
இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26 முதல் மே 29 வரை எதிர்பாராத த்ரில்லர் திருப்பங்கள் நிறைந்த போட்டிகளுடன் ரசிகர்களை மகிழ்வித்து நிறைவுற்றது. இம்முறை அதிக கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணிகளாக சாதனை படைத்த மும்பையும் சென்னையும் வரலாற்றிலேயே முதல் முறையாக 10 தோல்விகளை சந்தித்து கடைசி 2 இடங்களைப் பிடித்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது.
குறிப்பாக நடப்புச் சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 2020க்குப்பின் வரலாற்றில் 2-வது முறையாக நாக்-அவுட் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் பரிதாபமாக வெளியேறியது. அதற்கு முக்கிய காரணம் அந்த அணிக்கு 4 கோப்பைகளை வென்று கொடுத்து வெற்றிகரமான 2-வது ஐபிஎல் கேப்டனாக சாதனை படைத்துள்ள எம்எஸ் தோனி 40 வயதை கடந்து விட்டதால் காலம் காலமாக வகித்து வந்த கேப்டன்ஷிப் பொறுப்பை தொடர் துவங்க ஒருநாள் முன்பாக நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்தார்.
சொதப்பிய ஜடேஜா:
மறுபுறம் உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவமில்லாத ஜடேஜா தலைமையில் வரலாற்றிலேயே முதல் முறையாக 4 தொடர் தோல்விகளை சந்தித்த சென்னையின் பிளே ஆப் சுற்று வாய்ப்பு ஆரம்பத்திலேயே பறிபோனது. அதைவிட அட்டகாசமான ஆல்-ரவுண்டராக செயல்பட்டு வந்த ரவீந்திர ஜடேஜா அனுபவமில்லாத கேப்டன்ஷிப் அழுத்தத்தால் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் மொத்தமாக சொதப்பியதால் அந்த பொறுப்பே வேண்டாமென்று பாதியிலேயே தோனியிடம் மீண்டும் கொடுத்துவிட்டார்.
முடியவில்லை என்று தெரிந்ததும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் கேப்டன்ஷிப் பொறுப்பை திருப்பிக் கொடுத்த முடிவு பாராட்டுக்களை பெற்ற நிலையில் பெங்களூருவுக்கு எதிரான அடுத்த போட்டியிலேயே காயமடைந்த ஜடேஜா பாதியிலேயே மொத்தமாக விலகினார். அந்த நிலைமையில் சமூக வலைதளங்களில் அதுவரை ஜடேஜாவை பின்பற்றி வந்த சென்னை நிர்வாகம் அவரை பின்பற்றுவதை நிறுத்திக்கொண்டது.
அதனால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் 2021இல் சுமாராக செயல்பட்ட சுரேஷ் ரெய்னாவை இதேபோல் காயம் என்ற பெயரில் முதலில் வெளியேற்றி பின்னர் மொத்தமாக கழற்றி விட்டதைப்போல் ஜடேஜாவிடம் சென்னை நிர்வாகம் நடந்துகொள்வதாக சமூக வலைதளங்களில் புயலை கிளப்பினார்கள். இருப்பினும் அதை மறுத்த சென்னை நிர்வாக இயக்குனர் காசி விஸ்வநாதன் ஜடேஜாவுக்கும் தங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை அடுத்த வருடம் வழக்கம்போல விளையாடுவார் என்று தெளிவுபடுத்தினார்.
அச்சத்தில் ரசிகர்கள்:
அந்த நிலைமையில் ஜூலை 7-ஆம் தேதியன்று தோனியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்ட நிலையில் அதற்காக பல ஜாம்பவான்களும் தற்போதைய வீரர்களும் நட்சத்திரங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆனால் ரவீந்திர ஜடேஜா மட்டும் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் என எந்த பக்கத்திலும் தோனிக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. இருப்பினும் கடந்த வருடங்களில் ஒருமுறை கூட தவறாமல் தோனிக்கு வாழ்த்து தெரிவித்த அவர் இந்த வருடம் மட்டும் தெரிவிக்காதது ரசிகர்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
அதைவிட தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2021 மற்றும் 2022 ஐபிஎல் சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் சம்மந்தப்பட்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் ரவீந்திர ஜடேஜா தற்போது அதிரடியாக நீக்கியுள்ளார். இதை அறிந்த ரசிகர்கள் சென்னைக்கும் தோனிக்கும் ஜடேஜாவுக்கும் இடையே சண்டை அதனால்தான் இவ்வாறு பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்காமல் சென்னை சம்பந்தமான பதிவுகளை நீக்கியுள்ளதாக தற்போது சமூக வலைதளங்களில் பேசி வருகிறார்கள்.
இருப்பினும் சமீபத்திய இங்கிலாந்து டெஸ்டில் சதமடித்த போதும் விரைவில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக துவங்கும் ஒருநாள் தொடருக்கு ஜடேஜா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கும் சென்னை அணி நிர்வாகம் வாழ்த்து தெரிவித்த பதிவுகளை மேற்கோள்காட்டும் சென்னை ரசிகர்கள் எங்களது அணியில் சண்டை எதுவுமில்லை தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று பதிலாக கூறுகின்றனர்.
நிர்வாகம் விளக்கம்:
இந்நிலையில் நேற்று முதல் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் இந்த நிகழ்வு உண்மையா என்பது பற்றி தற்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு சென்னை நிர்வாகம் கொடுத்துள்ள அதிகாரப்பூர்வ பதில் பின்வருமாறு. “அந்த முடிவு (இன்ஸ்டாகிராம் பதிவுகளை நீக்கியது) அவருடைய தன்னிச்சையான சொந்த முடிவாகும். வெளிப்புறங்களில் நடைபெறும் இதுபோன்ற தருணங்கள் பற்றி எங்களுக்கு தெரியாது. அனைத்தும் சரியாகவே உள்ளது. எதுவும் தவறாக நடைபெறவில்லை” என்று கூறியுள்ளது.
இதையும் படிங்க : சுமாரான பார்மில் இருந்துகொண்டு இதெல்லாம் தேவையா? – சீனியர் வீரர்களுக்கு முன்னாள் வீரர் நியாயமான கேள்வி
அதாவது இன்ஸ்டாகிராம் பக்க பதிவுகள் சம்பந்தமாக உலாவரும் செய்திகள் அனைத்தும் வதந்தி எனக்கூறும் சென்னை நிர்வாகம் அந்த செய்தியை ரசிகர்கள் கூறித்தான் தங்களுக்கே தெரியும் என்று தெரிவிக்கிறது. மேலும் தங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ள சென்னை நிர்வாகம் அடுத்த வருடம் ஜடேஜா விளையாடுவார் என்று மீண்டும் உறுதியளித்துள்ளது.