
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 14ஆம் தேதி லக்னோவில் 30வது போட்டி இரவு 7.30 மணிக்கு துவங்கியது. அந்தப் போட்டியில் லக்னோ அணிக்கு எதிராக டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. இந்த வருடம் முதல் போட்டியில் வென்ற சென்னை அதற்கடுத்த 5 போட்டிகளில் வரலாற்றிலேயே முதல் முறையாக தொடர்ந்து தோல்வியை சந்தித்தது.
அதனால் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் தவிக்கும் அந்த அணி வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் தோனி தங்களது அணியில் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் நீக்கப்படுவதாக அறிவித்தார். 2015க்குப்பின் 10 வருடங்கள் கழித்து அஸ்வின் இம்முறை சிஎஸ்கே அணிக்காக 9.70 கோடிக்கு விளையாட வாங்கப்பட்டார்.
ஆனால் இதுவரை தமது சொந்த ஊரான சேப்பாக்கம் மைதானத்தில் கூட அவர் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் மோசமாக பௌலிங் செய்தார். அதனால் அவரை நீக்கியுள்ள தோனி இங்கிலாந்தின் ஆல் ரவுண்டர் ஜெமி ஓவர்டன் சேர்க்கப்படுவதாக கூறினார். மேலும் டேவோன் கான்வே அதிரடியாக விளையாடுவதற்கு தடுமாறுகிறார்.
அதனால் அவரையும் அணியிலிருந்து நீக்கிய தோனி இளம் வீரர் சாய்க் ரசித் விளையாடுவதாக அறிவித்தார். மேலும் லக்னோ மைதானத்தில் சிஎஸ்கே அணிக்கு ஆதரவு தரும் அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “நாங்கள் செல்லும் இடமெல்லாம் ஆதரவு பெறுவதற்காக ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறோம். அந்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி”
“நாங்கள் முதலில் பவுலிங் செய்ய விரும்புகிறோம். ஏனெனில் இங்கே இரவு நேரத்தில் பனி வருவதற்கு வாய்ப்புள்ளது. பிட்ச் 2வது இன்னிங்ஸில் நன்றாக மாறலாம். நாங்கள் எங்களுடைய பேட்டிங் துறையில் தொடர்ச்சியாக அசத்தவில்லை. பவுலிங் துறையில் எங்களிடம் வலுவான பின்னணி இருக்கிறது. எனவே வெற்றிக்கு நாங்கள் நேர்மறையான மனநிலையுடன் விளையாடுவது முக்கியம்”
இதையும் படிங்க: ஆயுஷ் மாத்ரே வேணாம்.. ருதுராஜுக்கு பதிலாக அந்த அதிரடி வீரரை கொண்டு வாங்க – ஆகாஷ் சோப்ரா கருத்து
“குறிப்பாக பெரிய ஷாட்டுகளை அடிக்க வேண்டும். இவை அனைத்தும் நேரத்தைப் பற்றியது. நாங்கள் சில மாற்றங்களை செய்துள்ளோம். ஓவர்டன், ரசீத் ஆகியோர் அஸ்வின் மற்றும் கான்வே ஆகியோருக்கு பதிலாக அணிக்குள் வருகின்றனர்” என்று கூறினார். அவரை டாஸ் வீசும் நிகழ்வு முடிந்ததும் லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.