IPL 2023 : சென்னையில் இருக்கா? பிளே ஆஃப் மற்றும் ஃபைனல் நடைபெறும் மைதானங்களை வெளியிட்ட பிசிசிஐ – அட்டவணை இதோ

IPL-2023
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 31ஆம் தேதி அகமதாபாத் நகரில் கோலாகலமாக துவங்கியது. வரலாற்றில் 16வது முறையாக நடைபெறும் இத்தொடரில் கோப்பையை வெல்வதற்காக 10 அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. குறிப்பாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போகும் அணிகளை தீர்மானிக்கும் லீக் சுற்று போட்டிகள் தற்போது இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் இதுவரை நடைபெற்ற 28 போட்டிகளின் முடிவில் ராஜஸ்தான் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் தலா 4 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் ஜொலித்து வருகின்றன.

அதே போல் சென்னை, குஜராத், ராஜஸ்தான், மும்பை, பஞ்சாப் ஆகிய அணிகளும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்காக கடுமையாக போட்டி போட்டு வருகின்றன. இருப்பினும் டெல்லி ஆரம்பத்திலேயே 5 தொடர் தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடும் நிலையில் ஹைதராபாத் அணியும் 9வது இடத்தில் தடுமாற்றமாக செயல்பட்டு வருகிறது. அப்படி பரபரப்பாக நடைபெற்று வரும் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று வரும் மே 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஏற்கனவே இந்த லீக் சுற்று போட்டிகளுக்கு மட்டுமே அட்டவணையும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வெற்றியாளரை தீர்மானிக்கும் பிளே ஆஃப் சுற்று போட்டிகளுக்கான மைதானங்கள் மற்றும் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

- Advertisement -

சென்னைக்கு அதிர்ஷ்டம்:
அதன் படி தமிழகத்தின் தலைநகரான சென்னை சேப்பாத்தில் இருக்கும் எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் இந்த வருடத்தின் பிளே சுற்று போட்டிகளின் முதல் 2 போட்டிகள் நடைபெற உள்ளது. அதாவது புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் மோதும் குவாலிபயர் 1 போட்டி வரும் மே 23ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. அதே போல் புள்ளி பட்டியலில் 3, 4 ஆகிய இடங்களை பிடிக்கும் அணிகள் மோதும் எலிமினேட்டர் போட்டியும் மே 24ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

அதை தொடர்ந்து குவாலிபயர் 1 போட்டியில் தோற்கும் அணியும் எலிமினேட்டர் போட்டியில் வெல்லும் அணியும் மோதும் குவாலிபயர் 2 போட்டி வரும் மே 26ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இருக்கும் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இறுதியில் குவாலிபயர் 1 மற்றும் 2 போட்டிகளில் வெல்லும் அணிகள் மோதும் ஐபிஎல் 2023 தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி வரும் மே 28ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு 1,32,000 ரசிகர்கள் அமரக்கூடிய உலகின் மிகப்பெரிய அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

- Advertisement -

இந்த அறிவிப்பின் படி பிளே ஆப் சுற்றின் முதலிரண்டு போட்டிகள் சேப்பாக்கத்தில் நடைபெறுவது தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. கடைசியாக 2019இல் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகள் தற்போது 4 வருடங்கள் கழித்து சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. அதற்கு முன்பாக 3 பெவிலியன்கள் மூடப்பட்டிருந்ததால் பிளே ஆஃப் சுற்றுப்போட்டிகளை நடத்தும் வாய்ப்பு இழந்த சேப்பாக்கம் மைதானம் லீக் சுற்று போட்டிகளை மட்டுமே நடத்தி வந்தது.

இருப்பினும் தற்போது அந்த 3 பெவிலியனும் புதிதாக கட்டப்பட்டு புதுப்பொலிவுடன் திறக்கப்பட்டுள்ளதால் நீண்ட வருடங்கள் கழித்து பிளே ஆஃப் போட்டிகளை நடத்தும் வாய்ப்பையும் சேப்பாக்கம் மைதானம் பெற்றுள்ளது. அந்த நிலையில் பொதுவாகவே சேப்பாக்கத்தை தன்னுடைய கோட்டையாக வைத்து செயல்பட்டு வரும் சென்னை அணி லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்டு புள்ளி பட்டியலில் டாப் 4 இடத்தைப் பிடித்தால் பிளே ஆஃப் சுற்று போட்டிகளை மீண்டும் தங்களுடைய சொந்த ஊரில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலை விளையாடும் அதிர்ஷ்டமான வாய்ப்பை பெற உள்ளது.

இதையும் படிங்க: வீடியோ : சுழலில் மேஜிக் நிகழ்த்திய ஜடேஜா, மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தல தோனி – ஹைதெராபாத்தை மடக்கிய சிஎஸ்கே

அந்த வாய்ப்பை பெறும் பட்சத்தில் நிச்சயமாக பிளே ஆப் சுற்றில் வென்று ஃபைனலுக்கு சென்னை தகுதி பெறுவதற்கு பிரகாசமான வாய்ப்பு உருவாகும் என்று சொல்லலாம் அதனால் இந்த வருடம் தோனி தலைமையில் சென்னை கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு அந்த அணி ரசிகர்களிடம் மேலும் அதிகரித்துள்ளது.

Advertisement