வீடியோ : மாஸ் ஃபினிஷிங் செய்த ஜடேஜா, குஜராத்தை அதன் கோட்டையில் வீழ்த்தி – சிஎஸ்கே வரலாறு படைத்தது எப்படி?

CSK vs GT Final
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 28ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இருப்பினும் அந்த போட்டி மழையால் மொத்தமாக நிறுத்தப்பட்ட நிலையில் ரிசர்வ் நாளான மே 29ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு மீண்டும் துவங்கியது. அதில் டாஸ் வென்ற சென்னை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய குஜராத்துக்கு ஆரம்பத்திலேயே தீபக் சஹார் விட்ட கேட்சை பயன்படுத்திய சுப்மன் கில் 67 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தார்.

இருப்பினும் உச்சகட்ட பார்மில் இருக்கும் அவர் 7 பவுண்டரியுடன் 39 (20) ரன்கள் எடுத்த போது ரவீந்திர ஜடேஜாவின் சுழலில் தோனியின் ஸ்டம்ப்பிங்கில் அவுட்டாகி சென்றார். அந்த நிலைமையில் வந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் ஆரம்பத்தில் மெதுவாக விளையாடினாலும் மறுபுறம் அசத்திய ரித்திமான் சஹா 2வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் பார்ட்னர்சிப் அமைத்து தன்னுடைய அனுபவத்தை காட்டி 5 பவுண்டரி 1 சிக்சருடன் 54 (39) ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் மறுபுறம் நேரம் செல்ல செல்ல மேலும் நங்கூரமாக செட்டிலாகி சென்னையை புரட்டி எடுத்த சுதர்சன் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் தமிழக ரசிகர்கள் மகிழ்ச்சியடையும் அளவுக்கு சென்னையை புரட்டி எடுத்த அவர் கடைசி ஓவரில் 8 பவுண்டரி 6 சிக்சருடன் 96 (47) ரன்களில் அவுட்டாக கேப்டன் பாண்டியா தனது பங்கிற்கு 2 பவுண்டரியுடன் 21* (12) ரன்கள் எடுத்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 20 ஓவர்களில் குஜராத் 214/4 ரன்கள் எடுக்க சுமாராக செயல்பட்ட சென்னை சார்பில் அதிகபட்சமாக பதிரனா 4 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத் தொடர்ந்து 215 ரன்களை சென்னை துரத்த துவங்கிய போது மீண்டும் ஜோராக வந்த மழை போட்டியை நிறுத்தியது.

சுமார் 2 மணி நேரங்கள் தாமதமாக இரவு 12.10 மணிக்கு மீண்டும் துவங்கிய அந்த போட்டியில் சென்னை வெற்றி பெற 15 ஓவரில் 171 ரன்களை தேவை என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னைக்கு ருதுராஜ் கைக்வாட் – டேவோன் கான்வே ஆகிய ஓப்பனிங் ஜோடி 4 பவர் ஃபிளே ஓவர்களை சிறப்பாக பயன்படுத்தி அதிரடியாக செயல்பட்டு விரைவாக ரன்களை சேர்த்தனர். அதே வேகத்தில் 6.3 ஓவர்கள் வரை 74 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் நல்ல தொடக்கம் கொடுத்த அந்த ஜோடியில் ருதுராஜ் 26 (16) ரன்களில் அவுட்டாகி செல்ல மறுபுறம் அதிரடி காட்டிய கான்வேயும் 4 பவுண்டரி 2 சிக்ஸருடன் 47 (25) ரன்களில் அவுட்டானது பெரிய பின்னடைவாக அமைந்தது.

- Advertisement -

அந்த நிலைமையில் வந்த சிவம் துபே சற்று தடுமாற்றமாக செயல்பட்டதால் மறுபுறம் அதிரடியாக விளையாட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்ட ரகானே 2 பவுண்டரி 2 சிக்சருடன் அதிரடியாக 27 (13) ரன்கள் எடுத்து அவுட்டானார். அப்போது சிவம் துபே அதிரடியை துவங்கிய நிலையில் மோஹித் சர்மா வீசிய 13வது ஓவரில் 6, 4, 6 என அடுத்தடுத்த பவுண்டரிகளை பறக்க விட்ட ராயுடு தனது கடைசி ஐபிஎல் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் 19 (8) ரன்களை விளாசி அவுட்டானார். ஆனால் அடுத்து வந்த கேப்டன் தோனியும் கோல்டன் டக் அவுட்டானதால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

இறுதியில் ஜடேஜாவும் துபேவும் போராடியதால் மோகித் சர்மா வீசிய கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது. அதில் முதலிரண்டு பந்துகளில் சிவம் துபே 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் ஜடேஜாவும் 3வது பந்தில் சிங்கிள் மட்டுமே எடுத்தார். அத்துடன் 4வது பந்தில் துபேவும் எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்ட போட்டியில் 5வது பந்தில் மோகித் சர்மா வீசிய யார்கரை சிக்ஸராக பறக்கவிட்ட ஜடேஜா கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டபோது விக்கெட் கீப்பர் பின் திசையில் பவுண்டரி அடித்து கடைசி பந்தில் திரில் வெற்றி பெற வைத்தார்.

இதையும் படிங்க: வீடியோ : மாஸ் ஃபினிஷிங் செய்த ஜடேஜா, குஜராத்தை அதன் கோட்டையில் வீழ்த்தி – சிஎஸ்கே வரலாறு படைத்தது எப்படி?

அதனால் துபே 32* (21) ரன்களும் ஜடேஜா 15* (6) ரன்களும் எடுத்ததால் 15 ஓவரில் 171 ரன்கள் எடுத்த சென்னை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 5வது கோப்பையை முத்தமிட்டு ஐபிஎல் வரலாற்றின் வெற்றிகரமான என்ற தன்னுடைய பரம எதிரியான மும்பையின் ஆல் டைம் சாதனையை சமன் செய்தது. இப்போட்டியில் 215 ரன்கள் இருந்திருந்தால் சென்னை வெல்வது கடினமாக இருந்திருக்கும். இருப்பினும் மழை காரணமாக அந்த இலக்கு குறைக்கப்பட்டது ஈரப்பதமான பந்தில் சரியாகப் பந்து வீச குஜராத்துக்கு தடுமாற்றத்தை ஏற்படுத்தியது. அதே சமயம் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய சென்னை பேட்ஸ்மேன்கள் வெற்றியை உறுதி செய்தனர. அதனால் கடைசி வரை போராடிய குஜராத் மோகித் சர்மா 3 விக்கெட்டும் நூர் அகமது 2 விக்கெட் எடுத்தும் கடைசி பந்தில் சாம்பியன் பட்டத்தை இழந்தது.

Advertisement