GT vs CSK : நல்ல தொடக்கத்தை பெற்றும் சொதப்பிய சிஎஸ்கே – குஜராத் மாஸ் பவுலிங், ஃபைனல் உறுதியா?

- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றின் முடிவில் நடப்பு சாம்பியன் குஜராத், சென்னை, லக்னோ மற்றும் மும்பை ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. அதைத்தொடர்ந்து நேரடியாக ஃபைனலில் விளையாட போகும் அணியை தீர்மானிக்கும் குவாலிஃபயர் 1 பிளே ஆப் போட்டி மே 23ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருக்கும் சேப்பாக்கத்தில் இரவு 7.30 மணிக்கு துவங்கியது. அதில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த நடப்பு சாம்பியன் குஜராத் 2வது இடம் பிடித்த முன்னாள் சாம்பியன் சென்னையை எதிர்கொண்டது.

அந்த முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் தங்களுக்கு மிகவும் பிடித்த சேஸிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய சென்னைக்கு பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி ருதுராஜ் கைக்வாட் – டெவோன் கான்வே ஆகியோர் நிதானமாகவும் அதிரடியாகவும் ரன்களை சேர்த்தனர். குறிப்பாக ஆரம்பத்திலேயே கேட்ச் கொடுத்தும் நோபால் காரணமாக தப்பித்த ருதுராஜ் நிதானம் கலந்த அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்திய நிலையில் மறுபுறம் கான்வே சற்று தடுமாற்றமாகவே செயல்பட்டார்.

- Advertisement -

சொதப்பிய சிஎஸ்கே:
இருப்பினும் 11 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 87 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்சிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த அந்த ஜோடியில் ருதுராஜ் கைக்வாட் அரைசதம் படித்து 7 பவுண்டரி 1 சிக்சருடன் 60 (44) ரன்களில் அவுட்டானார். ஆனால் அப்போது வந்த நம்பிக்கை நட்சத்திரம் சிவம் துபே அதிரடியாக விளையாட முயற்சித்து 1 (3) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுக்க அடுத்து வந்த ரகானேவும் தடுமாற்றமாக செயல்பட்டு அதிரடி காட்டும் எண்ணத்துடன் 17 (10) ரன்களில் ஆட்டமிழந்தார்.

போதாகுறைக்கு மறுபுறம் கடைசி வரை தடுமாறிய கான்வே பவுண்டரியுடன் 40 (33) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்ததால் 200 ரன்கள் எடுக்கும் வாய்ப்பை சென்னை நழுவி விட்டது. அந்த இக்கட்டான சூழ்நிலையில் அதிரடி காட்ட வேண்டிய ரவீந்திர ஜடேஜா மீண்டும் தடுமாற்றமாக செயல்பட்ட நிலையில் மறுபுறம் 1 பவுண்டரி 1 சிக்சரை பறக்க விட்ட ராயுடு 17 (9) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். போதாக்குறைக்கு அடுத்து வந்த கேப்டன் எம்எஸ் தோனியும் அதிரடியாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் 1 (2) ரன்னில் அவுட்டானதால் சென்னை ரசிகர்கள் சோகமடைந்தனர்.

- Advertisement -

இறுதியில் மொயின் அலி 1 சிக்சருடன் 9* (4) ரன்களும் ரவீந்திர ஜடேஜா 2 பவுண்டரியுடன் 22 (16) ரன்கள் எடுத்த போதிலும் 20 ஓவர்களில் சென்னை 172/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. குஜராத் சார்பில் அதிகபட்சமாக மோகித் சர்மா மற்றும் முகமது ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். முன்னதாக ப்ளே ஆப் சுற்றுக்கு வந்துள்ள 4 அணிகளில் குஜராத் மட்டுமே ஆரம்பம் முதலே தடுமாறாமல் அதிரடியாக செயல்பட்டு தொடர்ந்து புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து முதல் அணியாக தகுதி பெற்றது.

குறிப்பாக முகமது ஷமி மற்றும் ரசித் கான் ஆகியோர் தலா 24 விக்கெட்களை எடுத்து ஊதா தொப்பியை பகிர்ந்து கொண்டுள்ளனர். அந்தளவுக்கு பந்து வீச்சில் ஆரம்பம் முதலில் மிரட்டி வரும் அந்த அணி இந்த முக்கிய போட்டியிலும் 87 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்சிப் அமைத்து நல்ல தொடக்கத்தை பெற்ற சென்னையை அதன் பின் அப்படியே பெட்டி பாம்பாக அடக்கி 200 ரன்களை தொடாமல் கட்டுப்படுத்தியது.

இதையும் படிங்க: Qualifier 1 : புனே, மும்பை, அகமதாபாத், சென்னை எங்க போட்டாலும் அடிப்பேன். குஜராத் அணிக்கெதிராக -ருதுராஜ் அசத்தல்

அத்துடன் பொதுவாக சுப்மன் கில் முதல் ஹர்திக் பாண்டியா, மில்லர், திவாடியா மட்டுமல்லாமல் ரசித் கான் உட்பட அந்த அணியில் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் அதிரடியாக செயல்படுவதால் குஜராத் என்றாலே சேசிங் செய்வதற்கு பெயர் போன அணியாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த இலக்கையும் எளிதாக துரத்தும் என்று எதிர்பார்க்கப்படும் அந்த அணி கடந்த வருடம் குவாலிபயர் 1 போட்டியில் ராஜஸ்தானை எளிதாக தோற்கடித்து நேரடியாக ஃபைனல் சென்றது போல் இம்முறை சென்னையை வீழ்த்தி ஃபைனலுக்கு செல்ல அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement