CSK vs SRH : 139 ரன்களை துரத்த தடுமாறிய சென்னை – ஒரு ஓவரில் மொத்த சேசிங்கையும் டேவோன் கான்வே மாற்றியது எப்படி

- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 21ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு தமிழகத்தின் தலைநகர் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற 29வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதில் புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் தடுமாறும் ஹைதராபாத் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய நிலையில் டாஸ் வென்ற சென்னை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத்துக்கு அதிரடியாக விளையாட முயற்சித்த ஹரி ப்ரூக் 3 பவுண்டரியுடன் ஆகாஷ் சிங் வேகத்தில் 18 (13) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ராகுல் திரிபாதியுடன் ஜோடி சேர்ந்து அதிரடி காட்ட முயற்சித்த மற்றொரு தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 2 பவுண்டரி 1 சிக்சருடன் 34 (26) ரன்களில் அவுட்டானார். அடுத்த சில ஓவர்களிலேயே தடுமாற்றமாக செயல்பட்ட ராகுல் திரிபாதி 21 (21) ரன்களில் ரவீந்திர ஜடேஜாவின் சுழலில் அவுட்டாக அடுத்து வந்த கேப்டன் ஐடன் மார்க்ரமும் 12 (12) ரன்களில் தீக்சனா சுழலில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தார். அதனால் 90/4 என தடுமாறிய ஹைதராபாத்தை பொறுப்புடன் காப்பாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மயங் அகர்வாலும் 2 (4) ரன்களில் தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்கில் நடையை கட்டினார்.

- Advertisement -

மாற்றிய கான்வே:
இறுதியில் நிதானமாக விளையாட முயற்சித்த ஹென்றிச் க்ளாஸென் 17 (16) ரன்களும் மார்கோ யான்சென் 17* (22) ரன்களும் எடுத்த போதிலும் 20 ஓவர்கில் ஹைதராபாத் 134/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 4 ஓவரில் 22 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 135 ரன்களை துரத்திய சென்னைக்கு ருதுராஜ் கைக்வாட் – டேவோன் கான்வே ஆகியோர் பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக ரன்களை சேர்க்க முயற்சித்தனர்.

அதிலும் குறிப்பாக டேவோன் கான்வே ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய வேகத்தில் மார்கோ யான்சென் வீசிய 6வது ஓவரில் 4, 4, 6, 4, 4 என அடுத்தடுத்த பவுண்டரிகளை தெறிக்க விட்டு மொத்தம் 22 ரன்களை விளாசி மிரட்டலான தொடக்கத்தை கொடுத்தார். அதே வேகத்தில் 11 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 87 ரன்கள் பார்ட்னர்சிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த இந்த ஜோடியில் 2 பவுண்டரியுடன் ருதுராஜ் கைக்வாட் 35 (30) எடுத்திருந்த போது டேவோன் கான்வே நேராக டிரைவ் அடிக்க முயற்சித்தார்.

- Advertisement -

ஆனால் அந்தப் பந்து உம்ரான் மாலிக் கைகளை தொட்டு ஸ்டம்ப்புகளில் பட்டதால் ருதுராஜ் ஏமாற்றத்துடன் ரன் அவுட்டாகி சென்றார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அதிரடி காட்டிய டேவோன் கான்வே அரை சதமடித்து வெற்றியை உறுதி செய்த நிலையில் அடுத்து களமிறங்கிய அஜிங்கிய ரகானே தடுமாற்றமாக செயல்பட்டு 9 (10) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ராயுடுவும் 9 (9) ரன்களில் அவுட்டானதால் லேசான பரபரப்பு ஏற்பட்டாலும் மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக செயல்பட்ட டேவோன் கான்வே 12 பவுண்டரி 1 சிக்சருடன் 77* (57) ரன்கள் குவித்து வெற்றி பெற வைத்தார்.

கூடவே மொயின் அலி 6* (6) எடுத்ததால் 18.4 ஓவரிலேயே 138/3 ரன்கள் எடுத்த சென்னை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. மறுபுறம் பேட்டிங்கில் சொதப்பி பந்து வீச்சில் போராடியும் வெற்றி காண முடியாத ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக மயங் மார்க்கண்டே 2 விக்கெட்டுகள் எடுத்தார். முன்னாதாக இப்போட்டி நடைபெற்ற சேப்பாக்கம் மைதானம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்த நிலையில் மிடில் ஓவர்களில் துல்லியமாக செயல்பட்ட சென்னை ஸ்பின்னர்கள் ஒரு பவுண்டரி கூட கொடுக்காமல் முக்கிய பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கியதால் ஹைதராபாத் பெரிய ரன்களை எடுக்க தவறியது.

இதையும் படிங்க: IPL 2023 : சென்னையில் இருக்கா? பிளே ஆஃப் மற்றும் ஃபைனல் நடைபெறும் மைதானங்களை வெளியிட்ட பிசிசிஐ – அட்டவணை இதோ

அதே போல நேரம் செல்ல செல்ல பிட்ச் மேலும் மெதுவாக மாறியதால் 135 ரன்களை சேசிங் செய்ய ருதுராஜ் தடுமாறிய போதிலும் டேவோன் கான்வே அதிரடியாக விளையாடி வெற்றியை உறுதி செய்தார். குறிப்பாக முக்கிய நேரத்தில் ரகானே, ராயுடு போன்ற அனுபவமிக்க வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகியும் மார்கோ யான்சென் வீசிய 6வது ஓவரில் 22 ரன்களை அடித்த அவர் 135.09 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி தொடர்ந்து ரன் ரேட்டை கட்டுக்குள் வைத்து சென்னைக்கு 4வது வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார்.

Advertisement