
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுடைய 9வது போட்டியில் ஹைதராபாத்திடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அதனால் சேப்பாக்கத்தில் ஹைதராபாத்துக்கு எதிராக சென்னை முதல் முறையாக தோல்வியை சந்தித்தது. மேலும் 7வது தோல்வியை பெற்ற சென்னை புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து 10வது இடத்தில் நீடிக்கிறது. இங்கிருந்து கடைசி 5 போட்டிகளில் வென்றாலும் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல 99% வாய்ப்பில்லை.
5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக ஜொலிக்கும் சென்னை இந்த வருடம் மங்கலான செயல்பாடுகளை வெளிப்படுத்துவது சிஎஸ்கே ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் 43வது வயதிலும் தோனி விக்கெட் கீப்பராக கேப்டனாக சிஎஸ்கே வெற்றிக்கு போராடுவதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ஆனால் மற்ற வீரர்கள் அவருக்கு கை கொடுக்கவில்லை என்றும் ரெய்னா ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் தோனி விரும்பும் வீரர்களை சிஎஸ்கே நிர்வாகம் ஏலத்தில் வாங்குவதில்லை என்றும் ரெய்னா தெரிவித்துள்ளார். எனவே அது பற்றி தோனி மீட்டிங் போட்டு இயக்குனர் காசி விஸ்வநாதனிடம் பேசி மாற்றத்தை நிகழ்த்த உள்ளதாகவும் ரெய்னா கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பலரும் ஏலத்தில் சிஎஸ்கே அணியை முழுமையாக தோனி வாங்குவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்”
“வீரர்களை வாங்கலாமா? வேண்டாமா? என்பது பற்றி தோனிக்கு அழைப்பு வரலாம். ஆனால் அவர் அதில் ஈடுபடுவதில்லை. தோனி இப்படிப்பட்ட அணியை வாங்கியிருப்பாரா? என்று நீங்களே கற்பனை செய்து பார்த்துக்கொள்ளலாம். அன்கேப்ட் வீரராக, 43 வயது கேப்டனாக கடினமாக உழைக்கும் தோனி இப்போதும் தனது சிறந்த முயற்சிகளைக் கொடுக்கிறார். 43 வயதில் கேப்டன்ஷிப் விக்கெட் கீப்பிங் செய்யும் அவர் மொத்த அணியையும் தோளில் சுமக்கிறார்”
“ஆனால் மற்ற 10 வீரர்கள் என்ன செய்கிறார்கள்? 18, 17, 12 கோடிகளுக்கு வாங்கப்பட்ட வீரர்கள் கேப்டனுக்கு தங்களது செயல்பாடுகளால் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. அதனால் இதற்கு முன்பு தோல்வியை சந்திக்காத அணிகளிடம் நாம் தோற்றுள்ளோம். இது தீர்க்கப்பட வேண்டும். இந்த வீரரை நம்பலாமா? இவர் மேட்ச் வின்னரா? என்று பார்க்க வேண்டும். சில மூத்த வீரர்களும் நீண்ட காலமாக விளையாடி வருகிறார்கள்”
இதையும் படிங்க: 201 ரன்ஸ்.. கெய்ல் – ராகுலை முந்தி சாதனை படைத்த பஞ்சாப் ஜோடி.. கம்பேக் கொடுத்த கொல்கத்தா வெல்லுமா?
“அவர்கள் இருந்தும் முடிவு என்ன? அதே தவறுகளை செய்து நீங்கள் மீண்டும் தோற்கிறீர்கள். தற்போது தோனி தனது அருகில் யாரையும் விடாமல் தனியாக உட்கார்ந்து யோசிப்பார். சிஎஸ்கே அணி வீரர்களை ஏலத்தில் சரியாக வாங்கவில்லை என்பது அவருக்குத் தெரியும். இது போன்ற அணியை அவர் அனுமதித்திருக்க மாட்டார். டாஸ் வீசிய பின்பும், தோல்வியை சந்தித்த பின்பும் தோனி நடந்து சென்ற விதம் எனக்குத் தெரியும். தோனியும் விஸ்வநாதனும் அங்கே நின்றனர். இன்று மீட்டிங் நடக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது” எனக் கூறினார்.