ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 26ஆம் தேதி கொல்கத்தாவில் 44வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் கொல்கத்தாவுக்கு எதிராக பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு துவக்க வீரர்கள் பிரியான்ஸ் ஆர்யா – பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் ஆரம்பத்திலேயே கொல்கத்தாவை அடித்து நொறுக்கத் துவங்கினார்கள்.
ஓவருக்கு 10 ரன்கள் மேல் வெளுத்து வாங்கிய இந்த ஜோடி பவர் பிளே கடந்து அசத்தலாக விளையாடியது. அந்த வகையில் மிரட்டலாக பேட்டிங் செய்த அந்த ஜோடி 12 ஓவர்களில் 120 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து பஞ்சாப்புக்கு அபாரமான துவக்கத்தைக் கொடுத்தது. அதில் பிரியான்ஸ் 8 பவுண்டரி 4 சிக்ஸருடன் 69 (35) ரன்னில் ரசல் வேகத்தில் அவுட்டானார்.
சாதனை ஜோடி:
அதன் வாயிலாக கொல்கத்தா அணிக்கு எதிராக ஒரு போட்டியில் அதிக பார்ட்னர்ஷிப் ரன்கள் குவித்த பஞ்சாப் ஓப்பனிங் ஜோடி என்ற சாதனையையும் அவர்கள் படைத்தார்கள். இதற்கு முன் இதே கொல்கத்தா மைதானத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக 2018ம் ஆண்டு பஞ்சாப் அணிக்காக க்ரிஷ் கெயில் – கேஎல் ராகுல் 116 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அடித்ததே முந்தைய சாதனை.
தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் மறுபுறம் பிரப்சிம்ரன் முதல் 32 பந்துகளில் 34 ரன்கள் மட்டுமே எடுத்து நிதானமாக விளையாடினார். ஆனால் ஆர்யா அவுட்டானதும் அடுத்த 17 பந்துகளில் சரவெடியாக விளையாடிய அவர் அரை சதத்தை கடந்து தலா 6 பௌண்டரி மற்றும் சிக்ஸருடன் 83 (49) ரன்கள் விளாசி அவுட்டானார். அடுத்து வந்த கிளன் மேக்ஸ்வெல் 7 (8) ரன்னில் வருண் சக்கரவர்த்தி சுழலில் சிக்கினார்.
கொல்கத்தா கம்பேக்:
இருப்பினும் 3வது இடத்தில் களமிறங்கியிருந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடினார். எதிர்ப்புறம் மார்க்கோ யான்சன் 3 (7) ரன்களில் ஜோஸ் இங்கிலிஷ் அதிரடியாக 11* (6) ரன்கள் குவித்தார். இறுதியில் ஸ்ரேயாஸ் 25* (16) ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் பஞ்சாப் 201/4 ரன்கள் எடுத்தது.
இதையும் படிங்க: இதை மட்டும் பொறுத்துக்கவே முடியாது.. பாகிஸ்தானுடன் இனி எப்போதுமே கிரிக்கெட் வேணாம் – குங்குலி கருத்து
ஒரு கட்டத்தில் 220 – 230 ரன்கள் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணியை ஓரளவு மடக்கிய கொல்கத்தாவுக்கு அதிகபட்சமாக வைபவ் அரோரோ 2 விக்கெட்டுகளை எடுத்தார். குறிப்பாக கடைசி 6 ஓவரில் மட்டும் கொல்கத்தா 43 ரன்கள் மட்டுமே கொடுத்து நல்ல கம்பேக் கொடுத்தது. இதைத்தொடர்ந்து 202 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா விளையாடுகிறது.



