சுமாரான பார்மில் இருந்துகொண்டு இதெல்லாம் தேவையா? – சீனியர் வீரர்களுக்கு முன்னாள் வீரர் நியாயமான கேள்வி

IND Team
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. இந்த தொடருக்கு திரும்பியுள்ள கேப்டன் ரோகித் சர்மா முதல் போட்டியிலேயே அட்டகாசமான வெற்றியைப் பெற்றுக் கொடுத்து சமீபத்திய டெஸ்ட் போட்டியில் வரலாற்று தோல்வியை பரிசளித்த இங்கிலாந்துக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். மேலும் டெஸ்ட் போட்டியில் பங்கேற்றதால் முதல் போட்டியில் பங்கேற்காத விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஜூலை 9இல் நடைபெறும் 2-வது போட்டியில் இந்திய அணியுடன் இணைகிறார்கள்.

Hardik pandya IND vs ENG

- Advertisement -

வரும் ஜூலை 17-ஆம் தேதியுடன் நிறைவுக்கு வரும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு வெஸ்ட் இண்டீசுக்கு செல்லும் இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. அதில் முதலாவதாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா போன்ற முக்கிய வீரர்கள் மீண்டும் ஓய்வெடுப்பதால் மற்றொரு நட்சத்திரம் ஷிகர் தவான் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

எத்தனை ஓய்வு:
இதையடுத்து கேஎல் ராகுல், விராட் கோலி, ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரை தொடர்ந்து இந்த 2022 ஜூலை வரையிலான 7 மாதத்தில் இந்தியாவை வழிநடத்தும் 7-வது கேப்டனாக ஷிகர் தவான் செயல்பட உள்ளது அனைவரையும் அதிருப்தியடைய வைத்துள்ளது. ஏனெனில் இப்படி மாதத்துக்கு ஒரு கேப்டன்கள் மாறினால் ஒற்றை தலைமையில் அனைத்து வீரர்களும் இணைந்து இந்தியாவால் உலக கோப்பையை வெல்லும் அளவுக்கு செட்டிலாக முடியாது. அதுபோக ஐபிஎல் 2022 தொடரில் பங்கேற்ற விட்டு தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் ஓய்வெடுத்த இவர்கள் மீண்டும் ஓய்வெடுக்கும் அளவுக்கு அப்படி ஒன்றும் அதிகப்படியான போட்டிகளில் விளையாடவில்லை என்பது தான் ரசிகர்களை கடுப்பாக வைக்கிறது.

rohith

இதில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் கடந்த சில வருடங்களாகவே சுமாரான பார்மில் திண்டாடி வருகின்றனர். குறிப்பாக 3 வருடங்களாக சதமடிக்க முடியாமல் திணறும் விராட் கோலியை 2 – 3 மாதங்கள் பிரேக் எடுத்துவிட்டு புத்துணர்ச்சியுடன் திரும்புமாறு நிறைய முன்னாள் வீரர்கள் கூறுகிறார்கள். ஆனால் அதை பின்பற்றாத அவர் இப்படி இடையிடையே பிரேக் எடுத்து இந்திய அணி செட்டிலாவதை சீர்குலைக்கும் வகையில் செயல்படுகிறார். அதேபோல் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா ஒன்று காயம் அல்லது ஓய்வு என அடிக்கடி இந்திய அணியை விட்டு வெளியேறுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

- Advertisement -

ஆகாஷ் சோப்ரா கேள்வி:
இந்நிலையில் ஏற்கனவே சுமாரான பார்மில் இருக்கும் ரோகித் சர்மா, விராட் கோலி போன்றவர்களுக்கு எவ்வளவு ஓய்வுதான் தேவை என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார். இது பற்றி அவர் தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “முதலில் இந்த ஓய்வுகள் எதற்கு? உங்களுக்கு எவ்வளவு ஓய்வு வேண்டும்? முன்பெல்லாம் ஒரு வீரர் சுமாரான பார்மில் இருந்தால் அவரை அணியில் இருந்து நீக்கி உள்ளூர் கிரிக்கெட்டில் ரன்களை எடுத்தால் மீண்டும் சேர்ப்பார்கள். ஆனால் தற்போதெல்லாம் சிலர் சுமாரான பார்மில் இருந்தால் உடனடியாக அவர்களுக்கு ஓய்வளிக்கப்படுகிறது”

chopra

“நீங்கள் இதைப்பற்றி கவலைப்பட வில்லையா? என்னைப் பொருத்தவரை ஒருவர் சுமாரான பார்மில் இருந்தால் தொடர்ச்சியாக முடிந்த அளவுக்கு அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டும். 2020இல் கட்டுப்பாட்டு வளையத்தில் இருந்தபோது கிட்டத்தட்ட 6 மாதங்கள் எந்த போட்டியிலும் யாரும் விளையாடவில்லை. 2021 சீசனிலும் ஐபிஎல் விளையாடிவிட்டு பின்னர் 3 மாதங்கள் கழித்துதான் 2-வது பகுதியில் விளையாடினீர்கள். எனவே 2 – 3 வருடங்களில் ஏற்கனவே 10 மாதங்கள் ஓய்வெடுத்து விட்டீர்கள். இதைவிட வேறு என்ன ஓய்வு உங்களுக்கு தேவைப்படுகிறது” என்று கூறினார்.

- Advertisement -

சுமாரான பார்மில் இருக்கும் இவர்களின் இதுபோன்ற செயல்பாடுகள் சிறப்பாக செயல்படும் சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதையும் தடுக்கிறது. எடுத்துக்காட்டாக முதல் போட்டியில் விளையாடி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல முக்கிய காரணமாக இருந்த இளம் வீரர்கள் 2-வது போட்டியில் விராட் கோலி போன்றவர்கள் திரும்புவதாக கழற்றிவிடப்பட்ட உள்ளனர். இது பற்றி ஆகாஷ் சோப்ரா மேலும் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க : ஐபிஎல் விளையாட விளம்பரத்தில் நடிக்க நேரமிருக்கு நாட்டுக்காக நேரமில்லையா – விராட், ரோஹித்துக்கு முன்னாள் வீரர் கேள்வி

“பெரிய வீரர்கள் ஓய்வெடுக்கும் போது இஷான் கிசான், ருதுராஜ், தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் போன்ற இளம் வீரர்கள் வாய்ப்பு கிடைத்து நல்ல ரன்களை அடிக்கிறார்கள். அவர்களுக்கு பரிசாக பெரிய வீரர்கள் வருகிறார்கள் அதனால் உங்களை நீக்குகிறோம் என்று பதில் சொல்வது சரியா? அந்த அளவுக்கு அவர்கள் தவறு என்ன செய்தார்கள்” என்று கூறியுள்ளார்.

Advertisement