இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று அசத்தியது. இத்தொடருக்கு திரும்பியுள்ள ரோகித் சர்மா டெஸ்ட் போட்டியில் வரலாற்று தோல்வியை பரிசளித்த இங்கிலாந்துக்கு முதல் போட்டியிலேயே தக்க பதிலடி கொடுத்து இந்தியாவை தலைநிமிர வைத்துள்ளார். அத்துடன் ஜூலை 9-ஆம் தேதியன்று நடைபெறும் 2-வது போட்டியில் டெஸ்ட் போட்டியில் பங்கேற்றதால் முதல் போட்டியில் பங்கேற்காத விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் களமிறங்குகின்றனர்.

எனவே முழு பலத்துடன் கூடிய இந்தியா 2-வது போட்டியில் வென்று தொடரை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. இந்த டி20 தொடருக்குப்பின் நடைபெறும் ஒருநாள் தொடரை முடித்துக்கொண்டு வெஸ்ட் இண்டீசுக்கு பறக்கும் இந்தியா அங்கு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. அதில் முதலாவதாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா போன்ற முக்கிய வீரர்கள் ஓய்வு கேட்டுள்ளதால் மற்றொரு நட்சத்திரம் ஷிகர் தவான் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ரசிகர்கள் அதிருப்தி:
ஆனால் இந்த அறிவிப்பு பெரும்பாலான இந்திய ரசிகர்களையும் முன்னாள் வீரர்களையும் அதிருப்திடைய வைத்துள்ளது. ஏனெனில் ஏற்கனவே கேஎல் ராகுல், விராட் கோலி, ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா என வரலாற்றிலேயே முதல் முறையாக 6 வெவ்வேறு வீரர்கள் இந்தியாவை வழி நடத்திய நிலையில் இந்த 2022 கேலண்டர் வருடத்தின் ஜூலை வரையிலான 7 மாதத்தில் ஷிகர் தவான் 7-வது கேப்டனாக செயல்பட உள்ளார்.

அதைவிட ஐபிஎல் 2022 தொடருக்குப்பின் சொந்த மண்ணில் நடந்த தென்ஆப்பிரிக்க டி20 தொடரில் ஓய்வெடுத்த ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் வெறும் 7 போட்டியில் மட்டுமே விளையாடிய நிலையில் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வு கேட்டுள்ளனர். இதில் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா இந்த வருடம் ஏற்கனவே 2 – 3 தொடர்களில் காயம் மற்றும் ஓய்வு காரணமாக விடுப்பு எடுத்தார்.
அத்துடன் சமீபத்திய இங்கிலாந்து டெஸ்ட் போட்டியிலும் விளையாடாத அவர் வெறும் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் பங்கேற்று விட்டு மீண்டும் ஓய்வெடுக்கும் அளவுக்கு அப்படி என்ன அதிகப்படியான போட்டிகளில் விளையாடி விட்டாரா என்ற கேள்வி எழுந்து வருகிறது. இப்படி பொறுப்பற்ற முறையில் விடுப்பு எடுத்தால் எப்படி அவர் தலைமையில் தரமான வீரர்கள் செட்டாகி இந்தியாவால் உலக கோப்பையை வெல்ல முடியும் என்ற கவலையும் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

ஐபிஎல் – விளம்பரம்:
இதனால் கோபமடையும் சில ரசிகர்கள் இதேபோல் இவர்களால் ஐபிஎல் தொடரில் ஓய்வு எடுப்பார்களா என்ற கேள்வியும் எழுப்புகின்றனர். இந்நிலையில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற வீரர்களுக்கு ஐபிஎல் தொடரில் விளையாடவும் விளம்பரங்களில் நடிக்கவும் நேரம் உள்ளது ஆனால் இந்தியாவுக்காக விளையாட ஓய்வு தேவைப்படுகிறதா என்று முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் கர்சன் கவ்ரி கேள்வி எழுப்பியுள்ளார். இது பற்றிய சமீபத்திய ஒரு பேட்டியில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பேசியது பின்வருமாறு.
“ரோஹித் மற்றும் விராட்டுக்கு எவ்வளவு ஓய்வு தேவைப்படுகிறது. அந்த டெஸ்ட் போட்டியில் விராட் கோலி எவ்வளவு நேரம் பேட்டிங் செய்தார். இந்தியாவுக்காக விளையாடுவதே உங்களின் முதல் தேர்வாக இருக்க வேண்டும். ஐபிஎல் தொடரில் விளையாடும் போது மட்டுமே நீங்கள் விளம்பரங்களில் நடிக்க வேண்டும் இந்தியாவுக்காக விளையாடும்போது அல்ல. பணிச்சுமை என்ற பெயரில் அடிக்கடி நீங்கள் ஓய்வு கேட்கக்கூடாது. ரோஹித்தை எதற்காக இங்கிலாந்து அனுப்பினீர்கள்? டெஸ்ட் போட்டியில் விளையாடாத அவர் வெள்ளை பந்து கிரிக்கெட் மட்டும் விளையாடும் நிலையில் மற்றுமொரு ஓய்வு தேவைப்படுகிறதா? அவர் தேவையான ஓய்வு எடுத்து விட்டார்” என்று கூறினார்.

அதேபோல் கடந்த 3 வருடங்களாக சதமடிக்க முடியாமல் தவிக்கும் விராட் கோலி எத்தனை நாட்கள் பெயரை மட்டும் வைத்துக்கொண்டு இந்திய அணியில் விளையாட முடியும் என்றும் கர்சன் கவ்ரி கேள்வி எழுப்பியுள்ளார். இதுபற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “வீரர்கள் அவர்களது செயல்பாடுகளால் தேர்வு செய்யப்பட வேண்டும். விராட் கோலி இந்தியாவுக்கு பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்”
“ஆனால் அவர் ஃபார்மில் இல்லை என்றால் தாராளமாக நீக்கிவிட்டு நல்ல பார்மில் இருக்கும் வீரர்களை விளையாட வையுங்கள். விராட் கோலி பெரிய பெயர் என்றாலும் ரன்கள் வரவில்லையே? எத்தனை நாட்கள் பெயருக்காக மட்டுமே விளையாடுவீர்கள்? அவர் 27 சதத்துடன் நின்று விட்டார். ஆனால் அவரைவிட பின்தங்கியிருந்த ஜோ ரூட் தற்போது அவரையே முந்திவிட்டார்” என்று கூறினார்.



