபெற்ற அண்டர்-19 உலக கோப்பையை பிரிதிவி ஷா தலைமையில் வென்ற இந்திய அணியில் தொடர் நாயகன் விருது வென்ற சுப்மன் கில் 2019ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி ஆரம்பத்தில் காயம் மற்றும் சுமாரான செயல்பாடுகளால் வெளியேறினார். இருப்பினும் 2021ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மண்ணில் பதிவு செய்த மறக்க முடியாத காபா வெற்றியில் 91 ரன்களை விளாசி முக்கிய பங்காற்றிய அவர் 2022 ஐபிஎல் தொடரில் 483 ரன்கள் குவித்து குஜராத் முதல் வருடத்திலேயே கோப்பை வெல்ல கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

ஹீரோன்னு நினைப்பு:
அதனால் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்த அவர் கடந்த வருடம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடர்களில் அடுத்தடுத்த தொடர் நாயகன் விருதுகளை வென்று கடந்த டிசம்பரில் வங்கதேச மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடித்து சமீபத்திய நியூசிலாந்து டி20 தொடரில் சதமும் ஒருநாள் தொடரில் இரட்டை சதமும் விளாசி சாதனை படைத்தார். அதே போல சமீபத்திய ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலும் சதமடித்து இந்த ஐபிஎல் தொடரில் 3 சதங்களை விளாசி அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தும் அவர் சச்சின், விராட் கோலி வரிசையில் அடுத்த சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுகிறார்.

மறுபுறம் அதே 2019இல் அறிமுகமான முதல் டெஸ்டிலேயே சதமடித்து லாரா, சச்சின், சேவாக் ஆகியோர் கலந்த கலவை என அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பாராட்டைப் பெற்ற பிரிதிவி ஷா நாளடைவில் அதை தக்க முடியாத அளவுக்கு சுமாராக செயல்பட்டதால் கழற்றி விடப்பட்டார். மேலும் தேவையான வாய்ப்புகளைப் பெற்றும் அசத்தாத அவர் தவறான மருந்தை உட்கொண்டதால் தடை பெற்றது, சமீபத்தில் ரசிகர்களுடன் இரவில் சண்டை போட்டது என தேவையற்ற சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் திறமை இருந்தும் ஹீரோ என்று நினைப்பதாலேயே பிரிதிவி ஷா தடுமாறுவதாக முன்னாள் வீரர் மற்றும் சுப்மன் கில் இளம் வயது பயிற்சியாளர் கர்சன் கவ்ரி அதிரடியாக பேசியுள்ளார். மறுபுறம் 11 வயதிலேயே தம்மிடம் பயிற்சி பெற்ற கில் பொறுமை மற்றும் திறமையால் பெரிய அளவில் வந்துள்ளதாக பாராட்டும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

Karsan Ghavri

“2018 அண்டர்-19 உலக கோப்பை வென்ற ஒரே இந்திய அணியில் அவர்கள் இருந்தார்கள் அல்லவா? இருப்பினும் இன்று பிரதிவி ஷா மற்றும் கில் ஆகியோர் எங்கே இருக்கின்றனர்? இருவருமே தற்போது வெவ்வேறான வகைகளில் உள்ளனர். அதில் ஷா தம்மை யாராலும் தொட முடியாது ஸ்டாராக நினைத்துக் நினைக்கிறார். ஆனால் நீங்கள் டி20, 50 ஓவர், டெஸ்ட் அல்லது ரஞ்சி கோப்பை மட்டுமின்றி சர்வதேச அளவில் விளையாடும் போதிலும் அவுட்டாவதற்கு ஒரு பந்து போதும் என்பதை உணர வேண்டும்”

இதையும் படிங்க:CSK vs GT : இன்றைய ஃபைனலில் தல தோனி படைக்க உள்ள சரித்திர ஐபிஎல் சாதனை – கோப்பையுடன் விடை பெறுவாரா?

“உங்களிடம் நன்னடத்தை மற்றும் பொறுமை வேண்டும். தொடர்ந்து உங்களுக்கு நீங்களே உழைக்க வேண்டும். குறிப்பாக ஃக்ரீஸை நீங்கள் உங்களுடையதாக மாற்றினால் ரன்கள் தாமாக வரும். அந்த இருவருமே தற்போது ஒரே வயதில் இருப்பதால் எதையும் இழக்கவில்லை. கில் தம்முடைய திறமையில் உழைத்தார். ஆனால் ஷா அதை செய்யவில்லை. இருப்பினும் இப்போதும் வெற்றி பெற அவர் கடினமாக உழைக்க வேண்டும். இல்லையெனில் இவ்வளவு திறமை இருந்தும் எந்த பயனுமில்லை”என்று கூறினார்.

Advertisement