MI vs CSK : அந்நியனாக மாறி சாதனையுடன் மாஸ் காட்டிய ரகானே, 2018க்குப்பின் மும்பையை சிஎஸ்கே சிதைத்தது எப்படி

- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 8ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 12வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஐபிஎல் வரலாற்றின் பரம எதிரிகளாகவும் வெற்றிகரமான அணிகளாகவும் கருதப்படும் இவ்விரு அணிகளும் கடந்த சீசனில் புள்ளி பட்டியலில் கடைசி 2 இடங்களை பிடித்ததால் இம்முறை சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய நிலையில் டாஸ் வென்ற சென்னை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பைக்கு 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 21 (13) ரன்கள் குவித்து அதிரடியான தொடக்கத்தை கொடுக்க முயற்சித்த கேப்டன் ரோகித் சர்மா துஷார் தேஷ்பாண்டேவிடம் கிளீன் போல்ட்டானார்.

அவரை போலவே மறுபுறம் 5 பவுண்டரியுடன் அதிரடி காட்ட முயற்சித்த இசான் கிசானை 32 (21) ரன்களில் அவுட்டாக்கிய ரவிந்திர ஜடேஜா அடுத்து வந்த உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவையும் தோனியின் சிறப்பான ரிவியூ உதவியுடன் 1 (2) ரன்னில் காலி செய்தார். அடுத்த ஓவரிலேயே கேமரூன் கிரீன் 12 (11) அர்சத் கான் 2 (4) என முக்கிய வீரர்கள் சென்னையின் தரமான சுழலில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் 76/5 என மும்பை திணறியது.

- Advertisement -

அந்நியன் ரஹானே:
போதாகுறைக்கு இளம் வீரர்கள் திலக் வர்மாவும் 22 (18) ரன்களிலும் ட்ரிஸ்தன் ஸ்டப்ஸ் 5 (10) ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தனர். இருப்பினும் கடைசி நேரத்தில் டிம் டேவிட் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 31 (22) ரன்களும் ரித்திக் ஷாக்கின் 18* (13) ரன்களும் எடுத்ததால் ஓரளவு தப்பிய மும்பை 20 ஓவர்களில் 157/8 ரன்கள் எடுத்தது. சென்னை சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3 விக்கட்டுகளும் துஷார் டேஷ்பாண்டே மற்றும் மிட்சேல் சாட்னர் தலா 2 விக்கெட்களும் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 158 ரன்களை துரத்திய சென்னைக்கு பேரன்ஃடாப் வீசிய முதல் ஓவரிலேயே டேவோன் கான்வே டக் அவுட்டாகி ஏமாற்றினார்.

ஆனால் அடுத்ததாக சென்னைக்காக முதல் முறையாக களமிறங்கிய மும்பையை சேர்ந்த அனுபவ வீரர் அஜிங்கிய ரகானே யாருமே எதிர்பாராத வகையில் சரமாரியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். குறிப்பாக அர்சத் கான் வீசிய 4வது ஓவரில் 6, 4, 4, 4, 4, 1 என அடுத்தடுத்த பவுண்டரிகளுடன் 23 ரன்களை தெறிக்க விட்ட அவர் வெறும் 19 பந்துகளிலேயே அரை சதமடித்து இந்த சீசனில் அதிவேகமாக அரை சதமடித்த வீரர் என்ற ஜோஸ் பட்லர் – ஷார்துல் தாகூர் (தலா 20 பந்துகள்) சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்தார்.

- Advertisement -

அதே வேகத்தில் 2வது விக்கெட்டுக்கு ருதுராஜுடன் 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மிரட்டிய அவர் 7 பவுண்டரி 3 சிக்சருடன் 61 (27) ரன்கள் குவித்து போட்டியை தலைகீழாக மாற்றி ஆட்டமிழந்தார். ஏனெனில் அவரது அதிரடியான ஆட்டத்தால் ஆரம்பத்திலேயே ரன் ரேட் கட்டுக்குள் வந்து சென்னைக்கு மேற்கொண்டு வெற்றிக்கு 72 பந்துகளில் 76 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

அந்த நிலைமையில் மறுபுறம் சற்று தடுமாற்றமாக செயல்பட்ட ருத்ராஜுடன் ஜோடி சேர்ந்த சிவம் துபாய் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 28 (26) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் அம்பத்தி ராயுடு 2 பவுண்டரியுடன் 16* (15) ரன்களும் கடைசி வரை அவுட்டாகாமல் அசத்திய ருத்ராஜ் கைக்வாட் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 40* (36) ரன்கள் எடுத்ததால் 18.1 ஓவரிலேயே 159/3 ரன்கள் எடுத்த சென்னை 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: CSK vs MI : பென் ஸ்டோக்ஸ் சென்னை அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு காரணம் இதுதான் – தோனி சொன்ன பதில் இதோ

குறிப்பாக சமீப காலங்களாகவே மும்பையிடம் சரமாரியான தோல்விகளை சந்தித்து வரும் சென்னை 5 வருடங்கள் கழித்து முதல் முறையாக மும்பையை அதன் சொந்த ஊரான வான்கடே மைதானத்தில் சாய்த்துள்ளது. கடைசியாக கடந்த 2018ஆம் ஆண்டு வான்கடே மைதானத்தில் வென்றிருந்த சென்னை தற்போது மீண்டும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பையை தோற்கடித்து அசத்தியுள்ளது சென்னை ரசிகர்களை மகிழ்ச்சியடை வைத்துள்ளது. மறுபுறம் பேட்டிங்கில் சொதப்பிய மும்பை இந்த சீசனில் 2வது தோல்வியை பதிவு செய்து பின்னடைவை சந்தித்துள்ளது.

Advertisement